பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகளை அடித்துக்கொன்ற சிறுத்தை

* பசுமாடுகளையும் கடித்து குதறியது

பேரணாம்பட்டு : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்திர பள்ளியை சேர்ந்த நரிக்குறவர்களான அண்ணன், தம்பிகள் பிருந்தா மற்றும் ரவி. இவர்கள் 15 ஆடுகள் வளர்த்து மேய்த்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் ஆடுகளை எருக்கம்பட்டு வனப்பகுதிக்கு உட்பட்ட கொந்தமேடு என்ற காட்டில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை வழக்கம்போல் ஆடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு விட்டு, மாலையில் ஆடுகளை வீட்டுக்கு ஓட்டிச் செல்ல வனப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது அங்கு இவர்களது 4 பெரிய ஆடுகள் மற்றும் 4 குட்டி ஆடுகளை சிறுத்தை கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது. சில ஆடுகளின் இறைச்சியை தின்று இருந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ரவி, பிருந்தா இருவரும் மீதியுள்ள 7 ஆடுகளை தேடினர். ஆனால் ஆடுகளை எங்கேயும் காணவில்லை. இதனால் செய்வது அறியாமல் அமைதியாக வீடு திரும்பினர்.

அதைத் தொடர்ந்து வி கோட்டா ரோட்டில் எருக்கம்பட்டு வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஜார்பண்டை காட்டில் நேற்று மதியம் 2 மணியளவில் 3 பசு மாடுகளை சிறுத்தை தாக்கியுள்ளது. சிறுத்தையிடம் இந்த பசுமாடுகள் போராடி உயிர் பிழைத்து வந்துள்ளது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் பத்திரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(55) கூறுகையில், ‘மாடுகளை இந்த காட்டிற்குள் தான் தினமும் மேய்ச்சலில் விடுவேன்.

நேற்று திடீரென மாடுகள் அலறிய சத்தம் கேட்டது. அங்கு ஓடி சென்று பார்த்தபோது சிறுத்தை ஒன்று முட்புதருக்குள் ஓடியதை பார்த்தேன்’ என்றார். மேலும் இதுகுறித்து வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் வனத்துறைக்கு தெரிவித்தனர். அதன்பேரில் ஜார்பண்டை காட்டிற்கு விரைந்து வந்தனர். சிறுத்தையால் காயமடைந்த பசுமாடுகளை பார்வையிட்டனர். பின்னர் காடுகள் முழுவதும் சோதனை நடத்தினர்.

இதில் ஆடுகள் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இறந்த ஆடுகள் மற்றும் காயமடைந்த பசுக்களை போட்டோ எடுத்துக்கொண்டு கால்நடைத்துறைக்கு அனுப்பி, சிறுத்தையால் தாக்கப்பட்டதா? என்று ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா