பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நூலகங்கள் : மெட்ரோ அதிகாரிகள் தகவல்

சென்னை: ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் நூலகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.

பயணிகளின் வசதிகளை மேம்படுத்த, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது வருவாயை அதிகரிக்க நிலையங்களுக்கு அருகில் கட்டிடங்களை கட்டி அலுவலகம் அல்லது சில்லறை கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், தற்போது மெட்ரோ ரயில் நிலையங்களில் பொது நூலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இம் முயற்சியானது தமிழ்நாடு அரசின் உதவியுடன் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் எப்போதும் பரபரப்புடன் இயங்கும் ரயில் நிலையமாகும். இங்கு தினமும் சுமார் 3 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். புத்தக ஆர்வலர்களின் வரவேற்பை பொறுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அடுத்து டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்திலும் நூலகம் திறக்கப்படும். இந்நூலகங்களில் புத்தக விற்பனை, டிஜிட்டல் திரை ஆகியவை அமைக்கப்படும். வசதியான இருக்கைகளில் அமர்ந்து ரயில் பயணிகள் புத்தகங்களை படிக்கலாம்.

இந்த நூலகம், ரயில் நிலையத்தில் மெட்ரோ டிக்கெட் வழங்கும் பகுதி அல்லது ஃபுட் கோர்ட் அருகில் அமையும். ரயில் பயணிகளுக்கு வாசிப்பு அனுபவத்தை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் இப்புதிய முயற்சியில், புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை பொது நூலகர்கள் செய்து வருகின்றனர். புத்தக வெளியீட்டாளர்கள் கொடுத்த பட்டியலின் அடிப்படையில், நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

* புத்தக ஆர்வலர்களின் வரவேற்பை பொறுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அடுத்து டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்திலும் நூலகம் திறக்கப்படும்.

Related posts

அரிசி ஆலைகளின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 1930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி

சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்