Wednesday, September 18, 2024
Home » சின்ன கண்ணன் அழைக்கிறான்…

சின்ன கண்ணன் அழைக்கிறான்…

by Lavanya
Published: Last Updated on

கிருஷ்ண ஜெயந்தி – 26.8.2024

இதோ நாம் ஆவலோடு எதிர்பார்த்த இந்த ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி விழா வந்துவிட்டது. நாடெங்கும் கோலாகல கொண்டாட்டங்கள். இதுதான் சிறப்பு. நம்முடைய சமய மரபில் எத்தனையோ பண்டிகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனிப் பண்டிகைகள் உண்டு. அந்தந்த தெய்வத்திற்கு தனித் தனிச் சிறப்புகளும் உண்டு. ஆனால் குழந்தைகள்கூட குதூகலமாகக் கொண்டாடுகின்ற பண்டிகைகளில் ஒன்று “கிருஷ்ண ஜெயந்தி”. மற்றொன்று விநாயகர் சதுர்த்தி. இரண்டும் அடுத்தடுத்து வரும் பண்டிகைகள் என்பது மற்றுமொரு சிறப்பு. தேசிய அளவில், அனேகமாக எல்லா மாநிலங்களிலும், எல்லா மொழி பேசுபவர்களும், கொண்டாடும் ஒரு பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி என்பது மற்றுமொரு விசேஷம்.

குழந்தைகளுக்கானது

குழந்தைகளுக்கான மிகச் சிறப்பான பண்டிகை கிருஷ்ணஜெயந்தி என்று சொல்வதற்குக் காரணம் உண்டு. அன்று தயாரிக்கப்படும் பிரசாதங்கள் எல்லாமே குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடுகின்ற சீடை, அவல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணெய், பால்திரட்டு, நாட்டுச் சர்க்கரை வடை போன்ற பிரசாதங்கள். இவைகள் விரும்பாத குழந்தைகள் உண்டா? அடுத்து, எந்தக் குழந்தையாக இருந்தாலும், அந்தக் குழந்தையை ஆசையோடு அழைக்கின்ற பொழுது வைக்கும் பேர் “கண்ணா”. இந்தப் பெயர் கிருஷ்ணனுக்கு உரியது அல்லவா. அடுத்து அந்த விழாவில் குழந்தைகளுக்கு கிருஷ்ணனாக வேடமிட்டு பெரியவர்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அன்றைக்கு குழந்தைகளை கிருஷ்ணனாகவே பாவிக்கிறோம். ஆண் குழந்தையாகஇருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும், மயில் கிரீடம் வைத்து ஒரு புல்லாங்குழல் கொடுத்துவிட்டால் கிருஷ்ணனாக மாறி விடும் மகிழ்ச்சியைக் காண்கின்றோம். இப்படிக் குழந்தைகளும் கலந்து கொள்ளும் மகத்தான பண்டிகை வேறு என்ன இருக்க முடியும்?

பல பெயர்களில் விழா

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் அவதார வைபவத்தைக் கொண்டாடுகிற விழாவாகும். இது இந்தியா முழுதும் கொண்டாடப்படும் தேசிய அளவிலான விழா. ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதியிலும் மாலை நேரத்தில் சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது. 1982 ம் ஆண்டு முதல் தமிழக ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்திக்கு அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. பல இடங்களில் உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறுதல், கோ பூஜை என கோலாகலமாக நடக்கிறது. கிருஷ்ணன் கோயில் களில் மட்டுமல்லாது, எல்லா பெருமாள் கோயில்களிலும், விசேஷ திருமஞ்சன அலங்காரங்கள், வீதி உலா நடைபெறும்.

கண்ணன் கால்தடங்கள்

இந்த ஆண்டு வாக்கியப்படி அஷ்டமி திதி உள்ள திங்கட்கிழமையில் அதாவது 26.8.2024 அன்று கோகுலாஷ்டமி வருகின்றது. வாக்கிய கணிதப்படி இதே நாளில்தான் வைகானஸ ஸ்ரீஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால், வைணவர்களில் ஒரு சாரார் கொண்டாடும் ஸ்ரீ பாஞ்சராத்ர ஜெயந்தி 27.8.2024 செவ்வாய்க்கிழமை, (ஆவணியும் ரோகிணியும் கலந்த நாளில்) கொண்டாடப்படுகிறது. இது அவரவர்கள் சம்பிரதாயத்தை ஒட்டி கொண்டாடப்படுவதால், அதை அனுசரித்து கொண்டாடிக் கொள்வது சிறப்பு. பெரும்பாலானவர்கள், 26.8.2024 அன்று கோகுலாஷ்டமியை விரிவாகக் கொண்டாடுவார்கள். கிருஷ்ணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால், பூஜைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று சின்னஞ்சிறு குழந்தையின் கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூஜையறை வரை இடப்படுவது வேறெந்தப் பண்டிகையிலும் இல்லாதது.

கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி

கேரளாவில் குருவாயூர் கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோயிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள்.

ராதே கிருஷ்ணா

கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தா வனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தானிஸ் தனது வரலாற்றுக் குறிப்புகளில் எழுதியுள்ளார். வட இந்தியாவில் கண்ணனின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பகுதிகளில் எல்லாம் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்றைக்கும் எளிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது, வணக்கம் தெரிவித்துக் கொள்வது போல ராதே கிருஷ்ணா என்கின்ற வார்த்தையைத்தான் பரிமாறிக் கொள்வார்கள். ஸ்ரீ கிருஷ்ணரை, தங்கள் இதயத்திலும் நாவிலும் சதாசர்வகாலமும் வைத்து பூஜிக்கும் பழக்கம் இப்பகுதி மக்களிடம் உண்டு. கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

எப்படிக் கொண்டாட வேண்டும்?

கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர் – சிறுமிகளை கண்ணன், ராதைபோல வேடமிட்டுப் பார்ப்பது பக்தியை வளர்க்கும். வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை. கண்ணனை வழிபட்டால் சொன்னது பலிக்கும். மனதில் உள்ள கெட்ட எண்ணங்களும், அகந்தையும் அழியும். குழந்தைகளுக்கு மூர்க்கக் குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். நிர்வாகத்திறமை அதிகரிக்கும். “ஓம் நமோ பகவதே வாசுதேவாயா” போன்ற கிருஷ்ண மந்திரங்களை ஜெபித்தால் கிருஷ்ணரின் அருள் பார்வை
நம்மீது படும்.

திருமணத் தடைகள்

பெண்கள், கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமணத் தடைகள் விலகி கல்யாணம் கைகூடும். இதற்கு ஆதாரம்தான், ஆண்டாளின் வாழ்க்கை. திருப்பாவை பாடி கண்ணனே கணவனாக அமைய நோன்பு நோற்றாள். கண்ணனைக் கணவனாக அடைய கனவு கண்டு “வாரணம் ஆயிரம்” என ஒரு பதிகம் பாடினாள். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து 48 வாரம் இந்த பதிகம் பாடினால் நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்கும். வைணவத் திருமண மரபில் ஒவ்வொரு மணமகனையும் கண்ணனாகவும், ஒவ்வொரு மணமகளையும் ஆண்டாளாகவும் பாவிப்பது வழக்கம். விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில்
நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.

சங்க இலக்கியங்களில் கண்ணன்

பரிபாடல் தொகுப்பில் எழுபது பாடல்கள் இருந்தன. தற்போது இருபத்தி இரண்டு பாடல்களே கிடைக்கின்றன இருபத்தி இரண்டில் மாயோன் மீது ஆறு பாடல்களும் இருக்கின்றன. இதில் கண்ணனைப் பற்றிய அத்தனை புராணச் செய்திகளும் விரிவாகச்சொல்லப்பட்டிருக்கின்றன. எட்டுத்தொகை நூல்களில், நற்றிணையில் கடவுள் வாழ்த்தாக ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்ற சங்கப்புலவர் பாடிய அற்புதமான பாடல் ஒன்று மாயோனின் மீது இருக்கிறது.

மாநிலம் சேவடியாகத் தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கையாக
விசும்பு மெய்யாகத் திசை கையாக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே.
சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை

கிருஷ்ணனின் அத்தனை பண்புகளையும் புராண இதிகாசச் செய்திகளையும் பேசுகிறது. பலராமன் குறித்தும், நப்பின்னை குறித்தும், ராதையைக் குறித்தும் கூறப்பட்டுள்ளது. நீளாதேவியின் அம்சமான நப்பின்னையைக் குறித்து ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.

தமிழ் இலக்கியங்களில் கண்ணன்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திரிகடுகம் கடவுள் வாழ்த்து மாயோனைப் போற்றுகிறது.

கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் – நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்

பூவைப்பூ வண்ணன் அடி

ஒரு சமயம் அசுரர்கள் சூரியனைத் தடுத்து மறைத்துவிட்டால் பூமி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாகப் புறநானூறு குறிப்பிடுகிறது.கண்ணன் குருந்தமரத்தை ஆய மகளிர்க்கு (கோபியர்) வளைத்துத் தந்தது போன்று ஆண்யானை ஒன்று, தன் பெண் யானை உண்ணும்படியாக மரத்தின் கிளையை வளைத்துத் தந்தது என்று கண்ணனின் கதையை இணைத்துப் பாடும் அகப்பாடல் இது.

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தண் தழை உடீ இயர்
மரம் செல மிதித்த மா அல் போல
புன் தலை மடப்பிடி உணீ இயர்
அகம் 59 (மதுரை மருதன் இளநாகன்)

இப்படிப் பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படித்தான் கொண்டாட வேண்டும்

ராமநவமி ராமர் பெயரில் இருக்கிறது. கந்த சஷ்டி முருகர் பெயரில் இருக்கிறது. சிவராத்திரி சிவன்பெயரில் உள்ளது. துர்காஷ்டமி, அம்பாள் பெயரில் உள்ளது. வரலட்சுமி விரதம் மகாலட்சுமி பெயரில் உள்ளது. நரசிம்ம ஜெயந்தி நரசிம்மர் பெயரில் உள்ளது. ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவர் பிறந்த இடத்தையும் (கோகுலம்) திதியையும் (அஷ்டமி) சேர்த்து “கோகுலாஷ்டமி’’ என்று கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் பகவானைப் பற்றிய பக்தி, பஜனை, கீர்த்தனம், உபவாசம் செய்யவேண்டும். மத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்து, மலர்களையும் பழங்களையும் இனிப்பு வகைகளையும் படைக்க வேண்டும். குறிப்பாக பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் பூஜை செய்து முடித்தபிறகு அருகே உள்ள பெருமாள் ஆலயத்துக்குச் சென்று உற்சவாதிகளில் கலந்து கொள்ள வேண்டும்.

பூரண அவதாரங்கள்

பகவான் பல அவதாரங்களை எடுத்து இருக்கின்றான். அதில் முக்கியமாக தசாவதாரங்களைச் சொல்வார்கள்.

மீனோடு ஆமை கேழல் அரி
குறளாய் முன்னும் இராமனாய்த்
தானாய் பின்னும் இராமனாய்த்
தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னைக் கண்ணபுரத்து
அடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன்சொல் தமிழ்மாலை
செப்பப் பாவம் நில்லாவே

என்று பகவான் எடுத்த பத்து அவதாரங்களையும் ஒரே பாட்டில் விவரித்துப் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார். இதில் இரண்டு அவதாரங்கள் பூர்ண அவதாரங்கள்.
1. ராம அவதாரம்
2. கிருஷ்ணாவதாரம். இரண்டிலும் தாயின் கர்ப்பத்தில் அவதரித்ததிலிருந்து, அவதாரத்தை முடித்துக் கொண்டு தன்னுடைய சோதிக்குத் திரும்புகின்ற வரை உள்ள நிகழ்ச்சிகள் பூரணமாக இருக்கின்றன. இராம
அவதாரத்தை விவரிப்பது வால்மீகி ராமாயணம். கிருஷ்ணாவதாரத்தை விவரிப்பது மத் பாகவதம். ஒன்றை இதிகாசங்களில்
சிறந்ததாகவும் இன்னொன்றை புராணங்களில் சிறந்ததாகவும் நம்முடைய சான்றோர்கள் பாராயணம் செய்வதுண்டு.

எத்தனை எத்தனை கோலங்கள்

‘‘கிருஷ்ண விக்ரகம்’’ என்று அழகை வர்ணிப்பார்கள். எந்தக் கோயில்களிலும் கண்ணனுடைய திருவுருவம் கண்களுக்கு விருந்தாக இருக்கும். இந்த உருவ அமைப்புக்கள் பலப்பல. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அழகு. எட்டாவது திதியில் (அஷ்டமி) பிறந்து, எட்டெழுத்து மந்திரத்திற்கு பொருளான கண்ணனின் திருவுருவங்களை எட்டு விதமாக பக்தர்கள் அனுபவிக்கின்றனர்.
1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம்.
3. காளிங்க நர்த்தன கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.
4. கோவர்த்தன கிருஷ்ணன்: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
5. ராதா – கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
6. முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய்
நின்றி ருக்கும் திருக்கோலம்.
7. மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.
8. பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும்
திருக்கோலம்.

விஷ்ணு சகஸ்ரநாமத்தில் கண்ணன்

கண்ணனுடைய கதைகளைத் தெரிந்து கொள்வதற்கு இரண்டு நூல்கள் முக்கியம் 1. மகாபாரதம் 2. ஸ்ரீமத் பாகவதம். நான்கு வேதங்களை தொகுத்துக் கொடுத்த வேத வியாசர் ஐந்தாவது வேதமாக மகாபாரதத்தை அருளிச்செய்தார். பாரதத்தை தமிழில் செய்த வில்லிபுத்தூராழ்வார், கண்ணனுடைய கதை, மகாபாரதத்தில் இருப்பதால்தான் அதை நான் தமிழில் செய்கிறேன் என்று சொன்னார்.

முன்னும் மா மறை முனிவரும் தேவரும் பிறரும்
பன்னும் மா மொழி பாரதப் பெருமையும் பாரேன்
மன்னும் மாதவன் சரிதமும் இடை இடை வழங்கும்
என்னும் ஆசையால் யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன்

இந்த மகாபாரதத்தில் இரண்டு பகுதிகள் சிறப்பானவை. தினசரி வழி பாட்டில் ஓதப்படுபவை. பல அருளாளர்களும் உரை எழுதியவை.
1. பகவத் கீதை
2. விஷ்ணு சகஸ்ரநாமம்.
பகவத்கீதை கண்ணன் சொன்னது.
விஷ்ணு சஹஸ்ரநாமம் கண்ணன் கேட்டது. கண்ணன் கேட்ட இந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தில் 90 இடங்களுக்கு மேல் கண்ணனுடைய பெருமையைச் சொல்லும் நாமங்கள் உண்டு. வேள்வி மந்திரங்களிலும் 22 வகையான கிருஷ்ண மந்திரங்கள் உண்டு. ஒவ்வொரு மந்திரமும் அற்புதமான பலன்களைச் செய்யக் கூடியவை.

இருட்டில் பிரகாசித்த பௌர்ணமி

ஒவ்வொரு அவதாரத்திற்கும், ஒவ்வொரு காரணம் உண்டு. கிருஷ்ணாவதாரத்துக்கு, எத்தனையோ காரணங்களை நம்முடைய ஆன்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதில் ராமானுஜர் தமது பகவத் கீதை பாஷ்ய முன்னுரையில் கிருஷ்ணாவதாரத்தினுடைய காரணத்தை சுவைபட விவரிக்கிறார். வேதத்திலே சொல்லப்பட்ட சாஸ்திர உண்மைகளை இந்த உலகத்தில் நிலைநாட்ட வேண்டும். குறிப்பாக தர்மத்தை நிலைநாட்ட தர்மமே அவதரித்தது. கிருஷ்ணனுக்குத் தர்மம் என்கின்ற பெயர் உண்டு என்கிறார். இரண்டாவதாக, தன்னுடைய பல்வேறு விதமான குணங்களைக் குறிப்பாக எளிமைக் குணத்தை பிரகாசம் செய்ய அவதரித்தான் என்கிறார்.

பகல் விளக்கு போலே வைகுந்தம்

இருட்டு விளக்கு போலே கிருஷ்ணாவதாரம். இருட்டிலே வெளிச்சம் எளிதாகத் தெரியும். அதனால்தான் நள்ளிரவில் அஷ்டமி திதியில் சகல தர்ம பூத ஞான ஒளி வெள்ளமாய் பகவான் அவதரித்தான். வினைகள் என்னும் சிறையில் அகப்பட்ட ஜீவாத்மாக்களை மீட்டெடுக்கச் சிறையிலே அவதரித்தான். இருட்டில் பிரகாசித்த பௌர்ணமி என்று பகவானின் கிருஷ்ணாவதாரத்தைப் பற்றி ரிஷிகள் கூறுவார்கள்.

பகவத்கீதை உபதேசிக்கவே அவதாரம்

பகவத்கீதை என்கின்ற ஞான சாஸ்திரத்தை அருளிச் செய்யவே கிருஷ்ணாவதாரம். பகவத்கீதை சகல வேத சாரமாகவும், சகல உபநிடதங்களின் சரமாகவும் விளங்குகிறது. எல்லா உபநிடதங்களையும், ஒரு பசுவாக்கி, சாரமான பாலை, கோபாலனாகிய கண்ணன் கறந்து கொடுத்ததே, பகவத்கீதை என்று சொல்வார்கள் பெரியவர்கள்.பகவத் கீதையில் ஏன் அவதரிக்கிறேன்? என்கின்ற அவதார காரணத்தையும் சொல்லுகின்றான். அது, அவனே தன் வாக்காக வெளியிட்டது.

பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்த்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

நல்லவர்களைப் பாதுகாக்கவும், கெட்டவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

குழந்தை பாலகிருஷ்ணன்

பகவான் கிருஷ்ணனுக்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் ஏதோ ஒரு வகையில் ஒரு ஆலயம் இருக்கும். அப்படி இல்லாவிட்டாலும், ராமானுஜ கூடங்கள் என்று சொல்லப்படும் கிருஷ்ண பஜனை மடங்கள் இருக்கும். அங்கே கிருஷ்ண வழிபாடு நடந்து கொண்டிருக்கும். ஆனால் சில குறிப்பிட்ட இடங் களில் பிரபலமான கிருஷ்ண ஆலயங்கள் உண்டு. உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் குழந்தை பாலகிருஷ்ணன். விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மணிதேவியால் பூஜை செய்யப்பட்ட விக்கிரகம். துவாரகை நகரம் கடலில் மூழ்கிய போது கோயிலும் மூழ்கியது. பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து உடுப்பியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன் தனது இருபது மனைவிகளுடன் (நட்சத்திரங்களுடன்) கிருஷ்ணரை வழிபட்ட தலம். உடுப்பியில் அன்னதானம் விசேஷம். உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் பூஜைக்குரிய பொருட்கள் வாங்கும் போது மரத்தாலான மத்து ஒன்றையும் வாங்கும் பழக்கம் பக்தர்க ளுக்கு உண்டு. இங்கு இன்னும் ஒரு விசேஷம் ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி (கனகதண்டி) வழியாகவே மூலவரைத் தரிசனம் செய்யும் வழக்கம் உள்ளது. காரணம் அற்புதமானது. கிருஷ்ண பக்தி மகிமையை விளக்குவது.

பக்தனுக்காக திரும்பிய கிருஷ்ணன்

அக்காலத்தில் கனகதாசர் என்ற மகான் இருந்தார். கிருஷ்ண பக்தியில் லயித்தவர். தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் அக்காலத்தில் உடுப்பி கோயிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி பாடி வந்தார். இவருடைய பக்தியும், இசையும், ஈஸ்வர விசுவாசமும் கண்ணனை மயக்கியது. ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனகதாசருக்குக் காட்சியளித்தார். இன்றும் அதே துவாரம் வழியாகவே நாம் கிருஷ்ண தரிசனம் செய்ய முடியும். காரணம் கனகதாசரை நினைத்துக் கொண்டு கண்ணனை வழிபட
வேண்டும் அல்லவா.

வித்தியாசமான பிரசாதங்கள் வழிபாடுகள்

ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும் கிருஷ்ணரான நாத்ஜீக்கு பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும். கேரளாவில், ஆலப்புழை கிருஷ்ணன் கோயிலில் பால் பாயசம் நைவேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. காஞ்சிபுரம், மணிமங்கலத்தில் ராஜகோபாலசுவாமி பெருமாள் இடது கையில் சக்கரமும் வலது கையில் சங்கும் ஏந்தியிருக்கிறார். சென்னை ஆதம்பாக்கத்தில் பண்டரிபுர அமைப்பில் பாண்டுரங்கன் சந்நதி உள்ளது. தென்னாங்கூர், மற்றும் திருவிடைமருதூரில் பிரபலமான பாண்டுரங்க ருக்மணி கோயில்கள் உண்டு. மதுரை-கள்ளிக்குடியில் கண்ணன் பாமா-ருக்மிணி கோயில் உள்ளது. இங்கு குழந்தைகள் கல்வியில் சிறக்க, பகவானை மாவிளக்கேற்றி வழிபடுகிறார்கள். நெல்லைமாவட்டம், அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் கோயிலில் உள்ள வேணுகோபாலன் திருவுருவம் சாளக்ராம கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜெயந்தியன்று இங்கு பெருமாளுக்கு கண்திறப்பு, சங்கில் பால் புகட்டும் வைபவங்கள் நடத்துகிறார்கள்.

கண்ணனா திருடினான்?

கிருஷ்ணர் என்றாலே பிரேம பக்தி தான். நம்முடைய ஆண்டாளிலிருந்து, வடக்கே மீரா வரை கிருஷ்ணப்ரேமிகர்களை நாம் காண முடியும். அந்தப் ப்ரேமையின் வெளிப்பாடுதான் மீராவின் கீதங்களும் ஆண்டாளின் பாசுரங்களும். இன்னும் புரந்தரதாசர், கனகதாசர், ஜெயதேவர், கிருஷ்ண சைதன்யர், அபங்கங்கள் பாடிய பாண்டுரங்க தாசர்கள் என்று ஆயிரம் ஆயிரம் கிருஷ்ணப்ரேமிகள் இந்திய ஆன்மிக வரலாற்றில் உண்டு. அதைப்போலவே வைணவ ஆச்சாரியர்கள் அனுபவித்த கிருஷ்ணபக்தி அபாரமானது. நம்ப முடியாதது. ஆனாலும் அவர்கள் அந்த பக்தி நிஷ்டையில் இருந்தனர். பிள்ளை உறங்காவில்லி தாசர் ஒரு கிருஷ்ண பக்தர். ராமானுஜரின் முக்கியமான சீடர்களில் ஒருவர். கிருஷ்ணரைப் பற்றி விளையாட்டுக்கு கூட யாரும் அவரிடத்தில் குறை சொல்வதை ஏற்றுக் கொள்ளமாட்டார். அவர் கிருஷ்ணனுடைய கதையில், ஆழங்கால் பட்டவர். யாராவது ‘‘உங்கள் கிருஷ்ணன் வெண்ணெயைத் திருடிவிட்டானே, சரியான திருடனாக இருக்கிறான்’’ என்று சொல்லிவிட்டால் போதும். அவர் உடனே, ‘‘எந்த பூட்டை கண்ணன் உடைத்து விட்டான்? யார் வீட்டு மாணிக்கத்தைத் திருடி விட்டான். நீங்கள் இப்படி எல்லாம் குறை கூறுகிறீர்களே, அவனிடத்திலேயே, எத்தனையோ பசுக்கள் இருந்தனவே, அவன் வெண்ணெய் திருடினான் என்று, கூசாமல் கூறுகிறீர்கள்’’ என்று சிறு பிள்ளையைப் போல் புலம்புவாராம்.

என் பக்தன்சரியாகவே சொன்னான்

குருவாயூர் கோயிலில், ஒருவர் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு அதைச் சுத்தமாக வாசிக்கும் அளவுக்கு வடமொழி ஞானம் இல்லை. இருப்பினும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது சிறந்ததல்லவா? என்று நினைத்து சத்தமாகப் பாராயணம் செய்து கொண்டே இருந்தார். இவர் பாராயணம் செய்து கொண்டிருந்ததை மிகச்சிறந்த வடமொழி அறிஞர் ஒருவர் பார்த்து கண்டித்துச் சொன்னாராம். ‘‘ஓய்! உமக்கு, வடமொழிதான் வரவில்லையே. பிறகு, ஏன் தப்பும் தவறுமாக வாசித்துத் துன்பப்பட வேண்டும்? பகவான் திருநாமத்தை மரப்பிரபுவே என்று படிக்கிறீர்களே. அமரப் பிரபு என்றல்லவா பாராயணம் செய்ய வேண்டும். இனி பாராயணம் செய்யாதீர்’’.பக்தர் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு அழத் தொடங்கிவிட்டார்.‘‘ஏ, குருவாயூரப்பா, கண்ணா, எனக்கு இதை வாசிக்கக்கூடிய அளவுக்கு ஞானத்தை தந்திருக்கக் கூடாதா? இப்படிப் பிறந்துவிட்டேனே. இனி நான், எப்பொழுது வடமொழி கற்று, எப்பொழுது உன்னுடைய விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது?” என்று புலம்ப, அன்றைக்கு இரவே, அந்த பண்டிதர்கனவில் சென்ற குருவாயூரப்பன், ‘‘ஏ பண்டிதரே, அவன் எளிய பக்தன். அமரப் பிரபுவே என்றால் தேவர்களுக்கு தலை வன். மரப்பிரபு என்றால் வனத்தலைவன். நான் வனங்களுக்கும் அரசன் இல்லையா என்ன? அதில் என்ன தவறு.’’ என்று தன் பக்தனை விட்டுத் தராமல் பேசினாராம் பகவான் கண்ணன். இப்படிக் கண்ணனைப் பற்றிய சுவையான செய்திகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்போதைக்கு இந்த செய்திகளோடு நிறைவுசெய்து, கண்ணனின் பேரருளைப் பெறுவோம்!

ஜி.ராகவேந்திரன்

You may also like

Leave a Comment

seven − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi