லெட்டர்பேடு கட்சியெல்லாம் சீட் கேக்குதே என இலைத் தலை நொந்து கிடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வெயிலூர்ல மலர் கட்சியோட நிர்வாகிங்க வேதனை குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்குதாமே’’ – கலகலப்பாக பேச்சைத் தொடங்கினார் பீட்டர் மாமா. ‘‘மலர் கட்சியோட மாநில தலைவர், ஸ்டேட் முழுக்க நடைபயணம்கிற பேரில ஒரு பயணத்தை மேற்கொண்டு வர்றாரு. 2 நாளைக்கு முன்னாடி வெயிலூருக்கு வந்தாரு. அவரை சந்திக்க, இந்த மாவட்டத்துல ஆரம்பத்துல கட்சிக்கு விதை போட்ட பழைய நிர்வாகிகள் முதல் இப்போதைய சீனியர்கள் வரைக்கும் முயற்சி செய்திருக்காங்க. அவர்கள்ல ஒரு சிலருக்கே மாநில தலைவரோட பேசவும், நின்னு போட்டோ எடுக்கவும் வாய்ப்பு கிடைச்சுதாம். மற்றவங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலையாம்.

அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இலை கட்சியில் இருந்து வந்த மாஜி பெண் மேயரும், இப்போதைய மலர் கட்சியோட மாநில நிர்வாகியாக உள்ளவர் தான் காரணமாம். நிர்வாகிங்க கேட்டா, ‘தலைவரு ஓய்வெடுக்குறாரு. அப்புறம் பார்க்கலாம், இப்ப முடியாது’ என்ற பதிலையே சொல்லி.. சொல்லி… அலைக்கழிச்சாராம். இது மலர் கட்சியோட பழைய நிர்வாகிகளுக்கும், இப்போதைய நிர்வாகிகளுக்கும் வேதனைய ஏற்படுத்தியிருக்குதாம். ‘இந்தம்மா எப்ப கட்சிக்கு வந்துச்சி?, நேத்து கட்சிக்கு வந்துட்டு நமக்கு இப்படி வேலை காட்டுறாங்களே’ன்னு மலர் கட்சியோட நிர்வாகிகளின் வேதனை குரல் ஒலிக்கத்தொடங்கியிருக்குதாம்’’ என்று விளக்கினார் விக்கியானந்தா.

‘‘கோயம்பேடு கட்சி செயல்பாடு பொறுத்து மாற்று கட்சிக்கு தாவுறது பற்றி டெல்டாவில் தீவிர ஆலோசனையில் நிர்வாகிகள் இருக்காங்களாமே’’ – அடுத்த சப்ஜெட்டுக்கு தாவினார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிடுவதற்கான வேலையில் டெல்டா மாவட்டத்தை சேர்ந்த முக்கிய கட்சிகள் தீவிரமாக இறங்கியிருக்காங்க. ஆனா, கோயம்பேடு கட்சி ஆர்வம் காட்டாமல் இருக்குதாம். இதற்கான காரணம் கட்சியின் தலைவர் மறைவுக்கு பின்னர் கட்சி எப்படி செயல்பட உள்ளதோ என விடை தெரியாமல் கடலோர, மனுநீதி சோழன், நெற்களஞ்சியம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ‘கப்சிப்’ என இருந்து வருகிறார்களாம்.

தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் முடிவெடுக்காமல் தலைமை இருந்து வருவதால் நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை சோர்ந்து போய் இருக்காங்க. தனியா நிற்பதற்கு வாய்ப்பு குறைவு. கூட்டணியுடன் தான் போட்டியிட வாய்ப்புங்கிற நம்பிக்கையில் உள்ளனர். தொடர்ந்து தலைமை இதுவரை ‘கப்சிப்’ என இருந்து வருவதால் தலைமை மீது நிர்வாகிகள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்து வராங்க. தலைவர் மறைவுக்கு பின்னர் கட்சி எப்படி செயல்படுகிறது என பொறுத்து கட்சியில் இருக்கலாமா அல்லது மாற்று கட்சிக்கு தாவி விடலாமா என எதுவாக இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் முடிவு எடுத்து விட வேண்டும் என நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தீவிர ஆலோசனையில் இருந்து வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அல்வா மாநகராட்சியின் கமிஷனருக்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பாக பேசப்படுதே?’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அல்வா மாநகராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்காக அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.290 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு சில பணிகளை முடிப்பதற்காக அந்த மாநகராட்சி கமிஷனருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் கட்டு கட்டாக ஒரு பேக்கில் லஞ்ச பணத்துடன் வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு தான் முத்துநகரில் இருந்து மாறுதலில் அல்வா மாநகராட்சி கமிஷனராக பணியில் சேர்ந்த அந்த இளம் ஐஏஎஸ் அதிகாரி தனக்கே லஞ்சம் கொடுக்க பணத்துடன் வந்திருப்பதை கண்டு அதிர்ந்து போனாராம்.

நேர்மையான அந்த அதிகாரி உடனே போலீசை அழைக்க, லஞ்சம் கொடுக்க வந்த தனியார் நிறுவனத்தின் இயக்குநர் பேக்கில் வைத்திருந்த பணத்துடன் தப்பித்தால் போதும் என தலைதெறிக்க ஓட்டம் பிடித்து விட்டாராம். ஆனால், அவருடன் வந்த ஊழியர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். மாயமான தனியார் நிறுவன இயக்குநர் மீதும் வழக்குப்பதிந்து அவரையும் தேடி வருகின்றனர். வழக்கமாக லஞ்சம் வாங்குபவர் தான் கையும், களவுமாக பிடிபடுவார். ஆனால் அல்வா மாநகராட்சியின் கமிஷனர், லஞ்சம் கொடுக்க வந்தவர்களை போலீசில் பிடித்துக் கொடுத்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இது போன்ற அதிகாரிகள் கிடைத்தால் பணிகள் தரமாக நடக்கும் என்கின்றனர் அல்வா மாநகராட்சி வாசிகள்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி தலைவரிடம் சீட் கேட்ட ெலட்டர்பேடு கட்சி பற்றி சொல்லுங்களேன்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் எதிர்பார்த்த கட்சிகள், அவரிடம் வரலையாம். இதனால ரொம்பவே அதிர்ச்சியில இருக்காராம். மலராத கட்சியிடம் இருக்கும் ரெண்டு கட்சிகளை இழுத்து கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், பாஜ பக்கம் சாய்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் வகையில், இலைக்கட்சி தலைவர் உத்தரவு போட்டிருக்காராம்.

இவ்வாறு செய்வதன் மூலம், கர்நாடக மாஜி போலீஸ்காரருக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும் என்பது தான், இலைக்கட்சி தலைவரின் ஒரே எண்ணமா இருக்காம். இந்த நிலையில, இலைக்கட்சி தலைவரு அவரது சொந்த ஊரிலேயே மனவேதனையடைந்த சம்பவம் ஒன்று நடந்திச்சாம். தற்போதிருக்கும் நிலையில் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கும் இலைக்கட்சித்தலைவரின் மனநிலையை புரிந்து கொண்ட லெட்டர் பேடு கட்சி ஒண்ணு, ஆதரவு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், களப்பணியாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருவதா சொல்லியிருந்தாங்களாம்.

ஆனா, வாசலில் வச்சி சால்வை அணிவித்து ஆதரவை தெரிவிச்சிட்டு, வெளியே வந்து, எங்களுக்கு ஒரு தொகுதி வேணுமுன்னு கோரிக்கை வச்சிட்டு போனாங்களாம். இதனை கேட்ட இலைக்கட்சி தொண்டர்கள் ரொம்பவே வேதனை அடைஞ்சிட்டாங்களாம். ‘யானை தடுக்கி விழுந்தால் எறும்புகள் எல்லாம் டான்ஸ் ஆடும் என்பது போல இலைக்கட்சி தலைவரை பார்த்தா இவர்களுக்கெல்லாம் ஏளனமா இருக்கு’ என புலம்பிட்டு போனாங்களாம். ஒரு சீட் கேட்ட அந்த ெலட்டர்பேடு கட்சி தலைவரின் பின்புலத்தை ஆராய்ந்து அறிக்கை கொடுக்க, அவரது ஆதரவு உளவுத்துறை போலீசுக்கு இலைக்கட்சி தலைவர் உத்தரவு போட்டிருக்காராம்” என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்