சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்

செங்கல்பட்டு: மத்திய அரசு இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிய சட்டம் என மூன்று சட்டங்களின் பெயரை மாற்றி வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் இந்தி கலந்த சமஸ்கிரத மொழியில் மாற்றம் செய்ய உள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், மத்திய அரசை கண்டித்து நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆனந்தீஸ்வரன், செயலாளர் குமரேசன், பொருளாளர் மதியழகன், மண்டல செயலாளர்கள் பழனிசாமி, சொக்கலிங்கம், சோமசுந்தரம் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டனர். அப்போது, 3 சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்க தனி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர். இதில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திரமேரூர்:

உத்திரமேரூரில் உள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். இதில், ஒன்றிய அரசின் 3 சட்ட திருத்தங்களை எதிர்த்தும், அந்த சட்டங்களில் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில் பெயர் மாற்றம் செய்ததை எதிர்த்தும் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நூற்றாண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் உள்ளிட்ட 3 பிரதான சட்டங்களின் பெயர்கள் இந்தி, சமஸ்கிருத மொழியில் மாற்றப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில், 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி