பொது சிவில் சட்டத்தின்படி ‘லிவ்-இன்’ ஜோடியின் விபரம் அம்பலமாகும்: உத்தரகாண்ட் நிபுணர் குழு பகீர் அறிக்கை

புதுடெல்லி: உத்தரகாண்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களின் விபரங்கள், அவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும் என பொது சிவில் சட்ட நிபுணர் குழு தெரிவித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், உத்தரகாண்ட் சட்டப் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிமுகம் செய்தார். அதில், பல சட்டப்பிரிவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ‘லிவ்-இன்’ உறவு (ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல்) தொடர்பாக கடுமையான சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டது. லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கட்டாயம் 21 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இதற்கிடையே, பொது சிவில் சட்டம் தொடர்பாக விதிகளை வகுக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த நிபுணர் குழு, தயாரித்த அறிக்கையை உத்தரகாண்ட் அரசு வெளியிட்டுள்ளது. அதில், லிவ்-இன் உறவில் இருப்பவர்களின் விபரங்கள், அவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று நிபுணர் குழு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து பொது சிவில் சட்ட விதிகள் உருவாக்குதல் மற்றும் செயல்படுத்தும் குழு தலைவர் சத்ருகன் சிங் கூறுகையில், ‘திருமணத்தை பதிவு செய்பவர்கள், லிவ்-இன் உறவை பதிவு செய்பவர்கள் தரும் விபரங்கள் மற்றவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

அவர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் விபரங்களை வெளியிட மாட்டோம். 21 வயதுக்கு மேற்பட்டவர்களின் லிவ்-இன் உறவு தொடர்பான விவரங்கள் முற்றிலும் பாதுகாக்கப்படும். ஆனால், 18 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களின் வயதை (வாக்களிக்கும் உரிமை இருந்தபோதிலும்) கருத்தில் கொண்டு, இருவரின் பாதுகாப்பிற்காக அவரவர் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்’ என்றார்.

Related posts

கள்ளக்காதலனுடன் மனைவி எஸ்கேப்: சென்னை டிரைவர் தற்கொலை

அரியானா – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஆந்திராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!!