சின்ன மம்மி உத்தரவால் கோபத்தில் இருக்கும் சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘விஜிலென்ஸ் எத்தனை பேரை பிடிச்சாலும் பட்டா வாங்க, பதிவு செய்றதுக்கு சம்திங் வாங்கிறத விடுறதில்லையாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல சேத்துல தொடங்கி பட்டு என்று முடியுற தாலுகாவுல, வட்ட ஆட்சியர் அலுவலகம், சார் பதிவு அலுவலகம்னு அலுவலக அதிகாரிகள் மீது மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவிச்சிட்டு வர்றாங்க.. அந்த அளவுக்கு சம்திங் வாங்குறது அதிகமாகிடுச்சாம்.. முகாம் நடத்தி சான்றுகளை கொடுத்தாலும் நாமதானே சான்றுக்கு வேலை செய்யணும்னு வருவாய்த்துறையில கிண்டல் பேச்சு பேசுறாங்களாம்.. சர்வேயர் பிரிவுல 2 பேரை விஜிலென்ஸ் பிடிச்சும் சம்திங் வாங்குற நிலை குறையவே இல்லையாம்.. பட்டா வாங்க, பதிவு செய்றதுக்குன்னு சம்திங் வாங்காம விடுறதில்லையாம்.. கொடுக்க வேண்டியதை கொடுக்காவிட்டால், இவங்க எதையும் செய்றதும் இல்லையாம்.. இப்படி புகார்கள் உச்சத்துக்கு போய்கிட்டிருக்குதாம்.. பட்டுன்ற தாலுகாவுல, லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஆனி வேறாக செயல்படும் வருவாய்த்துறையினரோட பட்டியலை தயார் செஞ்சி கண்காணிக்கத்தொடங்கிட்டாங்களாம்.. முக்கிய நபர்களோட செல்போன் எண்ணையும் வாங்கி கண்காணிப்பு தீவிரமாகிட்டு இருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைகட்சி முக்கிய நிர்வாகிகளை அழைத்து வர சின்னமம்மி போட்ட உத்தரவால் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறாராமே சேலத்துக்காரர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தென்மாவட்டங்களில் சின்னமம்மி திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை. இலைகட்சி முக்கிய நிர்வாகிகளும் கண்டுகொள்ளாததால் சின்னமம்மி தரப்பினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.. தென்மாவட்டத்தை தொடர்ந்து மலைக்கோட்டை மாநகர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் சின்னமம்மி சுற்றுப்பயணம் செய்யப் போறாரு.. தென் மாவட்டத்தை போல் டெல்டா மாவட்டத்திலும் இருக்க கூடாது. அதிகளவில் கூட்டத்தை காட்ட வேண்டும். அதுவும் இலை கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகளை அழைத்து வர வேண்டும்னு சின்னமம்மி அவரது ஆதரவாளர்களுக்கு உத்தரவு போட்டுள்ளாராம்… அதற்கான வேலையில் சின்னமம்மியின் ஆதரவாளர்கள் தீவிரமாக இறங்கி இருக்காங்களாம்.. இந்த தகவல் தெரிய வந்த சேலத்துக்காரரோ சின்னமம்மி மீது உச்சகட்ட கோபத்தில் இருந்து வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தெர்மாகோல் புகழ் மாஜி அமைச்சர் தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிக்கெல்லாம் மனைவியை தவறாம அழைச்சுட்டு வர்றாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரில் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாதவராக இலைக்கட்சியின் மாஜி மந்திரியான தெர்மாகோல் இருக்கிறார். தனது எக்ஸ் தளப்பதிவுகள் துவங்கி, பேட்டிகள் வரை எதிலும் ஏதாவதொரு சர்ச்சைக்கு ஆளாகி வர்றாரு.. தெர்மாகோல் பேட்டி தந்தால் ஏதாவது சுவாரசியம் இருக்குமென்ற ஆர்வத்தில் பத்திரிகையாளர்களும் ஆர்வத்துடன் செல்வதுண்டு.. சமீப காலமாக தொகுதிக்குள் நடந்து முடிந்த பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்வுக்கெல்லாம் மறக்காமல் தனது மனைவியையும் அழைத்து வந்து விடுகிறாராம்.. நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், பேட்டியின் போதும் அருகே அமர வைத்து தொகுதிக்கென செய்த பணிகளை பட்டியலிட்டு பேசி முடிக்கிறாராம்.. நிருபர்கள் கேள்வி கொஞ்சம் அப்படி இப்படி ஆகும்போது, சைலண்ட்டாக கொடுக்கும் சைகையை தெரிந்து கொண்டு அவரது மனைவி ஒரு வணக்கம் போட்டு மெல்ல எழுந்து காருக்கு போய் விடுகிறாராம்.. இலைக்கட்சியில் மனைவிக்கும் ஒரு இடத்தை பிடிக்கவே இப்படி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தெர்மாகோல் அழைத்து வருகிறார் என்கின்றனர். தனது மகன் பெயரிலான டிரஸ்ட் சேவை சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்காகத்தான் தெர்மாகோலுடன் அவரது மனைவியும் வருவதாக கட்சியில் சிலர் தெரிவித்தாலும், எம்எல்ஏ தொகுதி நிதி ஒதுக்கீட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கும் மனைவியை அழைத்து வருவதில் இருந்து அரசியலுக்குள் மனைவியை கொண்டு வரவே இந்த அறிமுகம் என்கின்றனர் விவரமறிந்த இலைக்கட்சியினர்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இரு மாவட்டங்களில் கரன்சி குவிக்கும் அதிகாரி பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நான்கு எழுத்து பெயர் கொண்டவரும், முழு முதல் கடவுள் பெயர் கொண்டவருமான செயல் அலுவலர் கோவை மாவட்டத்தில் பணியாற்றினார். பின்னர் திருச்சி, கரூர் போன்ற மாவட்டங்களில் பணியாற்றி ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளிக்கு வந்தார். ெதாடர்ந்து விஐபியின் உதவியாளர்களுக்கு பல லட்சங்களை கொடுத்து, ஈரோடு மாவட்ட பேரூராட்சிகளின் உயர் பதவியில் பணிபுரிகிறார். இவர், ஈரோடு மாவட்டத்தை கைப்பற்றிய விதத்தை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து செயல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களும் கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

பல கோடி சுருட்டிய இவர், தமிழ்நாடு அரசை குறைகூறி வருகிறாராம். இப்படிப்பட்டவருக்கா இப்பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி அடைகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிந்த கோவையை சேர்ந்த ஒருவரை அதிரடியாக வேறு மாவட்டத்திற்கு மாற்றிவிட்டு, இவரை ஈரோட்டில் ஏன் நியமிக்க வேண்டும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, திருப்பூர் மாவட்ட இன்சார்ஜ் டியூட்டியும் சேர்த்து பார்க்கிறாராம். அதனால், கரன்சி பல மடங்கு குவிகிறதாம். இவரை ஈரோடு மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என ஊழியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் – படாபரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பலி