ஒரு மாதத்தில் இலை கட்சியில் மாற்றம் வரும் என நிர்வாகிகளுக்கு வைத்தி ‘டானிக்’ கொடுத்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வெயிலூரை போல கிரிவலத்துல பதிவு முறைகேடு நடந்து இருக்குதான்னு விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே..’’ என அடுத்த கேள்விக்கு போனார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர்ல தான் பதிவுத்துறையில பத்திரத்தை பதிவு செய்றதுல முறைகேடு, லஞ்சம், கணக்குல வராத பணம், வீட்டுல மண் தோண்டி புதைச்சு வெச்ச பணம் பறிமுதல்னு போன மாதம் முழுசுமாக பரபரப்பாக போச்சு.. இப்ப பக்கத்துல இருக்குற கிரிவலம் மாவட்டத்துக்கு இந்த பரபரப்பு பத்திக்கிச்சு.. கிரிவலம் மாவட்டம் மா நகர் ஆட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில மாதங்கள்ல மட்டும், ஏகப்பட்ட வீட்டுமனைகள் பத்திரம் பதிவு செய்றாங்களாம்.. இதனால புரோக்கர்கள் தலையீடுதான் அதிகமாக இருக்குதாம்.. அவங்க மூலமாக போனாத்தான் பதிவே சீக்கிரம் நடக்குதாம்.. இதனால வெயிலூரை போலவே, கிரிவலத்துலயும் விஜிலென்ஸ் பார்வை விழுந்துச்சு.. 4 நாளைக்கு முன்னாடிதான் பதிவு ஆபிஸ் 2ல் ரெய்டு நடத்தி 79கே பறிமுதல் செஞ்சாங்க.. இப்ப 2 நாளைக்கு முன்னாடி திரும்பவும் கிரிவலத்துல இன்னொரு பதிவு ஆபிஸ்ல சம்திங் மேட்டர் ஓடுதுன்னு சொல்லியிருக்காங்க.. இதனால விஜிலென்ஸ் திடீர்னு பதிவு ஆபிசுக்கு போயி கதவை பூட்டிக்கிட்டு நடத்துன ரெய்டுல, கணக்குல வராத பணம் 2எல் சிக்கியிருக்குது… இப்படி பதிவு ஆபிஸ்ல டெய்லி ரெய்டு நடத்துனாவே பல எல் கிடைக்கும் போல இருக்குதேன்னு பதிவு செய்ய போன ஜனங்க பேசிக்கிறாங்க.. அதுமட்டுமில்லாம, வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடியில கவர்மென்ட் நிலத்தை தனி நபருக்கு பதிவு செஞ்ச மாதிரி, கிரிவலத்துல ஏதாவது நடந்து இருக்குதான்னு பதிவுத்துறை தலைமை விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.. இதுல யார், யார் சிக்கப்போறாங்களோன்னு அந்த துறையிலயே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஒரு மாதத்தில் இலை கட்சியில் மாற்றம் இருக்கும்னு தனது முக்கிய நிர்வாகிகளுக்கு வைத்தியானவர் ‘டானிக்’ கொடுத்திருக்கிறாராமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியத்தை சேர்ந்த தேனிக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகியான வைத்தியானவர் தனது ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்… ஒவ்வொரு முறையும் தேனிக்காரர் பின்னடைவை சந்திக்கும் போது, தனது ஆதரவாளர்கள் வெளியே செல்லாத வகையில் டானிக் பேச்சு கொடுத்து, அவர்களை சமரசம் செய்து வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்… ஆனால், இந்த முறை சில ஆதரவாளர்கள் அவரை விட்டு சேலத்துக்காரர் அணிக்கு தாவி விட்டார்களாம்… மீதமுள்ள ஆதரவாளர்களையாவது தக்க வைத்துக்கொள்ள அவர்களை அழைத்து பேசியிருக்கிறார்.. 30 நாட்களுக்குள் இலை கட்சியில் நிச்சயம் மாற்றம் இருக்கும்னு அவர் தனது ஆதரவாளர்களிடம் மீண்டும் ‘டானிக் பேச்சு’ கொடுத்து இருக்கிறார். வழக்கம் போல், அவரது ஆதரவாளர்களும் வைத்தியானவரை நம்பி சென்றுள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரியில் புகார் பெட்டியை திறந்து தடாலடி காட்டும் மாஜி அமைச்சர்பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் புல்லட் சாமி அமைச்சரவையில் காரைக்காலுக்கு பிரதிநிதிதித்துவம் அளிக்கும் வகையில் தலித்சமூகத்தைச் சேர்ந்த பெண் எம்எல்ஏவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களை காட்டி தனது அமைச்சரவையில் இருந்து அவரை நீக்கிய புல்லட் சாமி, அதே காரைக்காலை சேர்ந்த முருக கடவுள் பெயர் கொண்டவருக்கு வாய்ப்பு கொடுத்தாரு.. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே, அமைச்சர் பதவியேற்ற முருக கடவுள் பெயர் கொண்டவருக்கு இதுவரை எந்த துறையும் ஒதுக்கப்படாத நிலையில், பெயரளவில் மட்டுமே அமைச்சராக தனது பிராந்தியத்தில் 3 மாதமாக சுற்றி வருகிறாரு.. இதனிடையே புல்லட் சாமி அரசுக்கு எதிராக பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் தனிகோஷ்டியை உருவாக்கி போர்க்கொடி தூக்கியுள்ளார்களாம்.. இதன் பின்னணியில் புல்லட் சாமியின் கட்சி பிரபலங்கள் சிலரும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் உலாவுகின்றன. புதுச்சேரி அரசியல் களம் பரபரப்புடன் நகரும் நிலையில், பதவியை இழந்த அந்த பெண் அமைச்சரோ பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி இருப்பதோடு, தொகுதி மக்கள் தன்னிடம் குறைகளை தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டியை திறந்து தடாலடி காட்டி வருகிறாராம்.. இதனால் காரைக்கால் என்ஆர் காங்கிரசில் புகைச்சல் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பூட்டு மாவட்டத்தில் ஆளும் ஒன்றிய அரசை எதிர்ப்பதில், தேசிய கட்சிக்காரர்களின் ‘கை’ ஓங்கி இருக்கிறதாம்.. இக்கட்சியின் மாவட்ட தலைமையானவர் தலைமையில் தினந்தோறும் ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒவ்வொன்றாக அறிவித்து, ஆட்களை திரட்டி அதிரடியாக நடத்தி வர்றாங்க… ஒன்றிய அரசால் ஏறி வரும் விலைவாசி துவங்கி, தாமரைக் கட்சியின் மாநில தலைவரின் செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் வரையிலும் பல்வேறு கட்டமாக களமிறங்கி இடைவிடாமல் எதிர்ப்பு செயல்பாடுகளை முன்னெடுத்து நடத்தி வர்றாங்க.. இதில் விழி பிதுங்கிப் போயிருக்கும் தாமரைக்கட்சியினர், என்ன செய்வதன்று தெரியாமல், மாவட்ட தலைவருடன் சேர்ந்து எஸ்பி, காவல்நிலையங்கள் என தேசிய கட்சிக்காரர்களில் பிடிக்காதவர்கள் மீதெல்லாம் புகார் கொடுத்து வருகின்றனராம்… போராட்டத்திற்கு பதிலாக போராட்டம் செய்யாமல், போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார்களே என தேசிய கட்சிக்காரர்கள், இன்னும் போராட்டங்களை தீவிரப்படுத்த தொடங்கி விட்டாங்களாம்.. இவர்களை எப்படி சமாளிப்பதுன்னு தெரியாம தாமரை கட்சி நிர்வாகிகள் மண்டை காய்ந்து வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

புதிய நாடாளுமன்றத்துக்குள் புகுந்த மழைநீரால் அதிர்ச்சி: பக்கெட் வைத்து பிடிக்கும் ஊழியர்கள்

தென்னிந்தியாவில் கொட்டிய மழை வடமேற்கு, கிழக்கில் இல்லை; 230 மாவட்டத்தில் கன மழை 232ல் சராசரிக்கும் குறைவு: இந்திய வானிலை மையம் தகவல்

ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு தகுதி!