சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேர்தல் தோல்வியை கண்டுபிடிக்க அல்வா தொகுதியில் நடந்த தேசியக்கட்சி கூட்டத்துக்கு வேட்பாளரா போட்டியிட்டவர் மட்டும் போகவே இல்லையாமே..’’ என முதல் கேள்வியை கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தேசிய கட்சியினர் தேர்தல் தோல்விக்கு என்ன காரணம்னு அல்வா மாவட்டத்தில் கூட்டம் போட்டு யோசித்தார்களாம்.. அந்த தொகுதியில் அந்த கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான மாஜி இலைக்கட்சி விஐபிதான் தான் தேர்தலில் போட்டியிட்டாரு.. இலைக்கட்சியில் விஐபியாக இருந்த அவர் தேசிய கட்சிக்கு தாவிய பிறகு அதிகபட்சம் எம்எல்ஏதான் ஆக முடிந்தது.. 3 முறை எம்எல்ஏவாகி விட்ட அவருக்கு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் விவிஐபியாகி விடலாம்னு ஆசை. அதை மனதில் வைச்சிக்கிட்டுத்தான் ஏற்கனவே ராமநாதபுரத்தில் குதித்து தோல்வியடைந்தாரு..

இதனால் இந்த முறை அல்வா தொகுதியை மனதில் வைத்து 6 மாதங்களுக்கு முன்பே வேலையை துவக்கியிருக்காரு.. கட்சித் தலைமையிடம் முட்டி சீட்டும் பெற்று களம் கண்டார். ஆனாலும் 2ம் இடத்தைதான் அவரால பிடிக்க முடிஞ்சிருக்கு.. இந்த தோல்வி குறித்து ஆலோசிக்க மாஜி கவர்னர் பெண்மணியை கட்சித் தலைமை அனுப்பி இருந்தது.. கூட்டத்தில் பேசிய தேசிய கட்சியின் நிர்வாகிகள் பலர், வேட்பாளரது உறவினர்கள், நண்பர்கள் தான் தேர்தலில் அனைத்து பணியையும் கவனிச்சாங்க… கட்சிக்காரர்களை தேர்தல் பணிக்கு அழைக்கவில்லை, எந்த கவனிப்பும் செய்யவில்லைனு குறைபட்டாங்களாம்.. அந்த குறைகளை எழுத்துப்பூர்வமாக தாருங்கன்னு அம்மணி கேட்டு வாங்கிக் கொண்டாராம்.. ஆனால் வேட்பாளராக போட்டியிட்டவர் மட்டும் கடைசி வரை கூட்டத்திற்கு வரவே இல்லையாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சியின் மாஜி தேசிய செயலாளர் தற்காலிக தலைவர் பதவிக்கு முயற்சி செய்தும் பலனளிக்காததால் செம அப்செட்டில் இருக்காராமே..’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.

‘‘வடமாநில நதி பெயர் கொண்ட மாவட்டத்தின் மலராத கட்சியின் மாஜி தேசிய செயலாளர் செம அப்செட்டில் இருக்கிறாராம்.. கட்சியில் எந்த பதவியும் வழங்காமல் கடந்த சில ஆண்டுகளாக இவர் ஓரங்கட்டப்பட்டுள்ளாராம்.. எம்பி தேர்தலிலும் போட்டியிட நிச்சயம் சீட் கிடைக்காதுன்னு தெரிந்து, கட்சி சீட் வழங்காமல் புறக்கணிப்பதற்கு முன்னரே கவுரவமாக ஒதுங்கி விடுவது நல்லது என்பதுபோல, ‘நான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை’னு அறிவித்தார்.

அப்புறம், எம்பி தேர்தலில் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தாமரை மலராத நிலையில், பட்டாசு வெடித்து சர்ச்சையில் வேற சிக்கிக்கிடாரு.. தற்போது மாநில தலைவர் பதவி, தற்காலிக மாநில தலைவர் பதவியை பெற பல முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லையாம்.. ஏற்கனவே இவர் பேட்டி கொடுக்கிறேன் என்ற பெயரில், இப்பகுதியில் தேர்தல்களில் வெற்றி பெற முடியாத அளவிற்கு கட்சியை காலி செய்து வைத்திருக்கிறார், முக்கிய பதவியை கொடுத்தால் கட்சி இருக்கும் இடமே தெரியாமல் செய்து விடுவார். இவர் பேசாமல் இருந்தாலே போதும்னு சொந்த கட்சிக்காரங்களே முணுமுணுக்கின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சொந்த மாவட்டத்திலேயே மாறு ேவடத்தில் தங்கியிருக்கிற நிலைமைக்கு இலைக்கட்சி மாஜி அமைச்சர் தள்ளப்பட்டிருக்கிறதா ஆதரவாளர்கள் பேசிக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தை சேர்ந்த இலைக்கட்சி மாஜி அமைச்சர் ₹100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் சிக்கியதால் கைதுக்கு பயந்து பல நாட்களாக தலைமறைவாக இருந்து வருகிறாராம்.. முதலில் அவர் வெளி மாநிலத்துக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்பட்டது.

தொடர்ந்து, கேரளாவில் பதுங்கி உள்ளதாகவும் பேசப்பட்டது. ஆனால், மாஜி அமைச்சர் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் உள்ள கல்குவாரி பகுதிகளில் பதுங்கி இருப்பதாக கட்சிக்குள்ளே தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்… கல்குவாரிகளில் பணியாற்றும் நபர்களுக்கு கூட தெரிய வில்லையாம்.. அந்த அளவுக்கு மாறுவேடத்தில் பதுங்கியுள்ளாராம்… அவருக்கான உணவு உள்ளிட்டவை அனைத்தும் கச்சிதமாக நெருங்கிய ஆதரவாளர்கள் மூலமாக சென்று விடுகிறதாம்.. சிபிசிஐடி அதிகாரிகளை திசை திருப்பவே மாஜி அமைச்சர் வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்றுவிட்டதாக அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் வெளியே பேசிக்கிறாங்களாம்… என்றார் விக்கியானந்தா.

‘‘புறம்போக்கு நில பதிவு மோசடியில சஸ்பெண்ட் ஆனாலும் அலுவலகத்திற்கு யார் யார் வர்றாங்கன்னு அப்டேட் செய்யுற அலுவலர்பற்றி சொல்லுங்க..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல காட்டுப்பாடி தாலுகாவுல பத்திரத்தை பதியுற அலுவலகம் இயங்கி வருது.. இந்த அலுவலகத்துல கிரிவலம் கடவுள் பெயரை கொண்டவரு பணியாற்றி வந்தாரு.. இவரு பதிவு அலுவலரு இல்லாத நேரத்துல, பொறுப்பா இருப்பாருன்னு, பொறுப்பு அதிகாரியாக நியமிச்சாங்களாம்.. ஆனா அந்த அலுவலக கட்டுப்பாட்டுல இருக்குற புறம்போக்கு நிலத்தை, பத்திரமாக மாற்றி பதிவு செஞ்சி கொடுத்திருக்காராம்.. அதோட, அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளையும், பதிவு செஞ்சி கொடுத்து, பல எல்களை கறந்துட்டாராம்.. இப்படி எட்டு ஏக்கர் புறம்போக்கு நிலத்தை பதிவு செஞ்சது வெளிச்சத்துக்கு வந்திருக்காம்.. ஆனா 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை இப்படி ஆட்டைய போட்டதா ேபசிக்கிறாங்க..

இத முழுமையா விசாரிச்சா பூகம்பம்ேபால சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும்னு பரபரப்பா பேசப்படுது.. இந்த மோசடிக்காக பதிவு அலுவலரா இருந்தவரை சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்க.. ஆனாலும் அசராத கிரிவலம் கடவுள் பெயரை கொண்டவரு, காட்டுப்பாடி பதிவு அலுவலகத்தில, தினமும் யார் யார் வர்றாங்க, எவ்வளவு கமிஷன் கிடைக்குது என்கிற தகவலை கேட்டு தெரிஞ்சுக்கிறாராம்..

அதோட, விஜிலென்ஸ் போலீஸ் தன்னை பத்தி விசாரிக்க வந்தார்களா என்றும் அலுவலகத்தில இருக்கிற ஊழியர்களிடம் கேட்டு அப்பேட் செய்து கொள்கிறாராம்.. விஜிலென்ஸ் போலீசிடம் சிக்காமல் இருப்பது எப்படின்னு நெருங்கியவர்களின் உதவியை வேற கேட்டுள்ளாராம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!