மது வழக்கில் கைதானவரின் வங்கி கணக்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர காவல் ஆய்வாளரின் முத்திரையை பயன்படுத்தி போலி கையெழுத்து போட்ட 2 காவலர்கள் பணியிடை நீக்கம்: மாவட்ட எஸ்பி அதிரடி நடவடிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மது வழக்கில் முடக்கப்பட்ட வங்கி கணக்கை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர காவல் ஆய்வாளரின் முத்திரையை பயன்படுத்தி, அவரை போல் போலி கையெழுத்து போட்ட 2 காவலர்களை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தற்போது மங்களபிரியா என்ற பெண் ஆய்வாளர் பணிபுரிந்து வருகிறார்.

முன்னதாக, கடந்த 2 மாதங்களுக்கு முன் கடப்பாக்கம் அருகே சேம்புலிபுரம் பகுதியில் குருசாமி என்பவரை கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்ததாக மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரது வங்கி கணக்கையும் முடக்கியுள்ளனர். இதற்கிடையே, மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்ட குருசாமியை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது வங்கி கணக்கில் சுமார் ரூ.6.30 லட்சம் மது விற்ற பணம் இருந்துள்ளது.

இதுகுறித்து மதுவிலக்கு காவல் ஆய்வாளரிடம் குருசாமி விசாரித்துள்ளார். அதற்கு அவர், முறையாக நீதிமன்றத்தை அணுகவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார். எனினும், மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி, தற்போது கூவத்தூர் காவல் நிலையத்துக்கு சென்றுள்ள தலைமை காவலர்கள் கோபிநாத், மணிகண்டன் ஆகிய 2 பேரிடம் இப்பிரச்னை குறித்து சாராய வியாபாரி குருசாமி ஆலோசனை கேட்டுள்ளார்.

இந்த ஆலோசனையில், எனது வங்கி கணக்கை மீண்டும் இயக்குவதற்கு நீங்கள் இருவரும் உதவி செய்தால், அதில் ரூ.1.50 லட்சத்தை உங்களுக்கு கமிஷனாகத் தருகிறேன் என்று சாராய வியாபாரி குருசாமி கூறியுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட தலைமைக் காவலர்கள் கோபிநாத், மணிகண்டன் ஆகிய இருவரும், மதுராந்தகம் காவல் ஆய்வாளரின் அலுவலக முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தி, ஒரு போலி பத்திரம் எழுதி, அதில் காவல் ஆய்வாளர் மங்களபிரியாவின் கையெழுத்தை போலியாக போட்டு, சாராய வியாபாரி குருசாமியிடம் கொடுத்துள்ளனர்.

இக்கடிதத்தை பெற்றுக் கொண்ட சாராய வியாபாரி குருசாமி, கடப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கி மேலாளரிடம் வழங்கியுள்ளார். அக்கடிதத்தை ஆய்வு செய்த வங்கி மேலாளர், சம்பந்தப்பட்ட பெண் காவல் ஆய்வாளரை தொடர்புகொண்டு கேட்டிருக்கிறார். அதற்கு, நான் எந்தவொரு கடிதமும் கொடுத்து அனுப்பவில்லை என்று பெண் காவல் ஆய்வாளர் மங்களபிரியா கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் முழு விசாரணை நடத்தியபோது, இக்கடிதத்தை போலியாக தயாரித்து தலைமைக் காவலர்கள் கோபிநாத், மணிகண்டன் ஆகிய 2 பேரும் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தலைமை காவலர்கள் கோபிநாத், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி சாய்பிரணீத் அதிரடியாக உத்தரவிட்டார். வேலியே பயிரை மேய்வது போல திருடனுக்கு துணை போன காவலர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related posts

ஆந்திராவில் அனைத்து கோயில்களின் பிரசாதங்களையும் ஆய்வுசெய்ய ஒன்றிய அரசு முடிவு

உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு: திருச்செந்தூர் சென்று திரும்பிய நிலையில் சோகம்

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு!