இலை தலைவர் போட்ட பொறுப்பாளரை பார்த்து நிர்வாகிகள் சிரிப்பாய் சிரிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாங்கனிக்கு நீ தான் சரியான ஆளுன்னு இலைக்கட்சி தலைவரே சொல்லிட்டார்னு ஹேப்பியான பொறுப்பாளரை பார்த்து லோக்கல் நிர்வாகிங்க சிரிப்பா சிரிக்கிறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் எதிர்காலமே வருகிற சட்டமன்ற தேர்தல்தானாம்.. அதை எதிர்நோக்கியே அவரது பயணமும் இருக்கிறதா இலைக்கட்சி தொண்டர்கள் சொல்றாங்க.. இலைக்கட்சியோடு கூட்டணி அமைச்சு.. டெல்லியில் மெஜாரிட்டியுடன் ஆட்சியை அமைப்பதோடு, இலைக்கட்சியையும் தனது அடிமையாக்கி விடலாம் என்கிற ஒன்றிய மலராத கட்சியின் மாநில மாஜி போலீஸ்காரர் போட்ட திட்டத்தை இலைக்கட்சி தலைவர் தவிடுபொடியாக்கி, கூட்டணியில இருந்து வெளியே வந்துட்டாராம்.. எங்களுக்கு டெல்லி ஆட்சியை பற்றி எந்த கவலையும் இல்லை, எங்களது குறியே சட்டமன்றம்தான்னு இலைக்கட்சி தலைவர் உறுதியா சொல்லிட்டாராம்.. அதற்கான வேலையிலும் இறங்கிட்டாராம்.. குறிப்பா அவரது சொந்த ஊரான மாங்கனி நகரில் இந்த பணி தீவிரமாகியிருக்காம்.. இதற்கான பொறுப்பாளராக தர்மபுரியை சேர்ந்த மாஜி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்காராம்.. அவரும் களத்தில் குதித்ததோடு, 60 வார்டுகளை கொண்ட மாநகரை 120 வார்டாக மாற்றப்போவதாக கூறியிருக்காரு.. 7 பூத்துக்கு ஒரு வட்டச்செயலாளர் நியமிக்கப்போறதா சொன்னதோடு மட்டுமல்லாமல், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எனது சிறப்பான பணியை பாராட்டியதோடு, மாங்கனிக்கு நீ தான் சரியான ஆளுன்னு இலைக்கட்சி தலைவர் கூறியதா ரொம்பவே ஹேப்பியா சொன்னாராம்.. இதைக்கேட்ட லோக்கல் நிர்வாகிகள் ஊமை சிரிப்பு சிரிச்சாங்களாம்.. சவுத், வீரபாண்டி, வெஸ்ட் தொகுதியில சட்ட மன்ற உறுப்பினராக இருந்தும் தலா 25 ஆயிரம் ஓட்டும், வடக்கு தொகுதியில 40 ஆயிரம் ஓட்டும் பின்னாடி போயிட்டோம்.. இது எப்படி சிறப்பான பணியா இருக்கும் என்றதோடு அவரது மாவட்டத்துல யாரும் அவரை கண்டுக்கிடாததால நம்மூருக்கு வந்து உருட்டுறாருங்கன்னு சொல்லி சிரிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘லஞ்சப் பணத்தோடு சிக்கிய உதவிப் பொறியாளர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இடமாறுதல் உத்தரவு போட்டு பத்திரமா அனுப்பி வைத்துவிட்டாராமே உயர் அதிகாரி..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் ஐந்து எழுத்து பெயர் கொண்ட உதவி பொறியாளர் ஒருத்தர் பணிபுரிந்து வந்தாரு.. இவரு, கடந்த ரெண்டு வாரங்களுக்கு முன்னால் பணியில் இருந்தபோது, லஞ்சம் வாங்கி குவித்து வைத்திருப்பதாக விஜிலென்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைச்சிருக்கு.. அவங்களும் மாலை நேரத்தில் திடீரென நுழைந்து சர்ப்ரைஸ் ரெய்டு நடத்திட்டாங்க.. அப்போது இவரது லேப்டாப் பேக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தாங்க.. இந்த பணம் எங்கிருந்து வந்தது, இதற்கு கணக்கு இருக்கிறதா என விஜிலென்ஸ் போலீசார் கேட்டபோது ஐந்து எழுத்து பெயர் கொண்டவரால் பதில் சொல்ல முடியவில்லையாம்.. பின்னர், மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் லஞ்சமாக கொடுத்த பணம் என்பதை அவரே ஒத்துக்கிட்டாராம்.. இதையடுத்து, இவர் மீது நடவடிக்கை எடுக்க விஜிலென்ஸ் போலீசார் மாநகராட்சி மண்டல உயரதிகாரி ஒருவருக்கு கடிதம் எழுதியிருக்காங்க.. ஆனால், அவர் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அந்த ஐந்து எழுத்து உதவி பொறியாளரை வேலூர் மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்து, பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டாராம்.. அவரும், எஸ்கேப்… கிரேட் எஸ்கேப்… என தப்பி ஓடி விட்டாராம்.. அப்போ, லஞ்ச பணம் என்னாச்சு.. என்பதுதான் ஒரே மர்மமாக இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிகாரி பணியிடம் காலியாக இருப்பதை பயன்படுத்தி மீட்புபடை வீரர் ஒருத்தர் ஒரு இடம் விடாமல் ஆய்வுக்கு சென்று நல்லா கல்லா கட்டுறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குயின் பேட்டை மாவட்டத்துல லிங்கர் என முடியுற மலை கோயில் அமைஞ்சிருக்குது.. அங்க தீய அணைக்குற நிலையத்துல நிலைய ஆபிசர் பணியிடம் காலியாக இருக்குது.. இந்த நிலையத்துல அலைகள் ஓய்வதே இல்லை என்கிற படத்தோட டைரக்டர் பெயரை வெச்சிருக்குற ஒருத்தரு மீட்பு படை வீரராக இருக்குறாராம்.. இவரு, நிலைய அலுவலர் பொறுப்பு காலியாக இருக்குறத பயன்படுத்திக்கிட்டு, நடந்து முடிஞ்ச சதுர்த்தி நாயகனுக்கான விழாவுல 40க்கும் மேற்பட்ட விழாக்குழுவினர் கிட்ட தலா 1 கே வரை வாங்கிட்டாராம், அதுமட்டுமில்லையாம்.. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் பள்ளிகள்னு போயிட்டு, தீ அணைக்குற கருவிகள் சரியாக இருக்குதா என்பதை ஆய்வு செஞ்சிட்டு இடத்துக்கு தகுந்த மாதிரி வாங்கிடுறாராம்.. இதனால சம்பந்தப்பட்ட மேலதிகாரிங்க, அந்த லிமிட் நிலையத்துல ஆய்வு செஞ்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்னு குரல் ஒலிக்க தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

அக்.27ல் தவெக மாநாடு: காவல்துறை அனுமதி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?