மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்

டெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. அதேவேளை, டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அதேவேளை, இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து வருகிறார்.அந்த வகையில் அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20ம் தேதி டெல்லி கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி ஐகோர்ட் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஜூலை 12ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், சிபிஐ பதிவு செய்துள்ள ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி கிருஷ்ணா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். அதேவேளை, கெஜ்ரிவால் தரப்பில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி, இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார். அதேவேளை, சிபிஐ வழக்கில் தனக்கு வழக்கமான ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு வரும் 29ம் தேதி டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மருத்துவ பிழை, மருந்து பிழை, மருந்தக பிழை, மருத்துவ உபகரண செயல்இழப்புகளால் நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் தவறுகள்: விழிப்புணர்வு நாளில் ஆதங்கம்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர் மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் மனு..!!

தரைப்பாலத்தின் நடுவே விரிசலால் ஆபத்து: புதிதாக கட்ட 10 கிராமமக்கள் வேண்டுகோள்