புத்தாண்டை வரவேற்போம்

புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஔிக்கதிர்களுடன் இன்று பிறக்கிறது இனிய புத்தாண்டு. இன்று பிறந்துள்ள புத்தாண்டு நல்லதொரு மாற்றத்தை உருவாக்கும் என்ற மனமகிழ்வோடு கொண்டாடுவோம். கடந்த 2023 நமக்கு புயல், வெள்ளம், மழை என சில இன்னல்களை அளித்தாலும் சாதனைகளுக்கும் பஞ்சமில்லை. இந்திய அளவில் கடந்தாண்டில் நமது அறிவியல் சாதனைகள் உலக நாடுகள் மெச்சும்படியாக இருந்தன. சந்திரயான் 3 ஏவப்பட்டது தொடங்கி, ஆதித்யா எல்1 என விண்வெளியில் புதிய சாதனைகளை எட்டின.

இந்திய வரலாற்றில் கடந்தாண்டு கரும்புள்ளியாக மணிப்பூர் கலவரம் அமைந்தது. இந்திய ரயில்வேயை பொறுத்தவரை கடந்தாண்டு வந்தே பாரத் பல நகரங்களை இணைத்து ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியது. அதன் மறுபக்கமாக ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 300 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் நடந்த ஜி20 மாநாடு சர்வதேச அளவில் நம்மை நிலைநிறுத்திக் கொள்ள உதவியதோடு, இந்திய – ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் அமைக்கவும் உந்துகோலாக இருந்தது.

கடந்தாண்டு நவம்பரில் உத்தரகாண்டில் நடந்த சுரங்க விபத்து பெரும் சோகமாக எழுந்து, பின்னர் 17 தினங்களுக்கு பின்னர் 41 தொழிலாளர்களும் உயிரோடு மீட்கப்பட்டது மகிழ்ச்சியை அளித்தது. மாநிலங்களில் நடந்த தேர்தலை பொறுத்தவரை கர்நாடகாவில் ஆளும் பாஜவை வீழ்த்தி காங்கிரஸ் அரியணை ஏறியது. தெலங்கானாவிலும் காங்கிரஸ் கனவு நிறைவேற, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றை பாஜ வாரி சுருட்டிக் கொண்டது. விளையாட்டை பொறுத்தவரை இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் தோல்வியே காணாமல் இறுதிபோட்டி வரை முன்னேறிய இந்திய அணி, பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை பறிகொடுத்தது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திராவிட மாடல் நல்லாட்சியை மக்கள் தொடர்ந்து கொண்டாடி கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆளுநர் சர்ச்சைகளின் நாயகனாக உலா வந்தார். ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உச்சநீதிமன்றத்தால் அவர் கண்டிக்கப்படும் சூழலும் உருவானது. மகளிருக்கு உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், பள்ளிகளில் காலை உணவு திட்டம் என அரசின் மக்கள் நலம்நாடும் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கே உதாரணமாக திகழ்ந்தன.

மதுரையில் ரூ.215 கோடியில் உருவாக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம், சென்னையில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை, கிளாம்பாக்கம் பிரம்மாண்ட பேருந்து நிலையம் ஆகியவை கடந்தாண்டில் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சேவையாற்றின. நடிகர் விஜயகாந்த், பங்காரு அடிகளார் என சில மரணங்களும் பொதுமக்களை கண்ணீர் விட வைத்தன. ஆண்டின் இறுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வெள்ளமும், அதை தொடர்ந்து தென்மாவட்டங்களை கதற வைத்த வெள்ளமும் மக்களை சோகத்தில் ஆழ்த்தின.

ஆனால், அரசின் நிவாரண உதவிகள் பெரும் ஆறுதலாகும். சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதைப் போல் இந்த புத்தாண்டு நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தட்டும் என கூறி அதை வரவேற்போம்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை