வேண்டாமே சாலைவெறி ROAD RAGE தவிர்ப்போம்

நன்றி குங்குமம் டாக்டர்

இரு சக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ பெருநகரங்களில் வண்டி ஓட்டுவது என்பதே ஊர்த் திருவிழாவில் மரணக்கிணறு வண்டி ஓட்டுவது என்பதைப் போல சவாலான, சாகசமான விஷயமாக மாறிவிட்டது இப்போது. சாலைகளில் பயணிக்கும்போது சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்பது சட்டம். சாலைவிதிகளை விடுங்கள் அடிப்படை மனித மாண்புகூட இல்லாமல் அல்லவா நடந்துகொள்கிறார்கள். இப்போது விதவிதமான ஹாரன்கள் வந்துவிட்டன. ‘ஓ’ வென அலறும் ஹாரன்களை அரசு தடை செய்துள்ளது.

ஆனாலும் அதை மாட்டிக்கொண்டு சுற்றுகிறார்கள் சிலர். இந்திய சாலைகள் இடதுபுறமாகப் பயணித்துச் சென்றுவிட்டு, இடதுபுறமாகவே திரும்பி வரும்படியாக வடிவமைக்கப்பட்டிருப்பவை. கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்களின் ஸ்டியரிங்கள் கூட அதற்கு வசதியாகவே வலதுபுறமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதாவது சாலையில் செல்லும்போது இடதுபுறமாகவே செல்ல வேண்டும். இது ஓர் அடிப்படையான விஷயம். ஆனால் இதைக்கூட மதிக்காமல் இடதுபுறமாக வந்து ஓவர்டேக் செய்வார்கள் சிலர். இது விதிமீறல் இல்லைதான். ஆனால், விபத்தை உருவாக்கும் விஷயம்.

தற்போது எல்லா வாகனங்களிலுமே இண்டிக்கேட்டர்கள் உள்ளன. இண்டிக்கேட்டர்கள் இரவில்தான் பிரகாசமாய் தெரியும். மேலும், இரவில் திரும்பும்போது கைகாட்டினால் தெரியாமல்கூட போகக்கூடும். அதனால் ஏற்படும் விபத்தைத் தடுக்கவே இண்டிக்கேட்டர்கள். ஆனால், பகலில்கூட இண்டிக்கேட்டர் மட்டுமே போட்டுவிட்டு வண்டியைத் திருப்புகிறார்கள். சப்தமிடும் இண்டிகேட்டராக இருந்தாலும்கூட வாகனங்களின் இரைச்சலில் கவனிக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே, பகல் என்றால் இண்டிக்கேட்டர் போட்டாலும் திரும்பும் முன் கை காட்டிவிட்டுத் திரும்புவதுதான் நல்லது.

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது சிலர் பேய் வேகத்தில் செல்வார்கள். நெடுஞ்சாலையின் ஓரங்களில் பாலங்கள், பக்கவாட்டுச் சாலைகள், ஸ்பீடு ப்ரேக்கர்கள், ரயில்வே ட்ராக்குகள், கடைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என எதிர்படும் ஒவ்வொரு விஷயம் பற்றியும் சமிக்ஞைகள் இருக்கும். விபத்துகளைத் தவிர்க்க இவற்றை எல்லாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். மின்னல் வேகத்தில் செல்லும்போது இந்த சமிக்ஞைகள் கண்ணில் படாமல் போகக்கூடும். மேலும் நெடுஞ்சாலை பயண விதி ஒன்று உண்டு. நெடுந்தூரப் பயணங்களில் அதி வேகத்தில் பயணித்து ஆங்காங்கே நின்று செல்லும் வண்டி ஒன்றும்; மிதமான வேகத்தில் சென்றுகொண்டே இருக்கும் வண்டி ஒன்றும் குறைந்தது இரண்டு முறையாவது சந்தித்துக்கொள்ள நேரிடும். நம் சாலைகள் அவ்வாறே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, தேவையற்ற அதிவேகத்தைத் தவிர்ப்பதே நல்லது.

தற்போது தரமான நெடுஞ்சாலைகள் போடப்படுகின்றன. அதிவேகத்தில் செல்லும் டர்போ இன்ஜின்கள், அதிக சி.சி கொண்ட வாகனங்கள் சந்தைக்கு வந்துகொண்டே இருக்கின்றன. இவை எல்லாம் நாம் செல்லும் வேகத்தை அதிகரிக்கத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், மனித உடல் இரும்பால் ஆனது அல்ல. ஒரு சிறு விபத்தைக்கூட தாங்க முடியாது என்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, பாதுக்காப்பான வேகத்தில் செல்வதுதான் எப்போதும் நல்லது என்பதை மறந்துவிடாதீர்கள்.

ரோட் ரேஜ் என்றால் என்ன?

ரோட் ரேஜ் என்பது சாலையில் பயணிக்கும்போது முரட்டுத்தனமாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்வதாகும். வாகனத்தில் செல்லும்போது உடன் வரும் பிற வாகன ஓட்டிகளைத் திட்டுவது, முறைப்பது, அவர்களை நோக்கி அசிங்கமான செய்கைகள் செய்வது, மிரட்டுவது, அடிக்க முயல்வது, மற்றவர்கள் வாகனங்கள் மேல் சென்று மோதுவது, மோதுவது போல் உரசிக்கொண்டு போவது, நடைபாதையில் வண்டியோட்டுவது, ஹாரன் அடித்துக்கொண்டே இருப்பது, புலம்பிக்கொண்டே இருப்பது, வன்முறையில் இறங்குவது, சாலையை மறித்துக்கொண்டு வழிவிடாமல் செல்வது, அதிவேகமாகச் சென்று மிரட்சியை உருவாக்குவது என்பவை எல்லாம் ரோட் ரேஜ் எனப்படும்.

ரோட் ரேஜ் ஏன் ஏற்படுகிறது?

ஒருவர் சாலையில் வெறித்தனமாக நடந்துகொள்வதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். வேலைப்பளு, குடும்பத்தில் பிரச்சனை, பணியிடத்தில் பிரச்சனை, உடல்நலக் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் டென்ஷனாகவும் மன அழுத்தத்தோடும் இருப்பவர்கள் சாலையில் செல்லும்போது ரோட் ரேஜ்ஜில் இறங்குகிறார்கள். இளைஞர்கள் வயதின் துடிப்பினாலும் மற்றவர்களைக் கவரும்படி எதையும் வித்தியாசமாகவும் வேகமாகவும் செய்ய வேண்டும் என்ற ஆர்வக்கோளாறு காரணமாகவும் ரோட் ரேஜில் இறங்குகிறார்கள்.

தூக்கமின்மை ரோட் ரேஜுக்கு ஒரு முக்கியமான காரணம் போதிய ஓய்வு இன்றிப்போகும்போது ஒருவித எரிச்சலும், படபடப்பும் தோன்றுகின்றன. மேலும் குடிப்பழக்கமும் இதற்கு ஒரு காரணம். குடிப்பழக்கம் மூளையைச் சோர்வாக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தடுப்பதால் குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு ஒருவித எரிச்சல் உணர்வு இருக்கும். இவர்கள் சாலையில் பயணிக்க நேரும்போது இப்படியான வன்முறையில் இறங்குகிறார்கள்.

ரோட் ரேஜைத் தூண்டும் காரணிகள்

அதீதமான வாகன நெரிசல், சொந்த வாகனங்களில் உள்ள குறைபாடு, சுற்றுப்புறச் சூழல், சீதோஷ்ணம், அதீத இரைச்சல், சக பயணிகளின் பொறுப்பற்ற பயணம் என ரோட் ரேஜைத் தூண்டும் புறக்காரணிகள் நிறைய உள்ளன.

ரோட் ரேஜில் இருந்து தப்பிக்க…

சாலையில் செல்லும்போது ஒருவர் உங்களை நோக்கி ரோட் ரேஜில் இறங்கினால் அவருக்குப் பதில் சொல்லாமல் அமைதியாகக் கடந்துசெல்லுங்கள்.அவரை கண் கொண்டு நோக்காமல் இருப்பது நல்லது. நீங்கள் அவரைப் பொருட்படுத்துவது அவர்களை மேலும் உற்சாகமாக அதில் ஈடுபடவைக்கும்.அவசியப்பட்டால் மன்னிப்பு கேளுங்கள். தயக்கம் வேண்டாம். சில தருணங்களில் நம்மையும் அறியாமல் தவறு செய்வோம். உதாரணமாக ட்ராஃபிக் சிக்னலில் பக்கத்தில் நிற்பவர் கால்களை மிதித்துவிடுவது. முன்னால் செல்லும் வாகனத்தில் இடித்து நிறுத்துவது போன்ற தவறுகள் நேரும்போது தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள். அது பிரச்னையை வளர விடாது.

ரோட் ரேஜ் ஏற்படாமல் இருக்க…

*இரவுகளில் கண் விழித்திருக்காமல் தினமும் எட்டு மணி நேரம் உறங்குவது என்ற பழக்கதைக்கொண்டு வாருங்கள்.

*குடிப்பழக்கத்தைவிட்டு வெளியேறுங்கள். அது ஆழ்ந்த தூக்கமின்மையும் எரிச்சல் உணர்வையும் அதிகரிப்பது.

*சாலையில் செல்லும்போது இயல்பான மனநிலையில் செல்லுங்கள். ஏதேனும் ஒரு சிக்கலை, பிரச்சனையை யோசித்துக்கொண்டே செல்வதை இயன்றவரை தவிர்த்திடுங்கள்.

*இனிமையான எண்ணங்கள், காரில் செல்லும் போது பாடல் அல்லது இசையை ஒலிக்க விடுவது போன்றவை ரோட் ரேஜ் உணர்வு ஏற்படாமல் தவிர்க்கும்.

*சாலையில் யாராவது தவறு செய்தால் பொறுத்துக்கொள்ள பழகுங்கள். உடனே கோபமாய் எதிர்வினை செய்ய வேண்டாம்.

*அடுத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ரோட் ரேஜ் இயல்பு உங்களிடம் இருந்தால் அதில் இருந்து எப்படி வெளியேறுவது என்று யோசியுங்கள்.

*சாலைவிதிகளை முறையாகப் பின்பற்றுங்கள்.

*எங்காவது செல்லும் முன் பயண நேரம், ட்ராஃபிக் நெரிசல் போன்றவற்றைத் திட்டமிட்டு அதற்கேற்ப பயணத்தைத் தொடங்குகள். இதனால், பதற்றமின்றி குறித்த நேரத்தில் போய் சேர முடியும். ரோட் ரேஜையும் தவிர்க்கலாம்.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

Related posts

பிரபாஸ் போல் வலுவாக… ஃபிட்னெஸ் டிப்ஸ்!

கண் கருவளையம் தடுக்கும் வழிகள்!

புதினா நீரின் நன்மைகள்!