Sunday, June 30, 2024
Home » ‘லீலாதாம்’’: எட்டு மாடி கிருஷ்ணன் கோயில்

‘லீலாதாம்’’: எட்டு மாடி கிருஷ்ணன் கோயில்

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

எட்டு மாடி கிருஷ்ணன் கோயில்

கிழக்கு வங்காளத்தில், தற்போதுள்ள பங்களாதேஷ் பகுதியில், காளி சரண் என்ற பெரும் செல்வந்தருக்கும், அவரது துணைவியாரான அன்னபூர்ணாதேவி என்ற மாதுசிரோன்மணிக்கும் மகனாகப் பிறந்தவர் லீலானந்த தாகூர். பெற்றோரைப் போலவே லீலானந்த தாகூரும் இளம் வயது முதற்கொண்டே பக்தி நெறியில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவராக வளர்ந்தார். இளவயதில், பள்ளிக்கூடம் செல்வதைக் காட்டிலும் பாகவதர்களின் பஜனைக் கூடம் செல்வதையே மிகவும் விரும்பினார். அழகிலும் அறிவிலும் பக்தியிலும் சிறந்து விளங்கிய சுதேவி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். சரத்பண்டிட் என்ற பெரும் பணக்காரரின் ஒரே மகள் இந்த சுதேவி.

கடவுள் பக்தியும் சீலமும் மிகுந்தவர் சுதேவி. லீலானந்த தாகூர், தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர்தான் என்றாலும், சுதேவியின் அழுத்தமான பக்தி, அவரது உள்ளத்தை மேலும், பண்படுத்தியது. இறைவன்பால், சுதேவி – லீலானந்த தாகூர் தம்பதியின் நாட்டம் நாளுக்கு நாள் பல்கிப் பெருகியது.

ஆனால், இந்தத் தம்பதியின் இணைந்த இன்பமயமான வாழ்வு, அதிக நாட்கள் நீடிக்கவில்லை. சில ஆண்டுகளில் சுதேவி நோய்வாய்ப்பட்டு இறந்தார். இதனால், மனமுடைந்து போன லீலானந்த தாகூர், துறவற வாழ்க்கையை மேற்கொண்டார். தன்னிட மிருந்த பெருஞ்செல்வத்தைக் கோயில்கள் கட்டுவதில் செலவழிக்கத் தீர்மானித்தார். அதைச் செயல்படுத்தவும் தொடங்கினார். அசாம் மாநிலத்தில் உள்ள குப்டி என்னுமிடத்தில், `சாந்திபுர் ஆஸ்ரமம்’ என்ற கோயிலையும், அதே அசாமில், பாத்சார் என்னுமிடத்தில் `வீரேந்திர ஆஸ்ரமம்’ என்று அழைக்கப்படும் கோயிலையும் கட்டினார்.

கிருஷ்ண பரமாத்மாவின்மீது ஆழ்ந்த பக்தியும், பிரேமையும் கொண்டவர் லீலானந்த தாகூர். கண்ணன் அவதரித்த இடமான மதுராவுக்குச் செல்லும் பக்தர்கள் பலர், பிருந்தாவனத்தில் சிந்தை கவரும் வண்ணம், குறிப்பிடும் படியாக பெரிய கோயில்கள் இல்லாததால், கிருஷ்ண பக்தர்கள் பிருந்தாவனத்திற்குப் போகாமலிருப்பதைக் கண்டு மனம் நொந்துகொண்டார். பக்தர்கள் வியந்து போற்றும் வண்ணம், கிருஷ்ண பரமாத்மாவுக்குப் பெரியதொரு கோயிலைக் கட்டத் தீர்மானித்தார். `லீலா குஞ்ச் ஆஸ்ரமம்’ மற்றும் `ராம்பிகாரி கோயில்’ ஆகியவற்றை பிரமாண்டமான வடிவத்தில் நிர்மாணிக்க விரும்பினார்.

இந்த லீலா குஞ்ச் ஆஸ்ரமம்தான் ‘லீலாதாம்’ என்ற பெயரில், திருக்கோயில் உள்ளே விதவிதமாக அமைக்கப்பட்டு, எட்டு மாடிகள் கொண்டதாகும். வெண்மையான சலவைக் கற்களால் உருவாக்கப்பட்ட இக்கோயில், பிருந்தாவனம் செல்லும் பக்தர்களின் கண்களையும் கருத்தினையும் ஒருங்கே கவர்ந்து இழுக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. வடநாட்டுப் பாணிக்கேற்ப வெவ்வேறு விதமான தெய்வவடிவங்கள், பளிங்குக் கற்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு வரும் பக்தர்கள், எட்டடுக்கு மாளிகையில் ஓர் எழில்மிகு ஆலயம் அமைந்துள்ளதைக் கண்டு, அழகிய அந்தக் கட்டத்தில் மனதைப் பறிகொடுத்து, அதையே வைத்த கண் வாங்காமல் வெகுநேரம் கண்டு ரசித்த பின்னரே ஆலயத்திற்குள் செல்கிறார்கள்.

அந்த அற்புதமான கோயிலின் அழகும் நேர்த்தியும், அது சுத்தமாகக் கண்காணிக்கப்பட்டுவரும் அழகையும் கண்டு ஆனந்தம் அடைகிறார்கள். இந்த எழில்மிகு எட்டடுக்கு மாளிகைக் கோயிலின் கீழ்த் தளத்தில், மகிஷாசுர மர்த்தினி தேவி தனது பரிவாரத் தேவதைகளுடனும், தனது புத்திரர்களான விநாயகப் பெருமான், முருகப்பெருமான் ஆகியோருடனும் வீற்றிருந்து அருளாட்சிபுரிகின்றார்.

பளபளக்கும் பளிங்குச் சிலைகள் பார்ப்போரை தம்வசம் இழக்கச் சொல்கின்றன.எட்டடுக்கு மாளிகையின் முதல் மாடியில், மிகப் பெரிய அளவில் விநாயகப் பெருமானின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பளிங்குச்சிலையாக பெருமான், ஆடை ஆபரணங்கள் அலங்கரித்த, அற்புதக்கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு முன்பாக மூஷிகம் காட்சியளிக்கிறது. இங்கு விநாயகர் மட்டும் தனிச்சந்நதி கொண்டுள்ளார். முதல் மாடியில் உள்ள மற்றொரு சந்நதியில், கிருஷ்ண பரமாத்மாவின் புகழ்பாடி, பெரும் புகழடைந்த சைதன்ய மகாபிரபுவின் சலவைக்கல்லாலான திருவுருவம் பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் ரம்மியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மாடியில் நீலமேக வண்ணன் என்றும் சியாமள வண்ணன் என்றும் போற்றக்கூடிய கிருஷ்ண பரமாத்மாவின் எழில் உருவம் கருமைநிறக்கல்லில் வடிக்கப்பட்டு, கருமை நிறத்தவனாகப் புன்முறுவலுடன் காட்சி தருகிறான். அருகில் வெண்ணெயான பளிங்குக் கல்லில் உருவாக்கப்பட்ட ராதையின் வடிவம் பளிச்சிட்டுப் பிரகாசிக்கிறது.

மூன்றாவது மாடியில், ஆயர்களின் தலைவனான நந்தகோபன் மீசையோடு இருக்கிறார். அருகில் யசோதை நிற்கிறாள். இருவரும் அணி மணிகளை பூண்டு கொண்டு, செல்வச் செழிப்புடன் காட்சி தருகிறார்கள். சின்னக் கண்ணனாக, அழகிய கைக் குழந்தையின் தோற்றத்தில் கிருஷ்ணர் இருக்கிறார். பக்தர்களை வசீகரிக்கும் இந்த சிலை வடிவங்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். நான்காவது மாடியில் மிகப் பெரிய வடிவத்தில் லட்சுமியும் நாராயண மூர்த்தியும் அற்புதக் கோலம் கொண்டு, அழகாக வீற்றிருக்கின்றனர். ஆடை அலங்காரங்கள் கண்ணைப் பறிக்கின்றன. ஐந்தாவது மாடியில் மந் நாராயணனின் ஏழாவது அவதாரமாகிய ஸ்ரீராமபிரான், சீதாதேவியுடனும், தன்னுயிர் தம்பி லக்குவனுடனும் நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றனர்.

ஆறாவது மாடியில் மண்ணையும் விண்ணையும் தன் காலடியால் இருமுறை அளந்து எடுத்துக்கொண்ட இறைவனிடம், தான் அளித்த வாக்கைக் காப்பாற்ற, ‘மூன்றாவது அடியாக என் சிரசின்மீது உன் பாதத்தை வைத்துக்கொள் பரந்தாமா’ என்று மகாபலி மன்னன், தலைகுனிந்து வேண்ட, அதை விஸ்வரூபக் கோலத்தில் மகாவிஷ்ணு நிறைவேற்றும் அற்புதக் கோலம், அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபமகா விஷ்ணுவின் அருகிலே குள்ள வாமனரின் வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.

ஏழாவது மாடியில், சகோதரர்களான கிருஷ்ண பரமாத்மாவும், பகவான் பலராமனும் அருகருகே, மகிழ்ச்சி பொங்க, அருள்புரியும் திருக்கோலத்தில் நின்றபடி காட்சி தருகிறார்கள். அனைத்துக்கும் அடிப்படை பிரணவம். அதை உணர்த்தும் வண்ணம், மிக மேலிருக்கும் எட்டாவது மாடியில், ‘ஓம்’ காரத்திற்காகவே ஒரு சந்நதி அமைத்துள்ளனர். அங்கே பல பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்கிறார்கள். ஒவ்வொரு மாடியிலும் உள்ள சிலைகளைச் சுற்றிலுமுள்ள பிராகாரங்களை நாம் எளிதில் வலம் வரக்கூடிய அளவில் அமைக்கப்பட்டிருந்தாலும், மேல் தளமான எட்டாவது மாடியின் சந்நதியைச் சுற்றியுள்ள பிராகாரம் குறுகலாக உள்ளது. பிரணவத்தைத் சுற்றிவரக் கூட அதிக முயற்சி வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

இவ்வளவு அற்புதமாக அமைந்துள்ள இக்கோயிலை அமைத்துள்ளார் லீலானந்தாகூர். இந்த மகானை ‘பாகல் பாபா’ என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். இவர் மறைந்தவுடன் அவரை நினைவு கூரும் வண்ணம், இந்தப் பகுதி மக்கள் கோயிலின் ஒரு பக்கமாக அவருக்கு, ஒரு சந்நதி எழுப்பி, அவர் பயன்படுத்திய பல பொருட்களை பொது மக்களின் பார்வைக்கும், வழிபாட்டிற்கும் வைத்துள்ளார்கள்.

மிக அழகாக கட்டப்பட்டுள்ள இந்த எட்டடுக்கு மாடி கிருஷ்ணன்கோயில், மிக கவனமாக இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. கண்ணனின் பிருந்தாவனத்துக்கு வரும் எண்ணற்ற பக்தர்கள். இந்த எட்டுமாடி கிருஷ்ணன் கோயிலுக்கும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

You may also like

Leave a Comment

20 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi