சின்ன மம்மி உத்தரவால் கொதித்துப்போன சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘டெல்டாவில் இலை கட்சி நிர்வாகிகளை கண்காணிக்க சின்னமம்மி உத்தரவு போட்டிருக்கிறது தெரிந்து ரொம்பவே டென்சனில் இருக்கிறாராமே சேலத்துக்காரர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம் உள்பட டெல்டா மாவட்டத்தில் இலை கட்சி சார்பில் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் இலை கட்சி படுதோல்வி அடைந்தது. தேர்தல் ரிசல்ட்டுக்கு பின்னர் நிர்வாகிகள் இடையே பனிப்போர் நீடித்து வருது.. இந்த பனிப்போருக்கு இடையே மாஜி அமைச்சர்கள் கூட சைலண்டாக இருந்து வருகிறார்களாம்.. இதனால் டெல்டா மாவட்டத்தில் இலை கட்சியில் என்ன நடக்கிறது என்ற தகவல்களை அவ்வப்போது தனக்கு உடனே அனுப்ப வேண்டும். தொண்டர்களின் மனநிலை குறித்தும் தெரிவிக்க வேண்டும்னு சின்னமம்மி அவரது ஆதரவாளர்களுக்கு ரகசிய உத்தரவு போட்டுள்ளாராம்…
இந்த உத்தரவால் ஆதரவாளர்கள், கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடையே உள்ள பனிப்போர் குறித்தும், சைலண்டாக இருந்து வரும் மாஜி அமைச்சர்களையும் ரகசியமாக கண்காணிப்பதோடு அவர்களை பற்றிய தகவல்கள், தொண்டர்களின் மனநிலை குறித்து அறிய அதற்கான திரைமறைவு வேலையில் இறங்கி இருக்காங்களாம்.. இந்த தகவல் வெளியே கசிந்ததால் சேலத்துக்காரரின் கவனத்துக்கு இலை கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் கொண்டு சென்றாங்களாம்.. ஏற்கனவே தேர்தலில் படுதோல்வியால் கடும் அப்செட்டில் இருந்து வரும் நேரத்தில் இந்த தகவலை கேள்விப்பட்டு சின்னமம்மி மீது உச்சக்கட்ட டென்சனில் சேலத்துக்காரர் இருக்கிறாராம்.. இந்த டாப்பிக் தான் டெல்டா மாவட்டம் முழுவதும் இலை கட்சிக்குள் ஓடிக்கிட்டு இருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிழக்கு-மேற்கா செயல்படும் இரண்டு மாவட்ட செயலாளர்களால் இலைக்கட்சியினர் இருதலைக்கொள்ளி எறும்பா தவிக்கிறாங்களாமே எதுக்காம்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்டத்தில் இலைக்கட்சி சார்பில் மேற்கு மாவட்ட செயலாளராக மாஜி மில்க் மந்திரியும், கிழக்கு மாவட்ட செயலாளராக இலைக்கட்சியின் முன்னாள் சபாநாயகரின் சகோதரரும் இருக்காங்க.. மாஜி சபாநாயகரின் சகோதரருக்கு, மாஜி மில்க் தான் பதவி வாங்கி கொடுத்தாராம்.. இருந்தாலும் கருத்து வேறுபாடுகளால் இருவரும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வர்றாங்களாம்.. இந்த சூழலில், இலைக்கட்சியின் மேலிடம் மாஜி மில்க் அனுப்பிய புதிய நிர்வாகிகள் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கிடுச்சாம்.. ஆனால் கிழக்கு மாவட்ட செயலாளர் அனுப்பிய பட்டியலுக்கு பல மாதங்கள் ஆகியும் ஒப்புதல் வழங்கவில்லையாம்.. இதனால் கட்சி நிர்வாகிகள் யாருக்கு ஆதரவாக செயல்படுவதுன்னு ரொம்பவே குழப்பத்தில் உள்ளாங்களாம்.. குறிப்பாக, சேர்மன்கள், கவுன்சிலர்களின் பாடு பெரும்பாடாக இருக்கிறதாம்.. இரண்டு தலைகளில் யார் பக்கம் சாய்ந்தாலும் சிக்கலாகிவிடும். உள்ளாட்சி தேர்தலில் சீட் கொடுக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டு விடுவார்களேன்னு இருதலைக்கொள்ளி எறும்பு போல தவிச்சிக்கிட்டு இருக்காங்களாம்.. இது ஒருபுறம் இருக்க, காராசேவுக்கு பெயர் போன ஊரின் மாஜி எம்எல்ஏ, இரண்டு தலைகளின் படம் இல்லாமல் தன்னுடைய படத்தை மட்டும் பெரிசா போட்டு தனி அரசியல் செய்ய தொடங்கியுள்ளாராம்.. ஏற்கனவே 2 கோஷ்டி, இதுல இவர் வேறு குறுக்கால ஓடுகிறாரேன்னு இலைக்கட்சியினரே கலாய்க்கின்றனராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தூங்கா நகரத்து பிரிசனில் கையாடல் செய்த அதிகாரிங்களுக்கு திடீர்னு கிலி ஏற்பட என்ன காரணம் சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது சென்ட்ரல் ஜெயிலிலும் கைதிகளுக்கான தொழிற்சாலைகள் நடத்தப்பட்டு வருது.. உதாரணமாக, சேலம் சிறையில மருத்துவமனைகளுக்கான இரும்பு கட்டில் செஞ்சி கொடுக்காங்க.. இப்படி ஒவ்வொரு சிறையிலும் நடக்கும் தொழிலில் வரவு செலவில் சில அதிகாரிகள் கை வச்சிட்டாங்களாம்.. குறிப்பா தூங்கா நகரத்து பிரிசனில் பெருமளவில் கையாடல் நடந்துப்போச்சாம்.. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசாரும் விசாரிச்சிக்கிட்டு வர்றாங்களாம்.. இந்த மோசடியெல்லாம் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே நடந்துட்டாம்.. சிபிசிஐடிக்கு முன்னால ஆய்வு செஞ்ச தணிக்கை குழுவின் நெருக்கடியின் காரணமாக கொஞ்சம் பணம் ஜெயிலின் கருவூலத்துக்கும் திரும்பிடுச்சாம்.. இதையடுத்து அங்கு பணியாற்றிய அதிகாரிகளில் சிலர் சென்னை, கோவை, சேலம், வேலூர், பாளையங்கோட்டை, கடலூர் சிறைகளுக்கு மாற்றப்பட்டாங்களாம்.. இதுல சம்பாதிச்ச பெரும் ெதாகையை அதிகாரி ஒருவர் மணல் மாபியா கும்பலிடம் கொடுத்து ஏமாந்துவிட்டாராம்.. என்றாலும் எல்லாம் முடிஞ்சிப்போச்சின்னு நினைச்சிக்கிட்டிருந்த நேரத்துல அதிகாரி ஒருவருக்கு ரிட்டையர்டு நாளில் ஓய்வு கிடைக்காம நின்னு போச்சாம்.. இதனால சக அதிகாரிகளுக்கு கிலி ஏற்பட்டிருக்காம்.. இருந்தாலும் ரிட்டையர்டு ஆவதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கு.. அதுக்குள்ள விவகாரத்தை முடிச்சிடலாம் என்ற நம்பிக்கையோடு இருக்காங்களாம்.. என்ன பிளானில் இருந்தாலும் உப்பு தின்னால் தண்ணி குடிச்சித்தானே ஆகணும் என்கிறார்களாம் நேர்மையான சகாக்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘என்.ஆர்.காங்கிரசை பாஜ உடைக்க முயற்சி செய்றதா சேதி வருதே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாடாளுமன்ற தேர்தலில் புதுவை ஆளுங் கூட்டணி அரசு சார்பில் நின்ற பாஜ வேட்பாளரும், அமைச்சருமான நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இதையடுத்து கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. புல்லட்சாமி மீது புகார்களை பாஜ தலைமையிடம் எம்எல்ஏக்கள் புகார் கூறிவிட்டு வந்துள்ளனர். அதில், பாஜ எம்எல்ஏகளின் தொகுதிகளை புறக்கணிக்கிறார். தொகுதியில் நலத்திட்டங்களை எதுவும் தொடங்கவில்லை. இப்படியாக சென்றால் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர். மேலும் முக்கிய தகவல்களை கூறியுள்ளனர். என்.ஆர்.காங்கிரசில் ஒரு சில எம்எல்ஏக்கள், புல்லட்சாமி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் வட்டிக்கு வாங்கி நின்று வெற்றி பெற்றாலும் வட்டியை கூட கட்ட முடியாமல் எம்எல்ஏக்கள் தவிக்கின்றனர். எனவே பாஜவுக்கு வருவதற்கு தயாராக உள்ளனர். தற்போது பாஜவுக்கு நியமன மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் 12 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க மேலும் 4 எம்எல்ஏக்கள் மட்டுமே தேவையாக உள்ளது. என்.ஆர்.காங்கிரசில் இருந்து பாஜவுக்கு வருவதற்கு தயாராக 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே இதனை பயன்படுத்தி நாம் ஆட்சி அமைத்தால் புதிய திட்டங்கள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை செய்து மக்களிடம் நல்ல பெயரை எடுக்கலாம். இதை வைத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எளிதில் வெற்றி பெறலாம் என்ற கணக்கையும் எடுத்து கூறியுள்ளனர். இது ெதாடர்பாக தீவிர ஆலோசனை செய்து முடிவு எடுக்கலாம். தற்போது தான் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்து உள்ளோம். காலம் கணியும் போது ஆட்சி மாற்றத்தை நடத்தி காட்டி விடுவோம் என பாஜ தலைமையும் பச்சை கொடி காட்டி உள்ளனர். இதனால் நிம்மதியாக பாஜ எம்எல்ஏக்கள் டெல்லியில் இருந்து திரும்பி உள்ளனர்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை