விவசாயியை கொலை செய்த வழக்கு தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை: கடலூர் கோர்ட் தீர்ப்பு

கடலூர்: விவசாயியை கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே எனதிரிமங்கலம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் மகன் மார்ஷல் டிட்டோ(27). அதே பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். மார்ஷல் டிட்டோவுக்கும், தேவநாதனுக்கும் மாட்டு வண்டி ஓட்டுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேவநாதன் தனது தந்தை சக்திவேலிடம் கூறியுள்ளார். கடந்த 18.9.2016ம் ஆண்டு மார்ஷல் டிட்டோவும், கிறிஸ்துராஜும் மாட்டு வண்டியில் வந்தபோது அங்கு வந்த சக்திவேல் (53), அவரது ஆதரவாளரான சண்முகம்(54), இவரது மகன் பாலு மகேந்திரன்(29), ராஜீவ் காந்தி(36) ஆகியோர் முன்விரோதம் காரணமாக அவர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

பின்னர் அவர்கள் தடி மற்றும் இரும்பு பைப்பால் கிறிஸ்துராஜ், மார்ஷல் டிட்டோவை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கிறிஸ்துராஜ் புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து, சக்திவேல், சண்முகம், பாலு மகேந்திரன், ராஜீவ் காந்தி ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது கடலூர் மாவட்ட முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இவ்வழக்கில் நீதிபதி பிரகாஷ் தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், சக்திவேல், சண்முகம், பாலு மகேந்திரன், ராஜீவ் காந்தி ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது’ என்றார்.

 

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்