வக்கீல் மண்டையை உடைத்த அதிமுக ஊராட்சி தலைவர் கைது

மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் பேருந்து நிலையம் அருகே உலகநாத சுவாமிகள் மடத்திற்கு சொந்தமாக வணிக வளாகம் உள்ளது. இதன் பொறுப்பாளர் வக்கீல் விஜயபாரதி. இந்த வணிக வளாகத்தில் மேலூரை அடுத்த பூஞ்சுத்தியின் ஊராட்சி தலைவரான அதிமுகவை சேர்ந்த ராமநாதன் கடை நடத்தி வருகிறார். அவர், பல ஆண்டுகளாக கடைக்கு வாடகை செலுத்தாமல் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் கடையை காலி செய்யும்படி கூறியும் அவர் கேட்கவில்லை.

இதையடுத்து மடத்திற்கு சொந்தமான கடையை அவர் காலி செய்ய உத்தரவிடக்கோரி, வக்கீல் விஜயபாரதி மேலூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதற்கிடையே வக்கீல் தரப்பில் ராமநாதன் நடத்திய கடையை பூட்டியதுடன், அதற்கான மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் கடையை அவர் மீண்டும் திறக்க முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பும் மேலூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றனர். அங்கு மீண்டும் அவர்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதில், வக்கீல் விஜயபாரதிக்கு தலையிலும், அவரது சகோதரர் விக்ரமுக்கு கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வக்கீல் விஜயபாரதி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில், அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன், அவரது நண்பர் முருகன் ஆகியோரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.

Related posts

வங்கதேசத்திற்கு எதிரான தொடர்; இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார்?.. குழப்பத்தில் ரசிகர்கள்

செப்.20ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு

இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி: ஒன்றிய அரசு தகவல்