இலை தலைவர் மேலுள்ள ஆத்திரத்தில் கட்சிக்காரர்களை தவிர்க்கும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கைதிகள், உறவினர்களிடம் லஞ்சம் வாங்கி சஸ்பெண்டான உதவியாளர்களுக்கு 6 வருஷமாக விசுவாசம் காட்டும் அதிகாரிங்க மேல வார்டன்கள் கொந்தளிப்பில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாநகரில் உள்ள மத்திய ஜெயிலில் அதிகாரிகளின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் சம்பவங்கள் நடந்துக்கிட்டிருக்காம்.. இந்த ஜெயிலில் கைதிகளிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இன்னும் சஸ்பெண்டிலேயே இருக்காராம்.. அதேபோல, கைதிகளுக்கு உறவினர்கள் கொடுக்கும் பணத்தில் ரூ.7 லட்சம் வரை இன்னொரு உதவியாளர் அபேஸ் செஞ்சாராம்.. அவரும் ஆறு ஆண்டுகளாக சஸ்பெண்டில்தான் இருக்காராம்.. இவர்களுக்கான பிழைப்பூதியம் மட்டும் மாதம்தோறும் ரூ.1 லட்சம் போகுதாம்.. எந்தவித தங்குதடையின்றி ஆறு ஆண்டுகளாக அவர்களுக்கு வழங்குவதை மட்டும் அங்குள்ள அதிகாரிகளே சரியாக செஞ்சிக்கிட்டு இருக்காங்களாம்.. இந்த ரெண்டு பணியிடத்திற்கு போதிய ஆட்கள் இல்லாததால் அதிகாரிகள் திணறி வரும் நிலையில், அந்த இடத்தை காலியாக இருப்பதை வெளியே கொண்டு வராமல் பார்த்துக் கொள்கிறார்களாம்.. ரெண்டு பேர் மீதும் வழக்கு இருந்தாலும், அவர்களை வேறு இடத்திற்கு மாறுதல் செஞ்சா, காலியிடத்திற்கு வேறு நபர்களை நியமிக்கலாம்.. அவ்வாறு செய்வதில் அங்குள்ள அதிகாரிகளுக்கு விருப்பம் இல்லையாம்.. சிறையில் வேலை பார்க்கும் வார்டன்களுக்கு சம்பள பிரச்னை இருந்தால் அதனை சரி செய்து கொடுப்பதில் ஆர்வம் காட்டாத அதிகாரிகள், சஸ்பெண்ட் ஆனவர்களுக்கு விசுவாசமாக இருப்பதாக வார்டன்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கு..
இவர்கள் இப்படி என்றால் சிறை டாக்டர்கள் ரொம்பவுமே ஹேப்பியா இருக்காங்களாம்.. காலையில் வருவது கைதியின் முகத்தை பார்க்காமல் மாத்திரைகளை கொடுப்பது, கலையரங்கில் நடக்கும் இசைக்குழுவினர் பாடும் பாடல்களை ரசிப்பதிலேயே காலத்தை கழிக்கிறாங்களாம்.. அதோட கொசுக்கடியில் சிக்கியிருக்கும் கைதிகளை கவனத்தில் கொண்டு கொசுமருந்து அடித்தால் கொஞ்சமாவது ஹேப்பியா இருப்போமுன்னு கைதிகளும், இரவு வார்டன்களும் சொல்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரர் மீதான கடும் அதிருப்தியில் கட்சி நிர்வாகிகளிடம் கூட பேசுவதை தவிர்த்து வருகிறாராமே மாஜி அமைச்சர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குற்றவழக்கில் சிக்கி நிபந்தனை ஜாமீனில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் மாவட்ட இலை கட்சி மாஜி அமைச்சர் ஒருவர் ரொம்பவும் சைலண்டாக இருந்து வருகிறாரு.. சொந்த மாவட்டத்திலேயே அவர் இருந்தாலும் கூட எங்கு இருக்கிறார் என்பதுகூட தெரியாத அளவுக்கு இருக்கிறராம்… கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை கூட அவர் சந்திப்பது இல்லையாம்.. முக்கியமாக, மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளிலும் மாஜி அமைச்சர் தலைகாட்டாமல் இருந்து வருகிறாராம்… இதனால் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை மாஜி அமைச்சர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனராம்.. குற்ற வழக்கில் சிக்கிய போது சேலத்துக்காரர் போன் பண்ணி ஆறுதல்கூட தெரிவிக்கவில்லையாம்.. அவர் மீதான கடும் அதிருப்தியில் தான் நிர்வாகிகளிடம் பேசுவதையும் தவிர்க்கிறாராம். இதுதான் மாஜி அமைச்சரின் சைலண்டுக்கான காரணம்னு கட்சிக்குள்ளே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எதுக்குமே வராதவர் நகர
செக்ரட்ரியா எனக்கேட்டு இலை பார்ட்டியில் கொடி பிடிக்க தொடங்கிட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாநில அளவுல இலை பார்ட்டியில பல பிரச்னைகள் தலைதூக்கி நிற்குது.. அதுக்கு மேல கிரிவலம் மாவட்டத்துல இலை பார்ட்டிகளோட பிரச்னை இருக்கும்போல இருக்குது.. கிரிவலம் மாவட்டத்துல பெயரில் நிலவை கொண்டவரு டிஸ்ட்ரிக் செக்ரட்ரியாக இருக்குறாரு.. இவரு ஒருபக்கம்னா, தெற்கு டிஸ்ட்ரிக் செக்ரட்ரியாக புல்லாங்குழல் கடவுள் பெயர் கொண்டவரு ஒரு பக்கம்னு 2 பேரும் எதிர் துருவங்களாக இருக்குறாங்க.. தொண்டர்களும் ரெண்டுபேருக்கும் பின்னாடி ஒவ்வொரு அணியாக கொடி புடிக்குறாங்க.. இதுல நகரத்தோட செக்ரட்ரியாக பெயரில் செல்வத்தை வெச்சிருக்குறவரு, இலை ஆட்சியில நல்லா சம்பாதிச்சாராம்.. ஆட்சி பறிபோன பின்னாடி, இவரு எந்த நிகழ்ச்சிக்கும் வர்றதே இல்லையாம்.. ஆனா இவர் தான் நகரத்தோட செக்ரட்ரியாக இருக்குறாராம்.. அதுக்கு காரணம் அவரோட நிதி ஆதரவு, பெயரில் நிலவை கொண்ட செக்ரட்ரிக்கு கிடைக்குதாம்.. இதனால நகர செக்ரட்ரியாக அவரு தொடர்ந்து இருந்து வர்றாராம்.. ஆனா, மற்ற நிர்வாகிகளும், தொண்டர்களும், எந்த நிகழ்ச்சியிலயும் பங்கேற்காதவரை, எப்படி நகர செக்ரட்ரியாக இருக்க முடியும்னு கொடிபுடிக்குறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரியில் புல்லட்சாமியின் நிலவரம் என்ன..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியை தழுவியது. கூட்டணிக்குள் உரசலும் தொடங்கியது. இருப்பினும் புல்லட்சாமியை எப்படியாவது தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதில் ஒன்றிய அதிகார வர்க்கம் உறுதியாக உள்ளது. தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்பட்ட ரேசன் கடை திறப்பு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்ட ஒன்றிய தரப்பு, அதற்கான பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில் புல்லட்சாமியோ அதற்கான பணிகளை வேகப்படுத்தினார். சட்டசபை கூட்டத் தொடரிலும் இதுபற்றிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இதனிடையே புல்லட்சாமியை மிஞ்சிய சபையின் நாயகரான அந்த செல்வமானவர், இலவச அரிசி எங்கு வழங்கப்படும், மானிய விலையில் எந்தெந்த பொருட்கள், எவ்வளவு ரூபாய்க்கு வழங்கப்படும், எந்த மாதத்தில் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்ற மக்களின் மனம்குளிரும் வகையிலான அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் வசிக்கும் பகுதியான காரைக்காலுக்கு சென்றிருந்தபோது வெளியிட்டு அதிரடி காட்டினார். இதனால் புதுச்சேரியில் முதன்மையான அமைச்சர் புல்லட்சாமியா… செல்வமானவரா… என்ற சலசலப்பு ஓடுகிறது’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

பொன்னேரியில் தண்டவாள போல்ட்டுகளை கழற்றி மின்சார ரயிலை கவிழ்க்க சதி?.. மர்ம நபர்களுக்கு வலை; 2 தனிப்படை தீவிர விசாரணை

ஆம்னி பேருந்தில் பார்சலில் இருந்த ரூ. 2.15 கோடி ரொக்கம் பறிமுதல்

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்