தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி காலை உணவு திட்ட பணியை உளப்பூர்வமாக செய்ய வேண்டும்

*பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

பட்டுக்கோட்டை : முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணி உளப்பூர்வமாக செய்ய வேண்டியது என்பதால் தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள 16 நகராட்சி பள்ளிகளுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள 14 நகராட்சி பள்ளி, 1 ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 1 அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆக மொத்தம் 16 பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக்கூடிய 1,564 மாணவர்களுக்கு இன்று முதல்முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு சம்பந்தப்பட்ட 16 நகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் குமரன் தலைமை வகித்தார். பொறியாளர் குமார், சுகாதார அலுவலர் நெடுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகராட்சி ஆணையர் குமரன் பேசுகையில், இந்த பணி உளப்பூர்வமாக செய்ய வேண்டிய பணி என்பதால் தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் மேற்கொள்ள வேண்டும். மேலும் உணவு தயார் செய்தல், அனுப்புதல், பரிமாறுதல் மற்றும் உணவு சாப்பிட்ட மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கை அனுப்புதல் போன்றவற்றிற்கு அரசு நிர்ணயம் செய்த கால அளவில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அதற்குரிய செயலியில் தினசரி பதிவேற்றம் செய்ய வேண்டும். உணவின் தரம் குறித்து நகராட்சி அதிகாரிகள் தினசரி ஆய்வு செய்த பிறகே மாணவர்களுக்கு காலை வழங்கப்பட உள்ளது என்றார்.

கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் அறிவழகன், ஆரோக்கியசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 1,564 பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு சாப்பிட தட்டு மற்றும் டம்ளர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்பு கருதி மூடிய வாகனத்தில் காலை உணவை எடுத்துச் செல்ல சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு