லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை: 274 பேர் பலி, 1000 பேர் படுகாயம்: ஊரை காலி செய்து தலைநகரில் மக்கள் தஞ்சம்

ஜெருசலேம்: மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் விரைவில் ஒரு வருடத்தை எட்ட உள்ளது. காசா பகுதியில் இருக்கும் ஹமாசை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசா மீதான தாக்குதலைக் கண்டித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் 37 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரம் பேர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து வடக்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் கோட்டைகளைக் குறிவைத்தது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் ஹிஸ்புல்லா தளபதி உட்பட 44 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக நேற்றுமுன்தினம் இஸ்ரேலின் ஹைபா நகர் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்கினர். இஸ்ரேலுடன் இனி நேருக்கு நேர் போரிட முடிவு செய்துள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா தளபதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஹிஸ்புல்லா படையின் துணை பொதுச் செயலாளர் நயிம் காசிம்,‘‘ எந்த அச்சுறுத்தலும் தங்களை தடுக்காது என்றும், அனைத்து ராணுவ சாத்தியக்கூறுகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’’ என்றார். இந்த நிலையில், லெபனான் மீது நேற்று இஸ்ரேல் விமானங்கள் சரமாரியாக குண்டுமழை பொழிந்தன. இதில், 274 பேர் உயிரிழந்தனர். 1000 பேர் படுகாயமடைந்தனர். 21 பேர் குழந்தைகள், 39 பெண்கள்ஆவர் என்று அல் ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.பல ஆண்டுகளுக்கு பின் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிக பெரிய தாக்குதல் இதுவாகும்.
இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதையடுத்து தெற்கு லெபனானில் உள்ள மக்கள் தங்கள் கார்களிலும்,வாகனங்களிலும் தலைநகர் பெய்ரூட்டை நோக்கி ஆயிரக்கணக்கானோர் படையெடுத்து செல்வதால் பெய்ரூட் செல்லும் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலையடுத்து இஸ்ரேலில் உள்ள கலிலி நகரில் உள்ள இஸ்ரேல் நிலைகள் மற்றும் ஹைபாவில் உள்ள ராணுவ நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது மற்றும் இஸ்ரேல் நாட்டின் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் நடத்தியது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடும் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

* ராணுவம் எச்சரிக்கை
இஸ்ரேல் ராணுவ அதிகாரி கூறுகையில்,‘‘ ஹிஸ்புல்லாவின் தளங்கள், உட்கட்ட அமைப்பு வசதிகளிற்கு அருகே வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். இஸ்ரேலை தாக்குவதற்கான ஆயுதங்களை அடையாளம் கண்ட பிறகு லெபனானில் உள்ள ஹில்புல்லாவின் இலக்குகளை இஸ்ரேல் தாக்கியது’’ என்றார். லெபனானில் புகுந்து தரைவழித் தாக்குதல் மேற்கொள்ளப்படுமா என்று கேட்டதற்கு, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்வோம். தெற்கு இஸ்ரேலில் ஹில்புல்லாவின் தாக்குதலால் வெளியேறிய மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை தேவையானவற்றை செய்வோம்.இதுதான் இஸ்ரேல் அரசின் முன்னுரிமையாகும்’’ என்றார்.

* 300 இலக்குகள் மீது தாக்குதல்
லெபனான் மீது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 300 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் ெலபனானின் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியை தற்போது குறிவைக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் நடத்துவதற்கு கூடுதல் துருப்புகள் வழங்குவதற்கு இஸ்ரேல் ராணுவதளபதி ஹெர்ஸி ஹலேவி ஒப்புதல் அளித்துள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

* ஈரானையும் போர் வலைக்குள் இழுக்க இஸ்ரேல் முயற்சி
ஐநா பொதுச்சபையில் ஈரான் அதிபர் பெசேஷ்கியன் பேசுகையில்,’ மத்திய கிழக்கில் ஒரு பெரிய போரை உருவாக்க இஸ்ரேல் முயற்சி செய்கிறது. அந்த போர் வலைக்குள் ஈரானையும் இழுக்க இஸ்ரேல் முயற்சிசெய்கிறது’ என்றார்.

Related posts

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை

தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் கிடந்ததால் ராணுவ சிறப்பு ரயில் நிறுத்தம்: ரயில்வே ஊழியர் கைது