ஓட்டலில் திறக்காத மதுபாருக்கு வசூலித்த கட்டணத்தை திரும்ப கோரிய மனுவை பரிசீலிக்க வேண்டும்: கலால் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஓட்டலில் திறக்காத பாருக்கான கட்டண தொகையை திருப்பிக் கொடுக்க கோரிய மனுவை 6 வாரத்தில் பரிசீலிக்க கலால் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியில் அம்பிகா எம்பையர் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பே, மார்ச் 17ம் தேதி முதல் மதுபான கடைகள், ஓட்டல்களில் உள்ள பார்களை மூட அரசு உத்தரவிட்டது. இதன்படி எங்கள் ஓட்டலில் உள்ள பார் மூடப்பட்டது. இதையடுத்து, ஊரடங்கு காலத்தில் ஓட்டல் மறுசீரமைக்கும் பணிகளை தொடங்கினோம். இதுவரை அந்த பணி முடிவடையவில்லை. இதனால் ஓட்டலும், அதில் உள்ள பாரும் திறக்கப்படவில்லை.

ஆனால், 2020-21 மற்றும் 2021-22ம் ஆண்டுகளுக்கான மதுபான விற்பனை உரிமம் உள்ளிட்டவைகளுக்கு 9 லட்சத்து 18 ஆயிரத்து 750 ரூபாயை கட்டணமாக எங்களிடம் இருந்து கலால் துறை வசூலித்து விட்டது. இந்த தொகையை திருப்பிக் கேட்டு 9 முறை மனு கொடுத்தும் எந்த பதிலும் இல்லை. எனவே எங்களின் மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, பார் திறக்கவே இல்லை என்றபோது, உரிமம் கட்டணத்தை வசூலிக்க முடியாது. எனவே, அந்த தொகையை திருப்பி அளிப்பது தொடர்பான மனுவை கலால் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கோரிக்கை மனுவை 6 வாரத்துக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கலால்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்