கதை கேளுங்க… கதை கேளுங்க…

நன்றி குங்குமம் தோழி

ஒவ்வொருவருக்கும் ஒரு மென்டார் அல்லது ரோல் மாடல் இருப்பார். ஒரு சிலர் அவரின் அப்பாவை ரோல் மாடலாக பார்ப்பார்கள். சிலர் சிங்கப் பெண்ணான தன் அம்மாவினை அவ்வாறு நினைப்பார்கள். இவர்கள் எது சொன்னாலும் செய்தாலும் அவர்களுக்கு அது பிரமிப்பாக இருக்கும். அவர்கள் சொல்லும் விஷயங்களை எந்தவித எதிர்ப்பும் இன்றி பின்பற்றுவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அம்மா, அப்பாவைத் தாண்டி மூன்றாம் நபரின் ஆலோசனையும் நமக்கு அவசியமாக இருக்கும்.

அப்படி ஒரு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார் சென்னையை சேர்ந்த ரேணுகா தினகரன். இவரின் ஸ்பெஷாலிட்டியே கதைச் சொல்வது தான். தன்னுடைய கதைகள் மூலம் பலரின் மனக்குழப்பத்திற்கு ஒரு தீர்வினை அளித்து வருகிறார். இவர் சொல்லும் கதைகள் அனைத்தும் எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதைகள். அதில் உள்ள உளவியலை கையில் எடுத்துக் கொண்டு பலரின் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகிறார் ரேணுகா. நீங்கள் செய்து வரும் பணி பற்றி கூறுங்கள்?

நான் Transformation Coach ஆக இருக்கிறேன். ஒரு ஆணோ, பெண்ணோ அவர்களை ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவி வருகிறேன். அதாவது அவர்கள் உடல்நிலை, மனநல பிரச்னை கொண்டவர்கள் கிடையாது. போட்டி நிறைந்த இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நிலையில் இருந்து எப்படி அடுத்த உயர்ந்த நிலைக்கு செல்லலாம் என்பது குறித்து தனிப்பட்ட முறையில் பேசி அதற்கான தீர்வினை தருகிறேன். நான் நல்லாதான் இருக்கேன்.

எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், வாழ்க்கையில் மேலும் உயர வழி சொல்லுங்கள் என்று என்னை நாடி வரும் பலருக்கு வழி சொல்லி அவர்களை வாழ்வில் மேலும் வெற்றிபெற செய்து வருகிறேன். இதற்கு என்று நான் எந்த தனிப் பயிற்சியோ, படிப்போ படிக்கவில்லை. எனது இருபது வருட அனுபவ திறமையில் நானே சிந்தித்து உருவாக்கிய முறைகளை பயன்படுத்தி பலரை முன்னேற்றப் பாதையை நோக்கி பயணம் செய்ய என்னுடைய கதைகள் மூலம் உதவுகிறேன்.

நான் பிறந்தது படிச்சது எல்லாம் சென்னையில்தான். எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் பெற்றேன். அப்பாவிற்கு டெலிபோன் இலாகாவில் வேலை. அம்மா எழுத்தாளர். என் கணவர் வங்கி ஊழியராக வேலைப் பார்த்தவர். இரண்டு மகன்கள்.

கதை சொல்லும் கலையில் நீங்கள் புகழ் பெற்றது எப்படி?

நான் ஒரு கதைச்சொல்லியாக பணியாற்றி வருகிறேன். மேலும் இது குறித்தும் பெற்றோர், பொதுமக்கள், மாணவர்கள், மாணவிகளுக்கு பயிற்சி பட்டறைகளை கடந்த எட்டு வருஷமாக நடத்தி வருகிறேன். இந்த பயிற்சி பட்டறைக்கு வருபவர்களுக்கு குறிப்பிட்ட வயது என்று கிடையாது. இங்கு பதிமூன்று வயது முதல் எண்பது வயதுள்ளவர்கள் வரை என்னுடைய கதையினை கேட்க வருகிறார்கள். நான் குறிப்பாக எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய கதைகளையும் முழுமையாக படித்து அவற்றை உள்வாங்கி அதனை பல மேடைகளிலும், யுடியூப் சேனல்களிலும் சொல்லி வருகிறேன். முக்கியமாக ஜெயகாந்தன் கதைகளில் உள்ள உளவியல் பார்வைதான் என்னுடைய பேச்சில் இடம் பெறும். அதுதான் பலரின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக எனக்கு பல விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள் கிடைத்துள்ளது. எனக்கு ‘ஜெயகாந்தனி” என்ற சிறப்புப் பட்டம் தந்து கௌரவித்தார்கள். அதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.

கதைச் சொல்லும் பணியில் மறக்க முடியாத விஷயங்கள்

நான் ஜெயகாந்தன் எழுதிய ‘துறவு’ என்ற கதையை சொன்னதை கேட்டு தன் மகனை எதற்கெடுத்தாலும் திட்டுவதை நிறுத்திக் கொண்டனர் ஒரு பெற்றோர். அந்தக் கதையைக் கேட்ட பிறகு தங்களின் மகளை மிகவும் பாசத்துடனும், அன்போடும் நடத்துவதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதேபோல் நான் கூறிய மற்ெறாரு ஜெயகாந்தன் அவர்களின் கதையை கேட்டு, ஒரு குழப்பமான மனநிலையில் இருந்த இளம்பெண் தன் குழப்பங்கள் அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சி பெற்றதாக கூறினார். இந்த இரண்டு நிகழ்வுகளும் என் கதையால் மற்றவர்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த முடிகிறது என்று நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருந்தது.

எதிர்கால லட்சியம்

2019ல் என் பணியினை யுடியூப் சேனல் மூலம் ஆரம்பித்தேன். அடுத்த தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ளக்கூடிய பல தகவல்களை இதில் மேலும் மேம்படுத்த திட்டமிட்டு இருக்கிறேன். மேலும் பல ஊர்களுக்கு சென்று அங்கு மக்களை நேரடியாக சந்திக்க இருக்கிறேன். சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். அவற்றை தொகுப்பு நூலாக வெளியிடும் எண்ணம் உள்ளது என்றார் ரேணுகா.

தொகுப்பு: விஜயா கண்ணன்

Related posts

கிச்சன் டிப்ஸ்

1965 மணி நேரம்…81 நாட்கள் 165 பேர் உருவாக்கிய ஆலியாபாட் சேலை

சிலம்பத்தையும் விளையாட்டுப் போட்டியாக பார்க்க வேண்டும்!