இலை கட்சியில் ஐக்கியமாகும் தாமரை கட்சியினரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘எ க்கு தப்பாக பேசி தாமரை தலைகளை இலை பக்கம் இழுத்து வரும் தலைவரு யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரை கட்சியில் ெமம்பர்ஷிப் எண்ணிக்கையை குறைத்து காட்டுகிறேன் என்று மலைக்கும் சேலம் விஐபிக்கும் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு வீரியம் அதிகமாகவே தெரியுதாம். இப்போது சேலத்துக்காரரு தன் சொந்த ஊரில் முகாம் போட்டிருக்காரு. தினமும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, அவரை சந்திச்சு இலை கட்சியில் இணைவதாக சேதிகள் வந்துகிட்டே இருக்காம். இப்படி இணைபவர்கள் தங்களை தாமரை கட்சி நிர்வாகிகள் என்று கூறிக் கொண்டு அதிகளவில் வர்றாங்களாம். உடனே அவர்களை வரவேற்று, சால்வை போட்டு சேலத்துக்காரரும் தனது கட்சியில் சேர்த்துகிட்டாராம். சேலத்துக்காரரு முன்னிலையில் சேருறவங்க எல்லாம் தாமரை கட்சிக்காரங்கன்னு இலை கட்சிகாரங்க தம்பட்டம் அடிக்கிறாங்க. இது என்ன லாஜிக்கின்னே தெரியல. தேர்தல் நேரத்தில் என்ன நடக்கப்போகுது என்பது யாருக்கு தெரியும்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை, குக்கருக்கு கட்சிக்காரர்கள் அல்வா கொடுத்துட்டு வேறு கட்சிக்கு போறாங்களா என்ன…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இலை கட்சியில் தேனிக்காரர் அணியினரும், குக்கர்காரரின் ஆதரவாளர்களும் சரி, கட்சி நடவடிக்கையில் நேரடியா இறங்காமல் மவுனம் காத்து வர்றாங்களாம். இந்த மாவட்டத்துல இரண்டு அணிகளுக்கும் ஆள் பலமும் இல்லை, செல்வாக்கும் இல்லை என்பது வெட்டவெளிச்சமா தெரியுது என்ற பேச்சு மூத்த நிர்வாகிகள் பேசும்போதே தெரிகிறதாம். அதனால, அல்வா மாவட்டத்துல இலை குடும்பத்துக்குள் மவுன புரட்சியே நடக்குதாம். இந்த மவுனம்தான், சேலம், குக்கரை அலறவைக்கிறதாம். கட்சி மற்றும் தொண்டர்களை சரியா கையாள தெரியவில்லை என்பதுதான் இரண்டு அணிகளில் உள்ள தலைவர்கள், தொண்டர்களின் மவுனத்துக்கு காரணமாம். அம்புலி மாமா கதை புத்தகத்துல சொல்ற மாதிரி, ஒரு காலத்துல தேனிக்காரருக்கும், குக்கர்காரருக்கும் அல்வா, முத்து மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு இருந்தது. தற்போது இருவரும் கை கோர்த்த போதிலும், அதற்கு தென் மாவட்டங்களில் எந்த ஒரு ரெஸ்பான்சும் இல்லை. இதனால் தேனிக்காரர், குக்கர்காரருக்கு ஆதரவாளரா இருந்தவர்கள் எல்லாம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்காங்க. கேட்டால் செல்வாக்கு இல்லாத தலைவர்கள் பின்னாடி சென்றால் எங்கள் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்னு ஜோசியரிடமா கேட்க முடியும் என்கிறார்களாம். இதே நிலை நீடித்தால் தென் மாவட்ட அரசியலில் தேனி, குக்கர் கட்சிக்கு மட்டுமல்ல சேலம்காரம் அரசியல் முகவரியை தொலைத்தவர்களாக அல்வா மாவட்டத்தில் இருப்பாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கரன்சி குவிக்கும் பொறியாளரை பற்றி புகார் குவியுதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை புறநகர் பகுதியான கீரணத்தம் என்ற ஊரில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் உள்ள பகுதியில் ஏராளமான ஐடி கம்பெனிகள் வந்துள்ளதால், இதை சுற்றிலும் புதிது புதிதா குடியிருப்புகள் உருவாகின்றன. இதனால், புதிய மின்இணைப்பு பெறுதல், தற்காலிக மின் இணைப்பு பெறுதல், பெயர் மாற்றம், வணிக மின் இணைப்பை வீட்டு மின் இணைப்பாக மாற்றுதல் போன்ற பல வகையான விண்ணப்பங்கள் இந்த அலுவலகத்தில் மலைபோல குவிந்துள்ளதாம். இவற்றை ஆய்வுசெய்து, ஒப்புதல் அளிப்பதா, வேண்டாமா என முடிவு எடுப்பவர், இங்குள்ள ஒரு உதவி பொறியாளர். அவர், ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பரிசீலிக்கும்போது, கரன்சி வாங்காமல், பேப்பர்களை நகர்த்துவது இல்லையாம். பணியின் தன்மைக்கு ஏற்ப ரேட் பிக்ஸ் செய்துகொண்டு, கரன்சி குவிக்கிறாராம். எட்டு எழுத்து பெயர் கொண்ட அந்த உதவி பொறியாளர், கரன்சி குவிப்பதில் நாளுக்கு நாள் உச்சத்துக்கு போய்க்கொண்டே இருக்கிறாராம். இவருக்கு, யாராச்சும் சம்திங் கொடுக்கலைன்னா… ேபப்பர்களை நிறுத்தி கம்பெனி, வீடுகளுக்கு மின்சாரம் கொடுக்காமல் நிறுத்திவிடுகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குமரியில தாமரை மலருமா, மலராதா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘குமரி தாமரை கட்சியில் இப்போது ஏகப்பட்ட கோஷ்டிகள் உள்ளதாம். மாவட்ட முக்கிய நிர்வாகி முன்பு கடைநிலை தொண்டர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை அக்கறையோடு பேசியவர், தற்போது கட்சி தொண்டர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு சென்று விட்டாராம். அண்மையில் திட்டக்குழு தேர்தல் தொடர்பாக மாவட்ட அளவில் கூட்டணி வைக்க இலை கட்சியை சேர்ந்த சுந்தரமானவர் நேரடியாக பேசியும், அலட்சியப்படுத்தி விட்டாராம். இதனால் நகர்ப்புற திட்ட குழு உறுப்பினர்கள் பதவி இரு கட்சிகளுக்கும் கிடைக்கவில்லை. இந்த வருத்தம் அதிமுக மட்டுமின்றி தாமரை பிரதிநிதிகள் மத்தியிலும் ஏற்பட்டு இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வெயிலூர்ல என்ன செய்தாலும் தாமரை காய்ந்து கருகிவிடும்னு இலை கட்சிக்காரர்கள் பேசுவது உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘வர்ற எம்பி எலக்‌ஷன்ல வெயிலூர் தொகுதியில, இந்த முறை நமக்கும் ஆளுங்கட்சிக்கும்தான் போட்டி இருக்கணும். தாமரைக்காரங்களுக்கு வெயிலூரை ஒதுக்கித்தரக் கூடாதுன்னு இலைக்கட்சிகாரங்க பேசிக்குறாங்க. தாமரைக்கு தந்தா, அவுங்க பிசினஸ்ல ஒரு காலு, அரசியல்ல ஒரு காலு வெச்சிருக்குறவருக்குத்தான் சீட் கொடுப்பாங்க. ஏற்கனவே நம்ம ஆளுங்கள அவரு தரக்குறைவா பேசிட்டாரு. இதனால இலைக்கட்சி கட்சி தொண்டருங்க மத்தியில் கொதிப்பை உண்டாக்கியிருக்குது. இந்த தடவை நாமதான் வெயிலூர்ல நிக்கணும். நாம நின்னா ஈசியா தொகுதியை கைப்பற்றிடலாம்னு சேலத்துக்காரர்கிட்ட இலைக்கட்சி நிர்வாகிங்க சொல்றாங்களாம். அப்படியே தாமரைக்கு சீட் கொடுத்தா, இலைக்கட்சி காரங்க ஒத்துழைக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டு இருக்காங்களாம். இந்த தகவல் தெரிஞ்சதும் பிசுனஸ், அரசியல் 2 இன் ஒன் பார்க்குறவரு நொந்துபோய்ட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

ஒரு தமிழன் பிரதமராக பதவியேற்பதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும் : கமல்ஹாசன்

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு