இலை தலைவருக்கு தெரியாமல் கொங்கு மண்டல முக்கிய நிர்வாகி டெல்டாவுக்கு மர்ம விசிட் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கொங்கு மண்டல முக்கிய நிர்வாகி டெல்டா ரகசிய விசிட் பற்றி விவரம் சேகரிக்க சேலத்துக்காரர் தனது டீமுக்கு அசைன்மென்ட் கொடுத்திருக்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கொங்கு மண்டலத்தை சேர்ந்த இலை கட்சியின் முக்கிய நிர்வாகியும், மாஜி அமைச்சருமான ஒருவர் சில தினங்களுக்கு முன்பு டெல்டாவுக்கு திடீரென விசிட் அடித்தாராம்.. இந்த விசிட் ெராம்பவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்துச்சாம்.. இது டெல்டாவில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவருக்கு மட்டும் முன்கூட்டியே தெரியுமாம்.. அவரும் மற்ற நிர்வாகிங்களுக்கு தெரிவிக்கவில்லையாம்.. இந்த நிலையில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த இலை கட்சியின் அந்த முக்கிய நிர்வாகி திடீரென வந்தாராம்… அவரை இலை கட்சியை சேர்ந்த குறிப்பிட்ட சில நிர்வாகிகள் மட்டும் சந்தித்து பேசினாங்களாம்.. கொங்கு மண்டலத்தை சேர்ந்த இலை கட்சியின் முக்கிய நிர்வாகி வந்து சென்ற தகவல், சேலத்துக்காரருக்கு கூட தெரியாதாம்.. டெல்டாவிற்கு வந்து சென்ற பிறகு தான் சேலத்துக்காரரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாம்.. கொங்கு முக்கிய நிர்வாகி யார், யாரை சந்தித்தார் என்பது உள்ளிட்ட விவரங்களை எடுக்க தனது டீமுக்கு சேலத்துக்காரர் அசைன்மென்ட் கொடுத்துள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நைட் டைம்ல கனிமத்த கடத்துறவங்கள பிடிக்கணும்னு குரல் ஒலிக்க தொடங்கியிருக்கிறதாமே எங்கேயாம்…’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல பால் ஆறு 50 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் ஓடுது.. பேருக்குத்தான் பால் ஆறு, அதுல தண்ணி இல்லை, இன்னும் கொஞ்ச நாள் போனா, இருக்க வேண்டிய கனிமமும் இருக்காதுன்னு பேசிக்கிறாங்க.. அதுக்கு காரணம், வெயிலூர்ல தொடங்கி, விரிஞ்சி என்று தொடங்குற ஏரியா, பள்ளி கொண்ட ஏரியான்னு நைட் டைம்ல பால் ஆறுல இருந்து கனிமத்தை கடத்துறாங்களாம்.. சில ஆபிசர்சும் இதுக்கு உடந்தையாக இருக்குறாங்களாம்.. பால் ஆறுதான் இப்படின்னா, ஏரியையும் விட்டு வைக்க மாட்டேங்குறாங்களாம்.. பள்ளி கொண்ட பகுதியில, பெரிய ஏரி இருக்குது.. இந்த ஏரியில 2 வருஷமா தண்ணீர் இல்லையாம்.. இதனால, சூளைக்காரங்க ரெவின்யூ உதவியோட களி மண்ணும், மறுபுறம் ஏரியில இருக்குற மண்ணையும் கடத்தி வர்றதா புகார் குரல் எழுந்திருக்குது. இதனால, வெயிலூர் பால் ஆற்றையும், அந்த ஏரியையும் சுரண்டி எடுக்குறதுக்குள்ள சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, கனிமத்தை கடத்துறவங்களை மடக்கி பிடிக்கணும், அதோட இந்த கடத்தல் ஏரியாவுல கேமராவை வெச்சி, காக்கிகள் ஆபிஸ்ல இருந்தே கண்காணிக்கலாம்னு விஷயம் தெரிஞ்சவங்க கருத்து சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகரத்துல இலைக்கட்சியில் இப்போ ஹாட் டாபிக்கா ஓடிக்கொண்டிருக்கிற பிரச்னைப்பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் மாவட்டத்தில் ஊர் என முடியும் ஊரில் எப்படியும் எம்எல்ஏ ஆகிவிட வேண்டுமென இலைக்கட்சியைச் சேர்ந்த அரசன் பெயரைக் கொண்டவர் பல ஆண்டுக்கு முன்பிருந்தே தீவிரமாக வேலை பார்த்து வந்தாரு.. ஆனால், அவருக்கு வேறொரு தொகுதியில் போட்டியிடத்தான் வாய்ப்பு கொடுத்தாங்க.. அவருக்கு பதிலாக இரட்டை பெயரைக் கொண்டவருக்கு ஊர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்துட்டாங்க.. அவரும் ஜெயித்து தற்போது எம்எல்ஏவாகிட்டாரு.. இதை கடந்த 3 ஆண்டாகவே, அரசன் தரப்பு ஏற்றுக்கொள்ள முடியாம புகைச்சலாகவே இருந்து வந்தது.. தற்போது ஊர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், அரசன் தன்னையே முன்னிலைப்படுத்திக் கொண்டு வருகிறாராம்.. முக்கிய கூட்டங்களுக்கு தனது பெயரில் பெரிய பிளக்ஸ் அடித்தும் ஊரெங்கும் வைக்குமாறு அடிப்பொடிகளிடம் கூறி வருகிறாரு.. இதனால் யார் எம்எல்ஏ என கேட்கும் அளவுக்கு சென்றுவிட்டதாக இலைக்கட்சி நிர்வாகிகளே பேசிக்கிறாங்க.. இது ஒருபுறமிருக்க, வரும் 2026ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் நான்தான் போட்டியிடுவேன், எனக்குத்தான் சீட் தரணும்னு தலைமையிடம் தொடர்ந்து அரசனானவர் பேசி வருகிறாராம்.. இத மனதில் வைத்துத்தான் தொகுதியில் நடக்கும் எந்த நிகழ்விலும், தன்னையும் ஒரு ஆக்டிங் எம்எல்ஏ போலவே காட்டிக் கொள்கிறாராம்… தூங்கா நகர் இலைக்கட்சி வட்டாரத்தில் இந்த பிரச்னைதான் இப்போ ஹாட் டாபிக்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முத்து, அல்வா மாவட்ட இலைக்கட்சி நிர்வாகிகள் இப்போதே கலக்கத்தில் இருக்கிறதா சொல்றாங்களே…’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் முடிந்த போதிலும், தேர்தலின் போது நடந்த உள்குத்து வேலைகள் தற்போது ஒவ்வொன்றாக வெளியே வந்துக்கிட்டு இருக்கு.. அதிலும் இலை கட்சியில் மக்களவைத் தேர்தலின் போது நிர்வாகிகள் பலர் வேலை செய்யாமல் ஒதுங்கி கொண்டாங்களாம்… குறிப்பா முத்து, அல்வா மாவட்டங்களில் இலை கட்சி வேட்பாளர்கள் போட்டிப் போட்டாங்க.. இந்த மாவட்டங்களில் சீட் நமக்கு கிடைக்கும்னு எதிர்பார்த்துக் கொண்டிருந்த பலரும், கூட்டணி சரியா அமையவில்லை என்பதால் தேர்தலில் போட்டிப் போடுவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டாங்க.. இதனால் வேறு வழியில்லாது சேலம்காரரும் புதிய வேட்பாளர்களை களத்தில் இறக்கிட்டாரு.. அதுவும் அல்வா தொகுதியில் முதல்ல அறிவிச்ச வெளியூர் வேட்பாளரை மாற்றி விட்டு, உள்ளூர் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்தாரு… எனினும் சீட்டை எதிர்பார்த்து முதலில் காத்திருந்தவர்கள், தேர்தலுக்கு கூட வேலை செய்யாமல் ஒதுங்கி விட்டாங்களாம்.. கட்சிக்கு பரீட்சை என்பது தேர்தல்தான். அந்த தேர்தலில்கூட ஒழுங்கா வேலை செய்யவில்லை என்றால் கட்சியில் இருந்து என்ன பிரயோஜனம்னு மாவட்ட செயலாளர்கள் சேலம்காரரிடம் தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து விட்டாங்களாம்.. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அவர்கள் பகுதிகளில் இலை கட்சி எவ்வளவு ஓட்டு வாங்கியிருக்கு என்பதை வைத்து அவர்களை களை எடுக்க சேலம் காரர் முடிவு செய்து இருக்கிறாராம்.. இதனால் இலைக்கட்சி நிர்வாகிங்க பலர் இப்போதே கலக்கத்தில இருக்கிறாங்களாம்..’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா.

Related posts

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்