லவா ஆற்றில் குடிநீர் திட்ட பணிகள் மீண்டும் தொடக்கம்: கலெக்டர் பேச்சுவார்தையால் சமரசம்

பள்ளிப்பட்டு: கலெக்டர் மக்கள் பிரதிநிதிகளுடன் நடத்திய சமரச பேச்சுவார்த்தையால் சுமூக முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து லவா ஆற்றில் குடிநீர் திட்டப் பணிகளை மீண்டும் தொடக்க உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளிகரம் பகுதியில் லவா ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியாம் சார்பில் செருக்கனூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ₹45 கோடி மதிப்பீட்டில் 6 நீர் உறிஞ்சி கிணறுகள் அமைக்கப்பட்டன.

இங்கு தினமும் 2.25 மில்லியன் லீட்டர் குடிநீர் சேமித்து பைப் லைன்கள் மூலம் ஆர்.கே.பேட்டை, திருத்தணி ஒன்றியங்களில் உள்ள 9 கிராம ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இருப்பினும் லவா ஆற்றில் கிணறுகள் அமைத்து குடிநீர் எடுக்க பள்ளிப்பட்டு, வெளிகரம், திருமலைராஜ்பேட்டை, ராமச்சந்திராபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 6 மாதங்களாக பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், திருத்தணி கோட்டாட்சியர் தீபா தலைமையில் கிராம மக்கள் பிரதிநிதிகளுடன் 2 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று கலெக்டர் பிரபு சங்கர் பள்ளிப்பட்டு லவா ஆற்றில் நீர் உறிஞ்சி கிணறுகள் அமைய உள்ள பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்து மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆற்றில் கிணறுகள் அமைத்து குடிநீர் சேமித்து அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கு விநியோகம் செய்வதால், ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காது. விவசாயம் பாதிப்பு ஏற்படாது என்று அறிவியல் ரீதியான விவரங்களை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி கிராம மக்களுக்கு நம்பிக்கை ஏற்ப்படுத்தினார். இதனையடுத்து கிராமமக்கள் ஆற்றில் கிணறுகள் அமைத்து குடிநீரை மற்ற பகுதிகளுக்கு வழங்க சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வரும் திங்கட்கிழமை முதல் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை தொடங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது திருத்தணி கோட்டாட்சியர் தீபா, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அமலதீபன், உதவி நிர்வாக பொறியாளர் ஜெயசுதா, உதவி பொறியாளர் சம்பத்குமார், வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related posts

அதிமுக பகுதி செயலாளர் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை