இலைக்கட்சிக்கே மீண்டும் தாவும் மைண்ட்செட்டில் இருக்கும் பெங்களூருகாரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஹனிபீ தொகுதியை பலாப்பழக்காரர் மறந்துட்டாராமே?..’’ என முதல் கேள்வியைக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வரலாறு காணாத வெயில் தமிழ்நாடு முழுவதும் கொளுத்திக்கிட்டு இருக்கு. வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீர்மோர் பந்தலை ஒவ்வொரு கட்சியினரும் திறந்துட்டு வர்றாங்க… ஹனிபீ மாவட்டத்தில் பல இடங்களில் நீர்மோர் பந்தல்கள் திறந்திருக்காங்க.. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட குக்கர் கட்சியினர், தாமரைக்கட்சியினர் கூட ஹனிபீ தொகுதியில் நீர்மோர் பந்தலை திறந்திட்டாங்களாம்.. ஆனால், ஹனிபீ தொகுதியில் பிறந்து, வளர்ந்து, ஐந்து முறை எம்எல்ஏவாகி, 3 முறை முதல்வரான பலாப்பழக்காரர் தரப்பில், ஒரு நீர்மோர் பந்தல் கூட திறக்கப்படவில்லையாம்… கடலோர மாவட்டத்திற்கு தேர்தலில் போட்டியிடத்தான் இடம்பெயர்ந்தாருன்னு பார்த்தா, ஹனிபீ தொகுதியவே மறந்துட்டாரோ? ஒரு இடத்தில் கூட திறக்காதது ஏன்? திறக்கச் சொல்லி உத்தரவு கூட வரலையேன்னு அவரது ஆதரவாளர்களே புலம்பி வருகின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முதிர்ந்த ரப்பர் மரங்களுடன் ஜாதி மரங்களையும் வெட்டி கடத்த முயன்றதாக கோட்ட மேலாளர் மீதான விசாரணை கிடப்பில் கிடக்குதாமே?..’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா. ‘‘குமரியில் அரசு ரப்பர் கழகம் சார்பில், காப்புக் காடு பகுதியில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இங்கு பால் வற்றிய வயது முதிர்ந்த ரப்பர் மரங்களை முறித்து விட்டு புதிய ரப்பர் மரக்கன்றுகளை வளர்ப்பது வழக்கம். மணலோடை டிவிசன் காளிகேசம் பிரிவில் முதிர்ந்த ரப்பர் மரங்களுடன், பாறை பகுதிகளில் நின்ற விலை உயர்ந்த ஈட்டி, தேக்கு உள்ளிட்ட பல ஜாதி மரங்கள் கடத்துவதற்காக வெட்டி போடப்பட்டுள்ளதாம்.. இதற்கு உத்தரவிட்ட அலுவலர், கோட்ட அலுவலராக பொறுப்பில் வேறு டிவிசன் மாற்றப்பட்டதால், வெட்டப்பட்ட மரங்கள் பல மாதங்களாக ரப்பர் தோட்டத்திற்குள் கிடந்திருக்கு.. பின்னர், இந்த மரங்களை வேறு ஒரு அலுவலர், துண்டு துண்டாக வெட்டி கடத்த முற்பட்ட போது, ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மூலம் தகவல் வெளியே கசிந்து, வனத்துறை புலனாய்வுக்குழு ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க கடந்த இரு மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.

மரங்களை வெட்ட உத்தரவிட்ட கோட்ட மேலாளர் மீதும், விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. வழக்கமாக கோட்ட மேலாளர் மீதான புகார்களை பொது மேலாளர் தான் விசாரிக்க வேண்டும். ஆனால், பொது மேலாளர் பணியிடம் காலியாக உள்ளதால், மற்றொரு கோட்ட அலுவலரை நியமித்து உத்தரவிடப்பட்டது. பெயரளவிற்கு தான் விசாரணை நடந்ததாம்.. ஒருவர் மாட்டினால் பிறரும் மாட்டக்கூடும் என்பதால், சிக்கிக்கொண்ட கோட்ட மேலாளரிடம் சில லகரங்கள் பேரம் பேசி, விசாரணை அறிக்கை இதுவரை தாக்கல் செய்யப்படவில்லையாம். இதற்கு துறையின் முக்கிய அதிகாரிகளும் உடந்தையாக இருக்காங்களாம்.. வருகிற 31ம் தேதியோடு குற்றம் சாட்டப்பட்ட கோட்ட மேலாளர் ஓய்வு பெற உள்ளார். அதற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுமா என ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மணல் வாகனத்துக்கு பச்சை கொடி காட்டி வழி அனுப்பும் ஸ்டார் காக்கி பற்றி சொல்லுங்களேன்’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடி தாலுகாவுல பொன்னான ஊருக்கு பக்கத்துல மேல் என்று தொடங்கி பாடி என்று முடியுற காக்கிகள் நிலையம் இருக்குது. இங்க 2 எழுத்து பெயர் கொண்ட 2 ஸ்டார் லேடி காக்கி பணிபுரிஞ்சு வர்றாங்க. இவங்க, கடந்த நாடாளும் மன்ற எலக்‌ஷனுக்காக டிரான்ஸ்பர்ல வந்திருக்காங்க. எலக்‌ஷன் முடிஞ்சதும் வேற காக்கிகள் நிலையத்துக்கு டிரான்ஸ்பர் செஞ்சிடுவாங்கன்னு, வசூல் வேட்டையில இறங்கிட்டாங்களாம்.. போன மாசம் அந்த காக்கிகள் நிலைய எல்லையில ஒரு நார்த் இந்தியன் இறந்துட்டாராம்.. அந்த கம்பெனி ஓனர்கிட்ட மிரட்டி பேசி ஏதோ வாங்கிட்டாங்களாம். அதோட நைட் டைம்ல மணல் கடத்தல் ஓஹோன்னு நடக்குதாம்.. இதுல குறிப்பா அந்த லிமிட்ல 3 மாபியாக்கள் மணல் கடத்தல் செய்றாங்களாம்.. சர்க்கிள் நிலையம் என்பதால இந்த 2 ஸ்டார் காக்கிதான் அங்க எல்லாமேவாம்.. இதனால செக்போஸ்ட்ல இவங்களே உட்கார்ந்துகிட்டு, கடத்தல் வண்டிகளுக்கு பச்சை கொடி காட்டி வழி அனுப்புறாங்களாம்..

கோடையிலயும் இந்த 2 ஸ்டார் காக்கியோட காட்டுல பணமழை பெய்யுதாம். மாவட்ட உயர்காக்கிகள் விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும். அதோட, ஸ்ட்ரிட்டா இருக்குற ஸ்டார் காக்கிகளை அந்த லிமிட்ல நியமிக்கணும். அப்பத்தான் கனிமத்தை காப்பாற்ற முடியும்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சிக்கே மீண்டும் தாவும் மைண்ட்செட்டில் இருக்கிறாராமே பெங்களூருகாரர்’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கழுத்தளவு சிக்கல் வந்த போதெல்லாம், தீவிர விசுவாசியான தேனிக்காரருக்கு சி.எம்., பதவியை கொடுத்துட்டுப் போனார் மம்மி. அவ்வளவு நம்பிக்கையானவரை கட்சியின் கரை வேட்டிய கூட கட்ட முடியாத அளவுக்கு, சேலத்துக்காரர் முற்றிலும் முடித்து விட்டாராம்.. இதனால் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த நேரத்துல, தாமரை எனும் ஓட்டை படகு ஒண்ணு மிதந்து வந்திச்சாம்.. இதிலாவது ஏறி தப்பிச்சிடலாம் என நினைத்து, பலாப்பழத்துல நின்னாராம் தேனிக்காரர். அவருக்காக சேலத்து தலைவரை ஊரெல்லாம் வசை பாடிக்கொண்டு வந்தவர் தான் பெங்களூருக்காரர்.

ஆனால், அவர எலெக்சன் பிரசாரத்துக்கு கூட, தேனிக்காரரு கூப்பிடலன்னு ரொம்பவே வருத்தமாம்.. இதனால வெளியேறிடலாமுங்குற முடிவுல இருக்காராம் பெங்களூருகாரரு.. எலக்சன் ரிசல்ட் முடிவை வச்சி, எங்கே தாவலாம்? அல்லது தாய் கழகத்திலேயே சேந்திடலாமான்னு யோசனையில இருக்காராம்.. மறப்போம், மன்னிப்போமுங்குற பார்முலாவை கையில வச்சிக்கிட்டு, சேலத்து தலைவரிடமே தஞ்சம் அடைய திட்டம் வச்சிருப்பதாக தேனிக்காரரின் ஆதரவாளர்கள் சொல்றாங்க.. அதே சமயம், கர்நாடக இலைக்கட்சி செயலாளர் பதவி காலியாவே இருக்காம்.. இந்த நேரத்துல அங்க போய் சேர்ந்தா, அந்த பதவியை கைப்பற்றிடலாம் என்கிற எண்ணமும் பெங்களூருக்காரருக்கு இருக்காம்.. அப்படி தாய் கட்சிக்கு போகும் போது, வெறும் கையோட போகாமல், முடிந்த அளவில் தனது கோஷ்டி மா.செ.க்களையும் தள்ளிக்கிட்டு போகலாமுன்னு இருக்காராம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்