பட்டியலினத்தவர்களுக்கு பூணூல் ஆளுநர் ரவி அடுத்த சர்ச்சை

காட்டுமன்னார்கோவில்: பட்டியலினத்தவர்கள் உட்பட மாற்று சாதியினருக்கு பூணூல் அணிவித்து அடுத்த சர்ச்சையை ஆளுநர் ஆர்.என்.ரவி கிளப்பியுள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த ம.ஆதனூர் கிராமத்தில் சைவ சமயத்தின் 63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப்போவார் நந்தனார் குருபூஜை விழா நேற்று நடந்தது. திருநாளைப்போவார் அவதார ஸ்தலத்தில் நேற்று காலை தமிழ் சேவா சங்கமும், சிவகுலத்தார் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய குருபூஜை மற்றும் சிவகுலத்தாரின் உபநயன பெருவிழா காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நந்தனாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பகல் 11.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பட்டியலினத்தவர்கள் உள்ளிட்ட மாற்று சமயங்களை சேர்ந்த சிவனடியார்களுக்கு உபநயனம் செய்து, பூணூல் அணியும் நிகழ்ச்சி நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி நாகராஜன் வரவேற்றார். மும்பை மாறன் நாயகம், தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், விவசாய வயலில் களை விளைந்திருந்தால் அதனை மட்டும்தான் அகற்ற வேண்டுமே தவிர அதற்காக ஒட்டுமொத்த பயிரையுமே அழிக்க நினைப்பது தவறு. சனாதனத்தில் ஏற்றத் தாழ்வுகளை போதிக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு காலம் கடந்து விட்டது. இன்னும் சாதி, மதம், இனம் பாகுபாடுகளால் ஏற்படும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றார்.பட்டியலினத்தவர்களுக்கு பூணூல் அணிவித்ததன் மூலம் அடுத்த சர்ச்சையை ஆளுநர் கிளப்பி இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு

மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்: செம்மறியாடுகளோடு வியாபாரிகள் குவிந்தனர்