மதுபானக் கொள்கை வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்: டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை என்று தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். டெல்லி மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின், துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.எல்.சியுமான கே.கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், கடந்த மார்ச் 21ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் இதையடுத்து தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் முடிவடைந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இந்த விவகாரத்தில் முன்னதாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவின் படி தகுதியின் அடிப்படையில் ஜாமீன் கேட்டு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனுவானது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற கோடைக்கால அமர்வு நீதிபதி நியாய் பிந்து அமர்வில் இரண்டாவது நாளாக நேற்று விசாரணை வந்தது.

இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விக்ரம் செளத்திரி,\”டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அனைத்து வழக்குகளும் கறைபடிந்தவர்களின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். அதுமட்டும் கிடையாது கெஜ்ரிவாலுக்கு எதிராக செயல்படும் பட்சத்தில் சம்பிரதாயத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டால் கூட அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இது வழக்கா அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தரப்படும் துன்புறுத்தலா? என்று வித்தியாசம் தெரியாத அளவுக்கு இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை உள்ளது. குறிப்பாக இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் இருக்கு எம்.எல்.சி.கவிதாவும் டெல்லி மதுபான முறைகேட்டை முழுமையாக மறுத்துள்ளார். எனவே இவை அனைத்தையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, ‘‘டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் பணமோசடி தொடர்பான குற்றம் நடந்துள்ளது. அதனால் தான் வழக்கு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பங்கு என்ன மற்றும் எவ்வளவு என்பது தான் எங்களது தரப்பின் விசாரணையாக மேற்கொண்டு வருகிறோம். சட்டப்பிரிவு 45ன் படி இந்த பணமோசடி நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நியாய் பிந்து, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நேற்று காலை தெரிவித்தார். இந்தநிலையில் நேற்று இரவு அவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி நியாய் பிந்து அதிரடியாக தீர்ப்பளித்தார். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் வாதங்கள் அனைத்தும் ஏற்க கூடியதாக இல்லை. எனவே அதனை நீதிமன்றம் நிராகரிக்கிறது என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட அமலாக்கதுறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஜோஹெப் உசைன், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அதன் சட்டப்பூர்வ தீர்வுகளைப் பயன்படுத்தும் வரை இந்த உத்தரவை 48 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்குமாறு கேட்டார். ஆனால் அமலாக்கத்துறை கோரிக்கையை நீதிபதி பிந்து நிராகரித்தார்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி