ஆருயிர் காப்போம்

இந்திய அளவில் மருத்துவ துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில் அதிக மருத்துவக்கல்லூரிகள் உள்ள நிலையில், மருத்துவ வசதிகள் இங்கு கிடைப்பதை போல் வடமாநிலங்களில் கிடைப்பதில்லை. உலக சுகாதார அமைப்பு ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் அவசியம் என கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலை இருப்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒருமுறை குறிப்பிட்டதுபோல, ‘ஏழைகள் உள்பட அனைத்து மக்களும் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும், மருத்துவ உதவியாக அவர்கள் ஒவ்வொருவரையும் சென்று அடைய வேண்டும்’ என்பதே சமூக நீதியை பேணும் இந்த திராவிட மாடல் ஆட்சியின் நோக்கமாக உள்ளது. அந்த வகையில் தமிழக மருத்துவத்துறையில் புதியதொரு சாதனையாக தற்போது ‘ஆருயிர்- அனைவரும் உயிர் காப்போம்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவத்துறையின் தமிழக கிளை சார்பில் இத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. போதிய உடற்பயிற்சி இன்மை, துரித உணவுகளின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிபிஆர் என்னும் முதலுதவி வழங்கப்படுகிறது. கார்டியோ பல்மனரி ரிசஸிடேஷன்(சிபிஆர்) என்னும் உன்னத உயிர்காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்து கொண்டால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியும்.

சிபிஆர் சிகிச்சை மூலம் மூளை செயலிழப்பை தடுக்க முடியும். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை சாலை விபத்துகளும் அதிகமாக நடக்கின்றன. சாலை விபத்துகள் மற்றும் மாரடைப்பின்போது இதயம் செயலிழந்து விடுவதால்தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே இதில் பாதிக்கப்படும் நபர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பாக தேவையான முதலுதவிகளை செய்தால், அவர்கள் உயிர் பிழைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே இத்தகைய அடிப்படை முதலுதவி பயிற்சிகளை அளிப்பதே ‘ஆருயிர்- அனைவரும் உயிர் காப்போம்’ திட்டமாகும்.

இந்திய மருத்துவ சங்கத்தின் 177 தமிழக கிளைகளிலும் உள்ள 42 ஆயிரம் மருத்துவர்கள் இந்த பயிற்சியை தமிழகத்தில் உள்ள பொதுமக்களுக்கு அளிக்க உள்ளனர். சென்னையில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததையடுத்து, பல்வேறு மாவட்டங்களிலும் இதற்கான பயிற்சிகள் நடந்து வருகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் தமிழக மருத்துவர்கள் மூலம் பெரும்பாலான மக்களுக்கு இத்தகைய பயிற்சிகளை கொண்டு செல்ல மருத்துவ சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

தமிழக மருத்துவ துறையில் ஏற்கனவே உள்ள ‘இன்னுயிர் காப்போம்’ என்கிற திட்டத்தால், பல்வேறு உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கும் வகையிலும், விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்திற்குள் அவர்களுக்கு கட்டணமில்லாத சிகிச்சைகளை வழங்கும் வகையிலும் அத்திட்டத்தை அரசு துவக்கியது. இந்த திட்டத்தின் கீழ் தமிழக எல்கைகளில் விபத்தில் சிக்கும் நபர்கள், முதல்வர் காப்பீடு திட்ட அட்டை உடையவர், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டினர் என அனைத்து தரப்பினரும் 48 மணி நேரம் இலவச சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாராக இருந்தாலும் மனித உயிர்கள் காக்கப்பட வேண்டும் என்கிற முறையில் அரசின் அத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இப்போது ஆருயிர் அனைவரும் உயிர் காப்போம் திட்டமும் மக்கள் மத்தியில் மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்