​​இடதுசாரி தீவிரவாதம் குறித்த விவாதம்; எந்த மாநிலமும் மேற்குவங்கத்தை பின்பற்றாது: திரிணாமுல் எம்பிக்கு அமித் ஷா பதில்

புதுடெல்லி: இடதுசாரி தீவிரவாதம் குறித்த விவாதத்தின் போது, எந்த மாநிலமும் மேற்குவங்கத்தை பின்பற்றாது என்று திரிணாமுல் எம்பியின் கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, ​​இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய், ‘மேற்குவங்க அரசு தனது வளர்ச்சித் திட்டங்களின் மூலம் இடதுசாரி தீவிரவாதத்தை தடுத்து நிறுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோன்ற திட்டங்களை மற்ற மாநிலங்களிலும் முன்னெடுக்க வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பதிலில், ‘எந்தவொரு மாநிலம் நல்லது செய்தால், அதனை முன்மாதிரியாக கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தும். ஆனால் எந்த மாநிலமும் மேற்குவங்க மாநிலத்தை முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ள விரும்பாது’ என்றார். அப்போது திரிணாமுல் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பேசுகையில், ‘கடந்த பத்து ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாத சம்பவங்கள் 53 சதவீதம் குறைந்துள்ளது. இந்த சம்பவங்களில் பாதுகாப்பு படையினரின் இறப்பு எண்ணிக்கையில் 72 சதவீதம் குறைந்துள்ளது. இடதுசாரி தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் ஆயுதங்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கிறார்கள். 2010ம் ஆண்டில் 96 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. ஒன்றிய அரசின் தீவிர முயற்சியால் 2023ல் இடதுசாரி தீவிரவாதம் 42 மாவட்டங்களாகக் குறைக்கப்பட்டன. வரும் நாட்களில் இடதுசாரி தீவிரவாதிகள் ஒழிக்கப்படுவார்கள்’ என்றார்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு