அனைவரும் ஒன்றிணைந்து கனமழையை எதிர்கொள்ளவோம்: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: கனமழையை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளவோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். வடமாநிலங்கள், மேற்கு இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மலை பிரதேச மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு, மேக வெடிப்பு, வீடுகள் இடிந்து விழுதல், மரங்கள் முறிவு, மின்னல் தாக்குதல் போன்ற காரணங்களால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக இமாச்சலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர உத்தரபிரதேசத்தில் 8 பேரும், உத்தரகாண்டில் 6 பேரும், டெல்லியில் 3 பேரும், ஜம்மு – காஷ்மீர், அரியானா, பஞ்சாபில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சல் பிரதேச மாநிலம் மண்டியில் பியாஸ் ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டிருந்த 40 ஆண்டுகள் பழமையான பாலம் அடித்துச் செல்லப்பட்டது. டெல்லியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலையில் ஒரே நாளில் 153 மிமீ மழை பெய்துள்ளது. மழை காரணமாக வடக்கு ரயில்வே 17 ரயில்களை ரத்து செய்துள்ளது. 12 ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டன. டெல்லியில் யமுனை நீர் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர்கள், டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர்களுடன் பேசி, நிலைமையைச் சமாளிக்க தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். மேற்கண்ட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தேசிய மற்றும் மாநில பேரிடர் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கனமழையை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளவோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பிற வட இந்திய மாநிலங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பலர் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது; அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்; இந்த இயற்கை பேரிடரின் கடினமான சவாலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்