15 எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றாக சேர்ந்ததால் பாஜவுக்கு பயம்வந்துவிட்டது: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு

அம்பத்தூர்: 15 எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றாக சேர்ந்ததால் பாஜவுக்கு பயம்வந்துவிட்டது என அம்பத்தூரில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில், டி.ஆர்.பாலு எம்பி கூறியுள்ளார். அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா கொரட்டூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அம்பத்தூர் கிழக்குப்பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி, திரைப்பட நடிகர் நாசர், நக்கீரன் வார இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால், பேராசிரியர் அருணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதையடுத்து டி.ஆர்.பாலு எம்பி பேசியதாவது: இன்றைக்கு நாட்டிலே நடக்கக்கூடிய பல்வேறு அரசியல் அனைத்தும் உங்களுக்கு தெரியும். பிரதமர் மோடி வெளிநாடு பயணம் சென்றார். அங்கு 30க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இங்கு வந்து விமானத்தின் இன்ஜின் தயாரிக்கும் கம்பெனி யுடன் ஒப்பந்தம் செய்கிறார். இதெல்லாம் மிக அவசரமான காரியமா என்றால், நிச்சயமாக இல்லை. இதை அனைத்தையும்விட நாட்டில் இருந்து கவனிக்கவேண்டிய மிகமிக முக்கியமான பிரச்னைகள் எல்லாம் இருக்கிறது. குறிப்பாக, மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கே சரியில்லை. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுகிறார்,
மந்திரி வீட்டுக்கே பாதுகாப்பு கிடையாது.

தலித் மற்றும் மலைவாழ் மக்கள், வீடு இல்லாத மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். அங்கு என்ன நடக்கிறது, கோர்ட் என்ன செய்கிறது இதுபோன்ற மோசமான நிகழ்வு நடந்துகொண்டிருக்கையில் நாட்டின் பிரதமர் ஒரு வார்த்தைகூட அதுபற்றி கூறவில்லை. இது ஜனநாயகமா என்ற கேள்வி எழுகிறது. 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தபோது உள்துறை அமைச்சர், இதுவெறும் புகைப்படத்திற்காக மட்டும்தான் என கிண்டல் செய்தார். எந்தளவு தைரியம் இருந்தால் இப்படி பேசுவார்.

நாவடக்கம் தேவை. 15 எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றாக சேர்ந்ததால் பாஜகவுக்கு பயம் வந்துவிட்டது. 50 ஆண்டு ஒரு கட்சிக்கு தலைவனாக இருந்த ஒருவர் கலைஞர்தான். நாடாளுமன்ற தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரும் என நினைக்கவேண்டாம். முன்கூட்டியே டிசம்பர் மாதத்தில்கூட தேர்தல் வைக்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். நிகழ்ச்சியில், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப்சாமுவேல், மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, பகுதி செயலாளர் டி.எஸ்.பி.ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை.. அவர்களை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி: காவல் ஆணையர் அருண் பேட்டி!!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்