இலை கட்சியில் முக்கிய தலைகளை களையெடுக்க தயாராகி வரும் சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வெயில் வாட்டும் மாவட்டத்தில் தாமரை கட்சியில் இணைபவர்கள் குறித்து கட்சியின் உண்மையான தொண்டர்கள் என்ன பேசிக்கிறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல தாமரை கட்சியில குற்றப்பின்னணியில இருக்குறவங்களுக்கு, அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிங்க பதவிகளை வாரி வழங்குறாங்களாம். இதனால கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் பெரியளவில் அதிருப்தி எழுந்துள்ளதாம். ஆரம்பத்தில் கட்சியை வளர்க்க நாங்கள் பட்டபாடு இருக்கே, அது இப்போதுள்ள நிர்வாகிகளுக்கு தெரியாது. நாங்க அடிப்பட்டு, உதைப்பட்டு கட்சியை வளர்த்தோம். இப்போது கட்சி கொடியை காரில் மாட்டிக் கொண்டு சிலர் சுத்தி வர்றாங்க… கட்சிக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு அடிமட்ட தொண்டர்கள் புலம்பிட்டு இருக்காங்க… இப்படி இருக்குறப்போ, தாமரை கட்சியில இருக்குற சிலரு முறையாக எந்தவித பதிவும் செய்யாமல் வழக்கறிஞர் என்ற போர்வையில சுற்ற தொடங்கி இருக்காங்களாம். போலீஸ் எதுவும் செய்யக்கூடாதுன்னு பைக்குல போலியாக வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிட்டு ஓட்டிட்டு போறாங்க.
அதோடு வழக்கறிஞர் ஆபீஸை தொடங்கும் தாமரை கட்சியில இருக்குற சிலர், ரியல் எஸ்டேட் அப்படி இப்படின்னு பணம் வசூலித்து தில்லாலங்கடி வேலைகள்ல ஈடுபடுறாங்களாம். இதுல காட்டுப்பாடியான ஸ்டேஷன் பக்கத்துலயே போலியாக வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டு சுத்துறதும், ஆபிஸ் தொடங்கின அந்த பகுதியில் கலக்கி வருகிறாராம். இதுகுறித்து சில வழக்கறிஞர்கள் மூலம் உளவுத்துறைக்கு தகவல் தெரிஞ்சு, உயர் அதிகாரிங்களுக்கு போட்டுக்கொடுத்தார்களாம். இதுனால காட்டுபாடியான ஏரியாவுல அடிக்கடி திடீர் ஆய்வு நடத்தப்படும்னு பரபரப்பா காக்கிகள்-வக்கீல்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் விஷயமாக இது இருக்காம்…’’என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியில் மூன்று முக்கிய தலைகளை களையெடுக்க யார் முடிவு செய்துள்ளார்களாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சேலத்துக்காரர், பல்வேறு தடைகளை தாண்டி இலை கட்சியின் தலைவராகிட்டார். இதற்காக அவர் பட்ட துன்பம் கொஞ்சம் நஞ்சமில்லையாம். தனது வெற்றிப்பயணத்துக்கு தடைக்கல்லாக யார் இருந்தாலும், அவர்களை தூக்க வேண்டிய நேரத்தில் தூக்கிடுவாராம். இப்படித்தான் சின்னமம்மி, தேனிக்காரர், குக்கர்காரர் ஆகியோரை தட்டி தூக்கிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறாராம். ரெண்டு கோடி தொண்டர்களின் தலைவரான என்னை, யாரும் சீண்டக்கூட முடியாது என்ற நிலைக்கு போய்விட்டதாக அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் பேச்சு இருக்காம். இதேபோல, இரண்டாம் கட்ட தலைவர்களையும் தனக்கு அடிமையாக்க திட்டம் போட்டிருக்காராம். ரெண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்களை நியமிக்கலாம்… ஒரே இடத்தில் பவர் இருந்தால் கட்சிக்குள் பிரச்னை வருகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவு தானாம் இது. இதற்காக விழுப்புரம், கொங்கு, முட்டை மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும் முறைப்பு காட்டினாங்களாம். இதனால இலைக்கட்சி தலைவருக்கு மாவட்டத்தை பிரிப்பதில் பெரும் பின்னடைவாம். இதனால அந்த திட்டத்தை தற்போது தள்ளிவச்சுள்ளதாக மூணு தலைகளும் நினைச்சிக்கிட்டிருக்காங்க. ஆனா, அதுதான் இல்லையாம். மாங்கனி மாநகரில் சார்பு அணி நிர்வாகிகள் நியமனம் முடிந்துவிட்டதாம். ஆனால், புறநகருக்கான நிர்வாகிகளை இதுவரை நியமிக்கவில்லையாம். தனது நிழலானவரின் கையில் மாங்கனி புறநகர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகள் இருக்காம். அதனை மூன்றாக பிரிச்சி, தன் மாவட்டத்தையே பிரிச்சிட்டேன், உங்களது மாவட்டத்தையும் பிரிக்கணுமுன்னு சொல்லும் வகையில் முடிவு செய்துள்ளாராம். இதன் பின்னால் மூன்று பேருக்கு செக் வைக்க திட்டம் உள்ளதாம். இதனால தான், புறநகரில் நிர்வாகிகள நியமிக்காம வச்சிருக்கிறதா அவரது அடிப்பொடிகள் சொல்றாங்க. எவ்வளவு நாள் தான் இவர்களிடம் நெளிந்து போவது, இனி நிமிர்ந்து நடைபோடுவதே எங்கள் தலைவரின் முக்கிய பணி என்று அடிப்பொடிங்க புகழ்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியில் நடந்து வரும் பூத் கமிட்டி சண்டை பற்றி சொல்லுங்க கேட்போம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் தற்போது பூத் கமிட்டி கூட்டம் நடத்த கட்சியின் மாவட்ட ரீதியாக நிர்வாகிகளை நியமனம் செய்திருக்கிறார்கள். இதில் 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கடலோர மாவட்டத்துக்கு கிழக்கு, மேற்கு என தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களாம். பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சியாக பிரித்து பூத் கமிட்டி கூட்டம் போட்டு வருகிறார்களாம். இதுவரைக்கும் நடந்த கூட்டத்தில் உருப்படியாக தேர்தல் பணியை பற்றி பேசியதும் இல்லையாம். கட்சியில் செயல்படாமல் உள்ள மூத்த நிர்வாகிகளை சந்தித்து சமாதானம் செய்ய வேண்டும் என கூட்டத்தில் இலை கட்சியினர் சிலர் வைத்த கோரிக்கையை மாவட்ட பொறுப்பாளராக வந்த ஒருவர், நிராகரித்து விட்டாராம். ஒரு சாராரை மட்டும் அழைத்து பேசி ஆலோசனை நடத்தி என்ன பலன்… இரு தரப்பையும் அழைத்து பேசி அதிருப்தியாளர்களை சரி கட்டாமல் பெயரளவுக்கு பூத் கமிட்டி எதற்கு அமைக்கிறாங்க… என்று தொண்டர்கள் கேள்வி எழுப்புகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி