புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. டெல்லி புதிய மனுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை இரண்டும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி துணைமுதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி சிபிஐ கைது செய்தது. பின்னர், இதே வழக்கில் அமலாக்கத்துறையும் அவரை கைது செய்தது.

இதையடுத்து சிசோடியா துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது வரை திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேவழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், எம்.எல்.சி.கவிதா ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதில் வழக்கில் ஜாமீன் கேட்டு மணீஷ் சிசோடியா முன்னதாக இரண்டு முறை தாக்கல் செய்திருந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.இந்நிலையில் ஜாமீன் கேட்டு சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு: பணமோசடி வழக்கின் சட்டப்பிரிவு 45ஐ மட்டும் வைத்துக் கொண்டு இந்த வழக்கின் விசாரணையை அமலாக்கத்துறை தொடர்ந்து காலதாமதம் செய்துள்ளது. பணமோசடி சட்ட விதி 45ஐ நாங்கள் விரிவாக ஆய்வு செய்தோம். அதில் நீண்ட நாட்களாக சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு தளர்வு வழங்கலாம் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று விசாரணை நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவை ஜாமீன் தொடர்பான வழக்கு விசாரணையை தாமதப்படுத்தி உள்ளன. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சட்டவிதிகளை மறந்து செயல்பட்டுள்ளன. அமலாக்கத்துறையை பொறுத்தவரை நம்பகமற்ற நகலை தயாரிக்க 80 நாட்கள் வரை கால அவகாசம் எடுத்துள்ளனர். இது வேடிக்கையான ஒன்றாக இருக்கிறது. இருப்பினும் கடைசி வரை விசாரணையின்போது உண்மையான ஆதாரங்களை அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

விசாரணை அமைப்புகள் விசாரணையை மேற்கொள்வதில் செய்துள்ள தாமதம் என்பது சிசோடியாவின் சுதந்திரம் மற்றும் தனி உரிமை ஆகியவற்றை பறிக்கும் வகையில் இருந்திருக்கிறது. விசாரணையை நிறைவு செய்யும் வரை ஒருவரை சிறையிலேயே அடைப்பது என்பது அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறும் செயலாகும். சிசோடியா தப்பி ஓடவும், விசாரணையில் இருந்து தப்பிக்கவும் முடியாது.எனவே சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்குகிறோம்.

இருப்பினும் அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். ரூ.10 லட்சத்திற்கான பிணை தொகையை வழங்க வேண்டும். வாரத்தில் ஒவ்வோரு திங்கட்கிழமையும் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜாராகி தான் இருப்பதை கையெழுத்திட்டு உறுதி செய்ய வேண்டும். சாட்சியங்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது” என்று நீதிபதிகள்தீர்ப்பளித்தனர். இதையடுத்து, நேற்று மாலை திகார் சிறையில் இருந்து மணீஷ் சிசோடியா விடுதலை செய்யப்பட்டார். கொட்டும் மழையில் திரண்டிருந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related posts

ரூ.60 லட்சம் வரி நிலுவை: 2 தியேட்டர்களுக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ரூ.5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

தமிழாசிரியர் பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமா?: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்