சின்ன மம்மியின் டிராவல் ஒரேயடியாக பிசுபிசுத்து போனதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘யார் மீதோ இருக்கும் கோபத்தில் டோஸ் விட்ட மாஜி அமைச்சர் மீது அதிருப்தியில் இருக்காங்களாமே இலைக்கட்சி நிர்வாகிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சருக்கு, நில அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த அவர், முக்கிய நிர்வாகிகளை வரவழைத்து கடுமையாக கடிந்து கொண்டாராம்… வழக்கில் சிறைக்கு சென்ற பிறகு, தன்னை யாரும் வந்து சந்திக்க வில்லை. ஆனால் மற்ற மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கூட தன்னை வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். சொந்த மாவட்டத்தில் இருந்து ஒருவருவர் கூட வந்து எட்டி பார்க்க வில்லையே என்ற ஆதங்கத்தில் பயங்கர டோஸ் விட்டாராம்… அதிர்ச்சியடைந்த முக்கிய நிர்வாகிகள், யார் மீது இருக்கும் கோபத்தை நம்ம மீது காட்டுகிறாரு.. சிறைக்கு சென்றும் கூட இவரெல்லாம் திருந்த மாட்டார் போல என அவர்களுக்குள் புலம்பியபடி சென்றாங்களாம்.. இந்த தகவல் தெரிய வந்த மற்ற நிர்வாகிகள், மாஜி அமைச்சரை வீட்டில் சந்திக்கலாமா, வேண்டாமா, நமக்கும் டோஸ் விழுமா என்ற யோசனையில் இருக்காங்களாம்….’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அந்த மூணுபேரும் ஒரே மேடையில நிக்கட்டும். அப்புறமா எங்களை இணைப்பது பற்றி பேசட்டும்னு சேலத்துக்காரரின் ஆதரவு அடிபொடிகள் சொல்றாங்களாமே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியை ஒருங்கிணைப்பதே என் முழு முதற்கடமை என்று சமீபத்தில் சின்னமம்மி ஆரம்பித்த டிராவல் பிசுபிசுத்து போச்சாம்.. தென் மாவட்டத்தில் தனது பயணம் பரபரப்பாக பேசப்படும். அதற்கு அடுத்த படியாக சேலத்துக்காரரின் ஆதரவாளர்கள் அதிகம் இருக்கும் கொங்கு மண்டலத்தில் டிராவல் போகணும்னு அவர் பிளான் பண்ணியிருந்தாராம்.. இதற்கான ஏற்பாடுகளும் ஓரிரு பகுதிகளில் ஜரூராக நடந்துச்சாம்.. ஆனால் சின்னமம்மியை வரவேற்று ஆர்கனைஸ் செய்வதற்கு தோதாக உள்ளவர்கள் யாரும் இல்லையாம்.. தேனிக்காரரின் ஆதரவாளர்களும், குக்கர் பார்ட்டிகளும் இணைஞ்சு வந்து தனக்கு வரவேற்பு ெகாடுப்பாங்க என்ற அவரது எதிர்பார்ப்பும் எகிறி போச்சாம்..
இது சேலத்துக்காரரின் ஆதரவாளர்களுக்கு புதிய தெம்பை கொடுத்திருக்காம்.. இலைகட்சியில் இருந்து யாரும் விலகவில்லை. எல்லாரும் எங்க கட்சியில்தான் இருக்காங்க.. இணைப்பு என்று சொல்லும் அவுங்க 3 பேரும் முதலில் ஒரே மேடையில் நின்னு கட்சிக்காரர்களை சந்திக்கட்டும். அப்புறம் எங்களை இணைப்பது பத்தி பேசட்டும். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? சின்னமம்மி, தேனிக்காரர், குக்கர் பார்ட்டி என்று 3 பேரும் ஒன்றாக சேர்ந்து தொண்டர்களை சந்திக்க எப்போதும் வாய்ப்பே இல்லைன்னு கலாய்க்கிறாங்களாம் சேலத்துக்காரரின் ஆதரவு அடிப்பொடிகள்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தன்னை கவனிக்காத ஊராட்சி தலைகளை அலையவிடும் கெடுபிடி வளர்ச்சி ஆபீசர் மேல நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை குரல் எழுந்திருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குயின் பேட்டை மாவட்டத்துல பிரசித்தி பெற்ற மலைக்கோயில் அமைந்துள்ள லிங்கர் என முடியும் வட்டாரத்தோட வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருது.. இங்க வளர்ச்சி அதிகாரி ஒருத்தரு, அந்த வட்டாரத்துல நடக்குற அனைத்து பணிகளுக்கும் சம்பந்தப்பட்ட ஊராட்சி பிரசிடெண்டுகள், வளர்ச்சி அலுவலரை கவனிக்க வேண்டும்னு கெடுபிடி அதிகமாக இருக்குதாம்.. ஒரு ஒர்க்குக்கு 5 டூ 10 பர்சண்டேஜ் கொடுத்தே ஆகணுமாம்.. கவனிக்காமல் தயக்கம் காட்டுற ஊராட்சிகளுக்கு பணிகளை ஒதுக்காம புறக்கணித்து வர்றாராம்.. கவனிப்பு விசயத்துல கவனம் செலுத்தாத ஊராட்சி பிரசிடெண்டுகளை அலையவிட்டு கெடுபிடி செய்றதாக ஊராட்சி தலைகள் புலம்பி வர்றாங்க.. இதனால மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி தப்பு செய்றவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரர் மனதை குளிர்விக்க தங்கத்தேர் இழுத்த முன்னாள்கள் விசுவாசம் பற்றி சொல்லுங்க.. எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் இலை கட்சியில் நிலவி வந்த கோஷ்டி பூசல் ஒருவழியாக முடிவுக்கு வந்துட்டாம்.. தற்போதைய மாவட்ட செயலாளரான சுந்தரமானவருக்கு எதிராக கம்பு சுற்றி வந்த ‘முன்னாள்கள்’ பலரையும் அழைத்து சேலம்காரர் பேசியதுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ரீதியில் எச்சரிக்கை விடுத்தாராம்.. அதனால் தங்கள் மீது ஏதும் நடவடிக்கை வந்துவிடக்கூடாது, கோபத்தில் உள்ள சேலம்காரரின் மனதை குளிர்விக்க வேண்டும்னு முடிவு செய்து என்ன செய்யலாம் என்று யோசித்த முன்னாள்கள் ஒன்று சேர்ந்து சேலம்காரர் ஆயுள் அதிகரிக்க வேண்டும்னு வேண்டுதலுடன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலுக்கு சென்று தங்கத்தேர் இழுத்து தங்கள் விசுவாசத்தை காண்பித்தார்களாம்.. இதில் யாருடைய விசுவாசம் பலித்தது என்பது போக போகத்தான் தெரியும் என்கின்றனர் இலைகட்சியினர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மெடல் மாவட்டத்தை சேர்ந்த தாமரைக்கட்சி முக்கிய பிரமுகர் விரைவில் சிக்கப் போறதா அக்கட்சியினரே சொல்றாங்களாமே தெரியுமா?..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர், கட்டப்பஞ்சாயத்து செய்வோரின் புகலிடமாக தாமரை கட்சி விளங்குவதாக அந்தக் கட்சியினரே பேசும் நிலைமை ஏற்பட்டிருக்காம்.. அந்த வகையில் ஏராளமானோர் மெடல் மாவட்டத்தில் தான் இருக்கிறார்களாம்.. இந்த மாவட்டத்தில் பட்டாசுக்கு பெயர் போன ஊரில், கடைக்கோடி மாவட்டத்தின் பெயரை முன்பாதியில் கொண்டவர், தாமரை கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி கண்டுள்ள இவர், சமீபத்தில் பல கோடி மதிப்பிலான பிரிண்டிங் இயந்திரத்தை வாங்கி இருக்கிறாராம்.. இது மேட்டர் அல்ல… இந்த இயந்திரத்தை பயன்படுத்தி, மெடல் மாவட்டத்தில் குடிசை தொழில்போல் நடக்கும் சட்ட விரோத பட்டாசு ஆலைகளுக்கு எல்லாம் இவரது பிரிண்டிங் அலுவலகத்தில் இருந்துதான் பெட்டி தயார் செய்யப்பட்டு சப்ளை செய்யப்படுகிறதாம்.. அதிகாரிகள் ஆய்விற்கு வந்தால் ஒரு சில பட்டாசு ஆலைகளுக்கு வாங்கிய ஆர்டர்களை கணக்கு காட்டி நைசாக தப்பித்து விடுகிறாராம்.. விரைவில் ஆதாரப்பூர்வமாக சிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சியினரே கூறி வருகின்றனர்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே சொத்துத் தகராறில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு