நவம்பர் 1 முதல் லைசென்ஸ் கட்டாயம் கணினி இறக்குமதி மீதான தடை திடீர் ஒத்திவைப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: லைசென்ஸ் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து லேப்டாப், டேப்லெட் மற்றும் கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்வதற்கான தடையை வரும் அக்டோபர் 31ம் தேதி வரை ஒன்றிய அரசு ஒத்தி வைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து லேப்டாப், டேப்லெட், ஆல்-இன்-ஒன் கம்ப்யூட்டர், சர்வர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை ஒன்றிய அரசின் லைசென்ஸ் இல்லாமல் இறக்குமதி செய்ய தடை விதித்து கடந்த 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்ட இந்த உத்தரவால் தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் நேற்று முன்தினம் வெளியிட்ட மறுஅறிவிப்பில், இறக்குமதி தடை 3 மாதங்களுக்கு, அதாவது அக்டோபர் 31ம் தேதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. அதற்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் அரசிடம் உரிய இறக்குமதி உரிமம் பெற வேண்டும். நவம்பர் 1ம் தேதி முதல் உரிமம் பெற்ற நிறுவனங்களின் லேப்டாப், கம்ப்யூட்டர்கள் மட்டுமே இந்தியாவிற்குள் கொண்டு வர அனுமதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை உள்நாட்டில் கம்ப்யூட்டர் உற்பத்தியை ஊக்குவிக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவுக்கு போட்டியாக ஒன்றிய அரசு தற்போது எலக்ட்ரானிக்ஸ் துறையில் உலக முதலீடுகளை ஈர்க்க முன்னுரிமை அளித்து வருகிறது. இதனால் இந்த நடவடிக்கை உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் என நம்பப்படுவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Related posts

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை