நிறம் மாறும் அதிசய லிங்கம்

திருவானைக்கா ஜம்புநாதருக்கு தன் வாய் நூலால் வலைப்பந்தல் நெய்து குளிர் நிழலில் சிவபூசை புரிந்த சிலந்தி, இப்போது ஈசனின் லீலா வினோதத்தால் வேறொரு உருகொண்டது. தன் பிறவிச் சிக்கலை மெல்ல களையத் துவங்கியிருந்தது.சட்டென்று, தன் கோவைப்பழம் போன்ற சிவந்த கண்களையுடைய கோச்செங்கணான் எனும் சோழ மாமன்னன் மெல்ல தன் இமைகளை மூடினான். சிவபக்தி எனும் பெருந்தீ அகத்தில் மூண்டது. தன் முற்பிறவி வினை முடியாமல் மீதமிருந்தது. உள்ளுக்குள் சுருட்டிய தும்பிக்கையாய் இருந்த அந்தமுற்பிறவியின் நினைவுகள் இப்பிறப்பிலும் வலிமையாக மிக வினோதமாய் தன்னை முட்டியது. எழுபது முறை யானை பிய்த்துப்போட்ட பந்தலை இப்போது கற்கோயில்களாக மாற்றிக் கொண்டிருந்தது. தன் பிறவிச் சுழற்சியின் மையத்தை தொட்டாலும், சிவபூஜை பாதியாய் முடிந்ததே என்ற கவலை மிகுந்திருந்தது. கவலையூடே மூடியிருந்த இமைகளை கரிய பேருருவான யானை நிழலாய் நகர்ந்து மறைத்துச் செல்வது பார்த்து அதிர்ந்தான். செங்கணான் தன் சிவந்த கண்களை பளிச்சென்று திறந்தான். ஆனால், அந்த யானை அக்கோயிலுக்குள் புகமுடியாதது பார்த்து மகிழ்ந்தான். ஆஹா…. தன் பூஜையை இடறிய ஆனைக்கா ஆனை நிச்சயம் புகமுடியாது என களிப்பெய்தினான். மாமன்னன் மகிழ்ந்தது பார்த்து மக்கள் வினோதம் கொண்டனர். அதில் சிலருக்கு மட்டும் வினோதத்தின் உண்மை புரிந்திருந்தது. நம் மாமன்னர் செங்கணார் இது போல யானை புகா எழில்மாடமாக எழுபது கோயில்கள் எடுப்பிக்கப் போகிறாராம் எனப்பேசிப் பேசி மாய்ந்து போனார்கள். அது கேட்டு செங்கணான் இன்னும் உவகை கொண்டான்.

ராஜரிஷிகள் அமர்ந்திருந்த சபையைப் பார்த்து அடுத்து எங்கே எழில் மாடம் எடுப்பிப்பது என்றார். செங்கணாரின் செம்மையான சிவபக்தியை பார்த்த ரிஷிகள் அகம் மகிழ்ந்தனர். ஒன்று கூடி தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அதில் ஒருவரிடம் இன்ன இடம் என்று சொல்லச் சொன்னார்கள். அந்த ரிஷி எழுந்தார். மிக மெல்லிய குரலில் குழைவாய் திருநல்லூர் என்று பகர்ந்தார். செங்கணார் ஒரு கணம் சிலிர்த்தார்.செங்கணார் கண்கள் குளமாயின. மெல்ல எழுந்து திருநல்லூர் திக்கு நோக்கி தம் இரு கரங்களையும் சிரசுக்கு மேல் உயர்த்தினார். மறுநாளே திருநல்லூருக்கு விரைந்தார். எழில் மாடம் அமைக்கும் பணியைத் தொடங்கினார். ஈசனின் சந்நதியை உயரே அமைத்து படிகளை செங்குத்தாக்கி வழியை குறுகலாக மாற்றச் சொன்னார். அந்த திருப்படிகளின் கீழ் கண்கள் மூடி ‘‘ஆனைக்கா யானை புகாது காப்பாய் கணநாதா’’ என முழுமுதல் விநாயகனை பிரதிஷ்டை செய்தார்.

கோச்செங்கட்சோழர் வாழ்ந்தது சங்ககாலம். அவர் எடுப்பித்த மாடக்கோயில்களில் திருநல்லூர் மிக முக்கியமானது. சுந்தரமூர்த்தி நாயனார், செங்கணாரின் அடியவனாய் தன்னைப் பாவித்து ‘‘தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க்கடியேன்’’ என அவர் திருவடிப் பரவுகிறார். வைணவப் பெருமானான திருமங்கை ஆழ்வார்கூட ‘‘எண்டோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்துலகமாண்ட திருக்குலத்துவளச் சோழன்’’ எனப் பிரபந்தம் பாடிச் சிறப்பிக்கிறார்.செங்கணார் மட்டுமின்றி சங்ககாலத்துக்குப் பிறகு வந்த அப்பர் பெருமான் திருநல்லூரை தம் சிரசுச் சிகரத்தில் சூடி மகிழ்ந்த விஷயம் நெகிழ்ச்சுக்குரியது.திருநாவுக்கரசர் நானிலமும் நடந்தார். நாமணக்கும் நாதன் நாமமான நமச்சிவாயத்தை எல்லோர் நாவிலும் நடம்புரிய வைத்தார். தன் நடை தளரும் வயதிலும் கூட உழவாரப் பணியை வழுவாது செய்து வந்தார். திருச்சத்தி முற்றம் அடைந்து கொழுத்துச் சிவந்திருக்கும் ஈசனைக் கண்டு கண்ணீர் சொரிந்தார். சிவக்கொழுந்தீகுழைந்து தழுவிக் கிடக்கும் பெரிய நாயகியைக் கண்டு, ஈசனின் பேரணையால் தீந் தமிழ் பாக்களை மாலையாக்கி மகேசனின் பாதத்தில் சூட்டி மகிழ்ந்தார். மாலை சூடிய நாயகன் தன்னைப் பல்வேறு திருவுருவங்களாய் தரிசனம் அளித்தான். பேரானந்தப் பெருவெள்ளத்தில் அவரை முகிழ்த்தினான். ஆனாலும், எங்கோ தீராத ஏக்கம் நாவுக்கரசரின் நெஞ்சை தவிக்க வைத்தது.

நாவுக்கரசர் நம்மீது கருணை கொண்டவரான அவர், ‘‘எம் தலையில் பதித்ததுபோல் உம்மை நாடிவரும் பக்தர்பெருமக்களின் தலையிலும் திருவடி பதிக்க வேண்டுகிறேன்’’ என வினயமாய் கேட்க ஈசனும் சரியென்று உகந்தான்.அந்த செங்குத்தான மாடக்கோயில்படிகளில் ஏறும்போதே செங்கணானின் நினைவு நெஞ்சுருக்கும். கல்யாணசுந்தரேஸ்வரர் சந்நதியை நெருங்க சாந்நித்யம் நெஞ்சை நிறைக்கும். சுயம்பாய் பொங்கிய லிங்கத்தின் அமைப்பு நம்மை சிலிர்த்திட வைக்கும். இன்றும் லிங்கத்தினுள் சப்தரிஷிகளும் பிரளயத்தின்போது ஒடுங்கும் விதமாக ஏழு துளைகள் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது பிரபஞ்சத்தின் மாற்றத்திற்குக் காரணமாக இத்தல ஈசன் விளங்குவதால், லிங்கத்தின் நிறம் ஆறு நாழிகைக்கு ஒருமுறை மாறுவது பார்க்க உடல் சிலிர்க்கும். நாம் பார்க்கும்போதே அழகாய் நிறம் மாறும் அற்புதம் மனதை கொள்ளைகொள்ளும். காலைமுதல் தாமிரநிறம், இளம் சிவப்பு, உருக்கிய தங்கம், கரும்பச்சை, இன்ன நிறமென்று சொல்லமுடியாத தோற்றம் என்று இரவு வரை தொடர்ச்சியாக வண்ணம் மாறிக்கொண்டே இருக்கும். அதனாலேயே பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். நாவுக்கரசர் ஈசனிடம் வேண்டிக்கொண்டது போல,

இன்றும் பெருமாள் கோயிலில் சடாரி கொண்டு ஆசியளிப்பதுபோல, ஈசனின் திருவடிகளை பக்தர்களின் தலையில் பதித்து ஆசியளிப்பது இங்கு நிரந்தர வழக்கமாக உள்ளது. சிவன் சந்நதிக்கு அருகிலேயே மலைமகளான கிரிசுந்தரி அருள் அமுதமாக நிற்கிறாள். உயர்ந்த திருவுருவம் உடைய கிரிசுந்தரி அருளைப் பொழிவதில் மேருவை விட உயர்ந்தவளாய் விளங்குகிறாள்.நல்லூரின் புகழ்சொல்லும் இன்னொரு விஷயம், இத்தலத்து பிராகாரத்தில் அமைந்துள்ள நல்லூர்அஷ்டபுஜமாகாளியே ஆவாள். பிரளயத்தோடு காளிக்கு நெருங்கிய தொடர்பிருப்பதால் இங்கு அமர்ந்துள்ளாள். காளி என்றாலே கோரமுகமும், ஆவேசமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இம்மாகாளி புன்னகை பூக்கும் இனிய நாயகி. மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவள். ஆக்ரோஷமே இல்லாது அமைதியாய் அமர்ந்திருப்பாள். ஆகவே, மழலைச் செல்வம் இல்லாதவர்கள் காளியை வேண்டிக் கொண்டு, அவளருளால் நிறைசூல் கர்ப்பிணியாக மாகாளி எதிரே அமர்ந்து வளைகாப்பு விழா செய்து கொள்கிறார்கள். அவளின் இருகைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகுபார்க்கிறார்கள். அதுமட்டுமல்லாது, கல்யாணசுந்தரேஸ்வரர் அருளால் திருமணமான தம்பதிகள் குழந்தைச் செல்வம் தா தாயே கைகூப்பி வேண்டுவதை இங்கு நித்தமும் காணலாம்.இப்பெருங்கோயில் கும்பகோணம் – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுந்தரபெருமாள்கோயில் எனும் ஊருக்கு அருகே உள்ளது. நல்லூர் செல்லுங்கள். நல்வாழ்வைப் பெற்றிடுங்கள்.

Related posts

சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா?

துலாம் ராசி குழந்தை

ஜாதகத்தில் விவாகரத்தை கண்டுபிடிக்க முடியுமா?