வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் உருக்குலைந்த லிபியா!: மீட்புப் பணிகளில் சுணக்கம் உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்..!!

டெர்னா: வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் தங்களது உறவினர்களை இழந்தவர்கள் மீட்பு பணியில் சுணக்கம் உள்ளதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் குதித்துள்ளனர். லிபியாவின் டெர்னா நகரை கடந்த 10ம் தேதி தாக்கிய டேனியல் புயலால் மிக கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 2 பெரிய அணைகள் உடைந்தன. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், உற்றார், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை இழந்தவர்கள் மீட்பு பணியில் அரசு சுணக்கம் காட்டுவதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கண்ணீருடன் அவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். காணாமல் போன 10,000 பேர் எங்கே? என கேள்வி எழுப்பினர். புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெர்னா நகரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை ஒரு பெண் கண்ணீருடன் புலம்பியபடி தேடும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, கடவுளே, இந்த வீட்டின் இடிப்பாட்டை நான் அகற்ற முடியுமா என்று தெரியவில்லை. என்னுடைய கைகளால்தான் இந்த இடிபாடுகளை அகற்ற வேண்டும். இந்த இடிபாடுகளை நான் அகற்றிவிட்டால் ஒரு உடலையாவது கண்டுபிடிப்பேன்.

சடலம் கிடைத்துவிட்டால்கூட என்னுடைய சகோதரன் அடக்கமாகிவிட்டான் எனக்கூறி நான் செல்வேன். தாயிம், ஹமுடா, லுக்மான், துமாடோர், ஹக்கிம் மற்றும் அவரது மனைவி… ஓ கடவுளே, என்னுடைய குடும்பத்தினரே நீங்கள் எங்கே? என்று கண்ணீருடன் கூறினார். 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வாழும் டெர்னா நகரில் பல ஆயிரம் பேரை அணைகளில் இருந்து வெளியான வெள்ளம் கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெர்னா நகரின் பெரும்பாலான பகுதிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உருக்குலைந்து போல் காட்சி அளிக்கின்றன.

Related posts

சென்னை-மஸ்கட் இடையே கூடுதலாக புதிய நேரடி விமான சேவையை தொடங்கியது சலாம் ஏர்” நிறுவனம்..!!

காமராஜர் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் தேசியத் திருவிழாவாக கொண்டாட வேண்டும்: செல்வபெருந்தகை வேண்டுகோள்

ஒரு கட்சி தலைவர் என்பதற்கான பண்பே இல்லாமல் சீமான் பேசுவதாக அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு