பசையுள்ள பக்கமா பார்த்து தாவுற இலை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சாப்பாட்டு பில்லை, தானே கொடுத்தாராமே தேனிக்காரரு…’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் சேலத்துக்காரரு மண்ணிலேயே மாஸ் காட்டும் வகையில தேனிக்காரர் ஆலோசனை கூட்டத்துக்கு தனது படைசூழ வந்திருக்காரு. அவரை வரவேற்க சாரட் வண்டியோட தொண்டர்கள் காத்திருந்தாங்க… மீட்டிங்கை முடிச்சிக்கிட்டு சாப்பிடுவதற்கு சாதாரண ஓட்டல் பக்கம் தேனிக்காரரு போயிருக்காரு. ஆனா, அங்க இருக்க இடமில்லையாம். கிடைச்ச இடத்தில் அமர்ந்து சாப்பிடுங்கன்னு தன்னோட வந்த இருபது பேருக்கிட்ட சொல்லிக்கிட்டு அவரும் ஒரு இடத்துல அமர்ந்திருக்காரு. இதனால சாப்பிட வந்த பொதுமக்களுக்கு ெராம்பவே ேஹப்பியாம். எல்லோரும் சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்பும் நேரத்துல, சாப்பாட்டுக்கு யாரும் பில் கட்டலையாம். மாங்கனி மாவட்டத்துல ஐந்து மா.செ.க்கள் இருந்தும் பில் கவுன்டர் பக்கம் யாரையும் காணோமாம். இதனை தெரிந்து ெகாண்ட தேனிக்காரரு, அவரது சொந்த பணத்தில் ரைசுக்கான பில்லை கொடுத்துட்டு சிரித்துக் கொண்டே சென்றாராம். இதனைப்பார்த்த சக நிர்வாகிகள் ரொம்பவே ஷாக்காயிட்டாங்களாம். இதற்கு முக்கிய காரணம் மா.செ.க்களிடம் இருக்கும் மோதல் தானாம்.

தேனிக்காரரு பக்கம் யாரையும் விடக்கூடாது, தானே முன்னாடி நிக்கணுமுங்குற எண்ணத்தில் இருந்த மாவட்ட செயலாளரு தான் இதற்கு முக்கிய காரணமுன்னு நிர்வாகிகள் கொந்தளிப்புல இருக்காங்களாம். ‘‘நம்மூருக்கு வந்த தலைவரை நாமதான் உபசரித்திருக்க வேண்டும். ஆனா, அவர் எல்லோரையும் உபசரிச்சிட்டுபோயிட்டாரே’’ன்னு நிர்வாகிகள் கலங்கி நிக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சாமி வரம் கொடுத்தாலும்… பூசாரி தடுக்கிறார்…என்கிறார்களே..’’ என்று பீட்டர் மாமா கேட்டார்.
‘‘கோவை மாவட்டத்தில் 380-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஒட்டியவாறு `பார்’ நடத்தப்பட்டு வருகிறது. இந்த `பார்’ நடத்த தனியாருக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை டெண்டர் விடப்படுகிறது. தனியார்கள், டெண்டர் எடுத்த பிறகு, அதற்குரிய டெபாசிட் தொகையை அரசுக்கு செலுத்தி `பார்’ நடத்திக்கொள்ளலாம். இது விதிமுறை. இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால் `பார்’ நடத்துகிற இடம், தனி நபருக்கு சொந்தமானது என்றால், அந்த நபர், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு “தடையின்மை சான்று’’ வழங்கவேண்டும். அதாவது, எனது இடத்தில் `பார்’ நடத்திக்கொள்ள தடை ஏதும் இல்லை என அதில் குறிப்பிட வேண்டும். இப்படி இருக்கையில், கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக டாஸ்மாக் `பார்’ டெண்டர் எடுத்தவர்கள், அதை நடத்த முடியாமல் திக்குமுக்காடுகின்றனர். காரணம், தனிநபர்கள் பல பேர், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு இதுவரை “தடையின்மை சான்று’’ கொடுக்கவில்லை. காரணம், இவர்கள் எல்லோரும் இலைக்கட்சி பிரமுகர்களின் “பிடி’’யில் இருக்கிறார்கள். தடையின்மை சான்று கொடுக்காத காரணத்தால், புதிதாக `பார்’ டெண்டர் எடுத்தவர்களால், அதை நடத்த முடியாத நிலை உள்ளது. சுருக்கமாக சொன்னால், டாஸ்மாக் `பார்’கள் அனைத்தும் இன்னமும் இலைக்கட்சி பிரமுகர்கள் கையில்தான் உள்ளது. “சாமி வரம் கொடுத்தாலும்… பூசாரி தடுக்கிறாரே….?’’ என்ற நிலைதான் இம்மாவட்டத்தில் உள்ளது’’ என்று விவரித்தார் விக்கியானந்தா.

‘‘பசையுள்ள பக்கமா பாத்து தாவுற நிர்வாகிங்க பத்தி சொல்லுங்களேன்…’’
‘‘ஜெ மறைவுக்கு பின்னாடி இலை கட்சி பல பிரிவுகளாக பிரிஞ்சு போச்சு. இதுல சேலத்துக்காரர், தேனிக்காரர்னு 2 தலைமையில இலைகட்சி இருந்தது. இதுல ஒற்றை தலைமை தான் வேணும்னு 2 பேரோட ஆதரவாளர்களும் போர்க்கொடி தூக்குனாங்க. பல போராட்டத்துக்கு பின்னாடி சேலத்துக்காரர், தேனிக்காரரை கட்சியில இருந்து ஓரம்கட்டிட்டாரு. இதற்கிடையில நடந்த வழக்குல, கட்சி கொடியையும், சின்னத்தையும் யூஸ் பண்ண கூடாதுன்னு கோர்ட்ல சொல்லிட்டாங்க. இதனால தேனிக்காரர் பக்கம் ஒட்டிக்கிட்டிருந்த ஆதரவாளருங்க, பசையுள்ள பக்கம் இப்பவே போனா தான் நமக்கு நல்லதுன்னு, சேலத்துக்காரர் பக்கம் ஒட்டிக்கிறாங்களாம். இதுல சமீபத்துல குயின்பேட்டை மாவட்டத்துல தேனிக்காரர் அணி நிர்வாகிங்களான ஆறு காடான ஏரியா நகரத்தோட தலைவரு, செயலாளரு, பொருளாரு, மாநில பொதுக்குழு உறுப்பினரு, துணை, இணை செயலாளர், பிரதிநிதிகள்னு பல பேர் சேலத்துக்காரர் அணிக்கு தாவிட்டாங்க. இங்க மட்டுமில்ல, பல இடங்கள்ல இப்ப இதுதான் நடந்து வருதாம்..’’என்றார் விக்கியானந்தா.

‘‘தாவி வந்தவருக்கு பதவியான்னு கட்டபொம்மன் வசனம் பேசியிருக்காராமே நிர்வாகி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அண்மையில் மாற்று கட்சியில் இருந்து இலைகட்சிக்கு தாவிய கடைக்கோடி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு கட்சி தலைமை மாநில பொறுப்பு வழங்கி அழகு பார்த்துள்ளது. இதனை அறிந்து மன்னர் பெயர் கொண்ட முன்னாள் மா.செ சமூக வலைதளத்தில் பொரிந்து தள்ளியுள்ளார். கட்சிக்கு போராட்டம் நடத்தினாரா, தேர்தல் பணியாற்றினாரா என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் வசனம் போல் அல்லாமல் அதே ரீதியில் சூதானமாக பேசி புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் போதும் என்ற வகையில் குத்தல் பதிவிட்டு கட்சிக்குள் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். அண்மையில் தேனிக்காரர் அணியில் இருந்து சேலம் காரர் அணிக்கு தாவினாலும் கட்சிக்குள் தனக்கு இதுவரை பெரிய பொறுப்பு ஏதும் வழங்காமல் இருப்பதால் அண்ணன் அந்த வேதனையை வெளிப்படுத்தி வருகிறார் என்று கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குக்கர் தலைமையானவர் திடீரென சந்திக்க மறுத்ததால் அப்செட்டில் சொந்த ஊர் திரும்பிய நிர்வாகிகள் கதைய சொல்லுங்களேன்..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெல்டா மாவட்டத்தில் நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோரம், மன்னர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையானவரை நேரில் சந்திக்க அவ்வப்போது தலைமையிடத்துக்கு செல்வது வழக்கம். அப்படி தன்னை நேரில் சந்திக்க வரும் நிர்வாகிகளிடம் மாவட்டத்தில் உள்ள அரசியல் நிலவரம் குறித்து விசாரித்து அதற்கு ஏற்றார் போல் எப்படி அரசியல் செய்ய வேண்டும் என தலைமையானவர் தகவல் சொல்லி அனுப்புவது வழக்கமாம்.. ஆனால் கடந்த சில மாதங்களாக குக்கர் தலைமையானவரிடம் இருந்து மாவட்ட செயலாளர்களுக்கு எந்தவித ஒரு அழைப்பும் வரவில்லை. அழைப்பு வந்தால் தான் நேரில் தலைமையானவரை சந்திக்க செல்ல முடியும் என நினைத்த மாவட்ட செயலாளர்கள், அவரை போனில் தொடர்பு கொண்டும் அவர்களால் முடிய வில்லை. இதனால் கடும் அப்செட்டுக்குள்ளான தெற்கு மாவட்ட செயலாளரான கடைசி எழுத்தில் முடியக்கூடிய மணியானவர், முக்கிய நிர்வாகிகளுடன் சில தினங்களுக்கு முன் தலைமையிடத்துக்கு சென்றுள்ளார். ஆனால் தலைமையானவர் நிர்வாகிகளை சந்திக்க மறுத்து விட்டாராம்… . மாவட்ட செயலாளர்களுக்குள் அரசியல் பண்ணிக்கிட்டு கட்சி பணிகளை சரிவர கவனிப்பது கிடையாது. இங்கு வந்து எதையாவது உலறிவிட்டு செல்கின்றனர். இதனால் அவர்களால் எந்த பயணும் இல்லை. இவர்களால் தான் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என தனது உதவியாளர் மூலம் சொல்லி நிர்வாகிகளை அனுப்பி வைத்து விட்டார். இதனால் கடும் அப்செட்டான நிர்வாகிகள் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு ஊர் திரும்பினார்களாம்’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி..!!

சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கி கொண்டிருக்கிறார் : எடப்பாடி பழனிசாமி