காய்ச்சலை தடுப்போம்

பருவநிலை மாற்றங்கள் வரும்போதெல்லாம் அதன் தொடர் நிகழ்வாக காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் மனிதர்களை தாக்குவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக காய்ச்சலை சாதாரண நோயாகவே கருதி பழக்கப்பட்ட நமக்கு, கொரோனா காலம் எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டி போட்டது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா, உலகத்தையே உலுக்கியது. கொரோனா காய்ச்சலை கூட தாங்கிக் கொண்ட மக்கள், அதற்காக போடப்பட்ட ஊரடங்கை கண்டு அச்சப்பட்டனர். பொதுமக்கள் வாழ்க்கையை முடக்கிய ஊரடங்கு, சிறு குறு தொழில்களை சீரழித்தது. கொரோனாவும், அதனால் போடப்பட்ட ஊரடங்கையும் யாரும் இன்னமும் மறந்தபாடில்லை.

இந்நிலையில் சீனாவில் அடுத்த இன்னிங்சாக தற்போது அங்கிருந்து மீண்டும் ஒருவித மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. எச்9என்2 என்னும் ஒருவகை இன்புளூயன்சா காய்ச்சல் தாக்குதலால் அங்கு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவில் பரவி வரும் மர்ம காய்ச்சல் உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. உலக சுகாதார அமைப்பும் சீனாவை தொடர்பு கொண்டு தற்போது பரவி வரும் மர்ம காய்ச்சல் குறித்து முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அக்காய்ச்சல் தொற்று ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது.

சீனாவை உலுக்கி வரும் மர்ம காய்ச்சல் இந்தியாவிற்குள் நுழைந்துவிடுமோ என்ற கவலை இந்திய மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் தற்போது பருவநிலை மாற்றத்தால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை எதிர்கொண்டு வருகின்றன. நாகலாந்தில் இவ்வாண்டு இதுவரை இல்லாத அளவுக்கு 2 ஆயிரத்து 900 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பக்கத்து மாநிலமான மணிப்பூரில் கடந்த அக்டோபர் மாதம் முடிய 1338 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெப்ப மண்டலங்களை மட்டுமே தாக்கும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் இப்போது குளிர் பிரேதசங்களையும் விட்டு வைக்கவில்லை. உலகிலேயே டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது.

இதுபோதாது என சீனாவில் இருந்து மர்ம காய்ச்சலும் இந்தியாவிற்குள் நுழைந்தால், மீண்டும் காய்ச்சலோடு நாம் போராட வேண்டியது வரும். ஒவ்வொரு காய்ச்சலுக்கும் தடுப்பூசிகளை கண்டறிவதிலே மருத்துவ உலகம் தொடர்ந்து மண்டையை பிய்த்துக் கொள்கிறது. சீனாவில் பரவும் மர்ம காய்ச்சல் இந்தியாவிற்குள் பரவாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் அசாதாரண நோய் கிருமிகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்து வருகிறது. சீனாவில் அதிகரித்து வரும் நிமோனியா பாதிப்புகளை இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள், தொற்றுநோய்கள் விஷயத்தில் ஒருபோதும் அலட்சியம் காட்டக்கூடாது. ஏனெனில் தொற்றுநோய்கள் பொதுமக்களுக்கு பரவுவது மட்டுமின்றி, அவர்களின் அன்றாட வாழ்வையும் முடக்கி போடுகின்றன. எனவே சீனாவில் பரவும் மர்ம காய்ச்சலை உன்னிப்பாக கவனித்து, அதற்கு தடுப்பு நடவடிக்கைகளை இப்போதே ஒன்றிய சுகாதார அமைச்சகம் முடுக்கி விட வேண்டும். சுவாசம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவோரை உடனடியாக கண்டறிந்து மருத்துவ பரிசோதனைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் இருப்பு, மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவும் முயல வேண்டும்.

Related posts

மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி : பொதுமக்கள் நலன் கருதி, அண்ணா சதுக்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாய்க்கு விஷம்: பகுஜன் சமாஜ் முன்னாள் நிர்வாகி கைது

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு