குரல்வளை நெரிப்பு

அகில இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸ் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டிருப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அரசின் வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் காங்கிரஸ் கட்சியின் தலையில் இடியை இறக்கும் வகையில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி, மாணவர் அணி ஆகியவற்றின் வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளனர். 210 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ‘கிரவுட் பண்டிங்’ முறையில் பெறப்பட்ட நிதியையும் முடக்கிவிட்டனர்.

தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியிருப்பது ஜனநாயகத்தை முடக்கும் செயல் என அக்கட்சியின் தேசிய பொருளாளர் அஜய் மக்கான் கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சி, தனது 135-வது ஆண்டை கொண்டாடி வருவதால், கட்சியினர் மற்றும் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பலனாக 10 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி கிடைத்துள்ளது. இதுவும் தற்போது வருமான வரித்துறை நடவடிக்கையால் முடங்கிவிட்டது. இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தால், 2018-19ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் கட்சி 45 நாட்கள் கூடுதலாக எடுத்துக்கொண்டது.

இதை சுட்டிக்காட்டி வங்கி கணக்குகளை முடக்கியது மட்டுமின்றி, அபராதமும் விதித்துள்ளனர். இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் வங்கி கணக்குகளை முடக்கி, உரிய பணிகளை மேற்கொள்ள முடியாமல் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. “தேர்தலில் காங்கிரஸ் கட்சியை செயல்பட விடக்கூடாது என்ற எண்ணத்தில் இப்படி செய்துள்ளனர். பாஜவினருக்கு ராகுல்காந்தியின் பாத யாத்திரை, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

இனி, வடஇந்தியாவிலும் தலைதூக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுவதால், வங்கி கணக்கு முடக்கம் போன்ற மூன்றாம் தர வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதை, சுதந்திர இந்தியாவில் எங்குமே கேட்டதில்லை’’ என குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையில், மத்திய வரி தீர்ப்பாயம் முன் காங்கிரஸ் ஆஜரானது. இதையடுத்து முடக்கப்பட்ட வங்கி கணக்கை இயக்க காங்கிரசுக்கு அனுமதிக்கப்பட்டது. எனினும் வேறு எந்த கட்சியுமே வளரக்கூடாது என்ற நோக்கில் இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடும் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனம் வலுத்து வருகிறது.

கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், மிக மோசமான தோல்வியை சந்தித்த காங்கிரஸ், இம்முறை மூன்று இலக்கத்தில் தொகுதிகளை வெல்ல வேண்டும் என கடும் வேகத்தில் களத்தில் இறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த வியூகத்துக்கு, எதிர்க்கட்சிகளின் “இந்தியா கூட்டணி’’ கைகொடுத்து வருகிறது. இதை தாங்கிக்கொள்ள முடியாமல், பாஜ, தனது சித்துவேலையை துவக்கியுள்ளது. வங்கி கணக்கு முடக்கம் என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு சமம் ஆகும். பாஜவின் இந்த ஜனநாயக விரோத செயல், அக்கட்சியின் மீதே மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கியுள்ளது. அதேநேரம், காங்கிரஸ் கட்சி மீதான மக்களின் அனுதாபம் இன்னும் அதிகரித்துள்ளது. தன் கையை தானே சுட்டுக்கொண்ட கதைபோல், பாஜவின் நிலைமை உள்ளது.

Related posts

ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனுத் தாக்கல்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரம்

இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : அதிகாரிகள் ஆய்வு!!