தெளிவு பெறுவோம்!!

பெருமாள் கோயில்களில் துளசி தீர்த்தம் தருகிறார்களே, என்ன காரணம்?
– சிவதாசன், திருச்சி.

துளசியின் மகிமைதான் காரணம். பகவான் அதிகம் விரும்பும் ஒரு பொருள் துளசிதான். ‘‘நாற்றத்துழாய் முடி நாராயணன்” என்றே ஆண்டாள் பாடுகிறாள். துளசி இருக்கும் இடத்தில் பகவான் நாராயணன் அவசியம் இருப்பான். துளசி தீர்த்தம் “அகால மிருத்யு தோஷத்தை தவிர்க்கும்’’. பகவான் ஹரிக்கு சமர்ப்பிக்கப்பட்ட துளசி தீர்த்தத்தை, பக்தியுடன் ஏற்பவர் கங்கையில் நீராடிய பலனை அடைவர். எந்த வீட்டில் காலையிலும் மாலையிலும் “துளசிதேவியை” வணங்கி வருகிறார்களோ, அவர்கள் வீட்டில் “யமதேவன்” நுழைய முடியாது. நாள்தோறும் ‘‘தீபமேற்றி’’ துளசிதேவியை பூஜிப்பவர்கள், நூற்றுக்கணக்கான யாகம் செய்ததன் பலனை அடைவர். துளசியின் காற்று பட்டாலும், துளசியை வலம் வந்து வணங்கினாலும் எல்லா பாவங்களும் நீங்கும். துளசியை தொடுபவர்கள் புனிதம் அடைகிறார்கள். துளசியின் வேர்ப்பக்கம் உள்ள தூசியை நெற்றியிலிடுவது மாபெரும் கவசமாகும். பகவானது தாமரைப் பாதங் களில் சந்தனம் கலந்து துளசி இலையை ஒட்டுபவர், ஒரு லட்சம் அஸ்வமேத யாகத்தை நடத்திய பலனைப் பெறுவர்.

யாமம் என்றால் என்ன? இரவின் முதல் யாமம் எது? கடைசி யாமம் எது?
– தனுஷ், வேதாரண்யம்.

இரண்டு முகூர்த்தங்கள் சேர்ந்தது அதாவது மூன்று மணி நேரம் ஒரு யாமம். பகலில் நான்கு யாமங்கள்; இரவில் நான்கு யாமங்கள். இரவில் உள்ள நான்கு யாமங்களில் மாலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி. வரை – இரவின் முதல் யாமம்; இரவு மூன்று மணி முதல் விடியற்காலை ஆறுமணி வரை, கடைசி யாமம். நாள் ஒன்றுக்குப் பத்து யாமம் என்றும் சொல்வதுண்டு. அப்படிப் பார்த்தால் அதற்கு ஏற்றாற்போல், நேரத்தைக் கணக்கிட்டு்க் கொள்ள வேண்டும்.

அபரான்னகாலம் என்றால் என்ன?
– பிரசன்ன வெங்கடேசன், திருக்கோயிலூர்.

பகல்பொழுதை ஐந்து பாகமாகப் பிரித்து, அதில் நான்காம் பாகத்தில் உள்ள கால அளவே “அபரான்னம்’’ எனப்படும். அபரான்னமே பிதுர்களுக்கு உகந்த காலமாகும். திதி, தெவசம், பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற முன்னோர் வழிபாட்டை வீடு மற்றும் புனித ஸ்தலங்களில் ‘‘அபரான்னகாலம்’ என அழைக்கப்படும் பிற்பகல் 1:12 முதல் 3:36 வரையிலான காலத்தில் செய்ய வேண்டும். இந்த அபரான்ன காலத்தில்தான் பித்ருக்கள் நாம் அளிக்கும் எள்ளும் தண்ணீரையும் உணவாக அருந்தி நம்மை ஆசீர்வதிக்க வருகிறார்கள். சிரார்த்த திதி இரண்டு நாட்களிலும் இருந்தால் அபரான்ன காலத்தில் திதி அதிகமாக உள்ள அன்றுதான் சிராத்த திதி கடைபிடிக்க வேண்டும். திதி ‘‘அபாரன்ன’’ காலத்தில் இல்லாத நாட்களில் ‘‘குதப காலம்’’ என அழைக்கப்படும் நண்பகல் 11:36 முதல் 12:24 மணி வரையிலான காலத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யவேண்டும். இந்த காலத்தில் திதி இருக்கும் அடிப்படையில்தான் பஞ்சாங்கத்தில் ‘‘சிரார்த்த திதி’’ தீர்மானிக்கப்படுகிறது. அப்போது ராகுகாலம், எமகண்டம் வந்தால் என்ன செய்வது என்பார்கள் சிலர். ராகு காலம், எமகண்டம் போன்ற விஷயங்களுக்கும் முன்னோர் வழிபாட்டிற்கும் தொடர்பில்லை.

-அருள்ஜோதி

Related posts

மேஷ ராசிக்காரர்களுக்கு வீட்டு யோகம் தரும் அன்னை

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள்

தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல்