எல்ஐசி நிறுவனத்தின் காலாண்டு பிரீமியம் வருமானம் ரூ.1,13,770 கோடியாக அதிகரிப்பு: மேலாண் இயக்குனர் தகவல்

சென்னை: எல்ஐசி நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.9,544 கோடியிலிருந்து 9.61% அதிகரித்து ரூ.10,461 கோடியாக உயர்ந்துள்ளது. முதல் ஆண்டு பிரீமியம் வருமானத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த சந்தை பங்களிப்பு 61.42 சதவீதத்தில் 64.2 சதவீதம் அதிகரித்துள்ளது. எல்ஐசி நிறுவனத்தின் காலாண்டு மொத்த பிரீமியம் வருமானம் ரூ.98,363 கோடியிலிருந்து 15.66% அதிகரித்து ரூ.1,13,770 கோடியாக உயர்ந்துள்ளது. தனிநபர் புதிய வணிக பிரிமியம் வருமானம் 13.67% அதிகரித்து ரூ.11,892 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த காலாண்டில் மொத்த பாலிசிகள் விற்பனை சென்ற ஆண்டை விட 10.86% அதிகரித்து 35,65,519 பாலிசிகளாக அதிகரித்துள்ளது. புதிய வணிகத்தின் மதிப்பு சென்ற ஆண்டை விட 23.66% அதிகரித்து ரூ.1,610 கோடியாக உள்ளது.
நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து மதிப்பு ரூ.46.11 லட்சம் கோடியில் இருந்து 16.22% அதிகரித்து ரூ.53.59 லட்சம் கோடியாக உள்ளது. கடனளிப்பு விகிதம் 1.89 மடங்கிலிருந்து 1.99 மடங்காக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த செலவு விகிதம் 12.85%ல் இருந்து 11,87% ஆக குறைந்துள்ளது.

இதுகுறித்து எல்ஐசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண் இயக்குனருமான சித்தார்த்த மொஹந்தி கூறுகையில், ‘‘இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனத்தின் சந்தைப் பங்கு 64.02% ஆக அதிகரித்துள்ளது. எல்ஐசி நிறுவனம் சந்தைப் பங்கை அதிகரிப்பதற்கான அதன் நோக்கத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்திய காப்பீட்டு துறையின் முன்னணி நிறுவனமான எல்ஐசி, மக்களின் காப்பீட்டு பாதுகாப்பை மேலும் உயர்த்தும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு வருவதோடு அந்த இலக்கை அடைய அரசு ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதில் உறுதியாக உள்ளது.

எங்களது பாலிசிகளின் பலன்களை மேம்படுத்துவதோடு செலவுகளை குறைத்து பெருக்குவதில் உறுதியாக உள்ளோம். லாப வரம்பை டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் உதவியோடு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்கள் பயணத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் இத்தருணத்தில் எங்களுக்கு தொடர்ச்சியான ஆதரவு அளித்து துணை நிற்கும் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், விற்பனையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்,’’ என்றார்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது