ஈயம், பித்தளை வியாபாரியின் புலம்பல் குக்கர ஓசியில கொடுத்துட்டு காசு வாங்காம போறாங்கப்பா… டிடிவியை கேலி செய்யும் வீடியோ வைரல்

தேனி: ஈயம், பித்தளை வியாபாரிக்கு பொதுமக்கள் குக்கரை ஓசியாக கொடுப்பது போல டிடிவி.தினகரனை கிண்டலடிக்கும் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன், அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜ கூட்டணி சார்பில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்பட 25 பேர் போட்டியிட்டனர். இதில் தங்கதமிழ்செல்வனுக்கும், டிடிவி.தினகரனுக்கும் இடையேதான் போட்டி நிலவியது. பிரசாரத்தின்போது டிடிவி.தினகரன், தனக்கு யாரும் போட்டி இல்லை என பில்டப் காட்டி வந்தார். தொகுதி முழுவதும் அமமுக சின்னமான குக்கரை அவரது ஆதரவாளர்கள் கையில் ஏந்தியபடி வாக்கு சேகரித்து வந்தனர்.

டிடிவி.தினகரனை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என பாஜவினரும், அமமுகவினரும் கூறி வந்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் 2 லட்சத்து 78 ஆயிரத்து 825 வாக்கு வித்தியாசத்தில் டிடிவி.தினகரனை தோற்கடித்தார். இது பாஜ, அமமுக கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அமமுகவினரை கேலி செய்யும் வகையில், தேனி மக்களவை தொகுதி முழுவதும் வாட்ஸ்அப் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், பழைய பொருட்களை வாங்கும் வியாபாரி ஒருவர் சைக்கிளில், பழைய ஈயம், பித்தளைக்கு பேரீச்சம்பழம் என கூறிக் கொண்டே வரும்போது, ‘‘காலை முதல் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் குக்கர்களை பணம் வாங்காமலே இலவசமாக கொடுத்துட்டு போறாங்கப்பா…’’ என்கிறார். அப்போது 2 பேர் வந்து தங்களது குக்கர்களை அவரிடம் கொடுத்து விட்டு, பணம் எதுவும் வாங்காமல் செல்கின்றனர். டிடிவி.தினகரனை தேனி தொகுதி மக்கள் புறக்கணித்ததை சிம்பாலிக்காக காட்டும் இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

சிவில் இன்ஜினியரை தாக்கிய பா.ம.க. நிர்வாகிக்கு வலை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1038 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு 1,518 கன அடியாக குறைப்பு