கோயிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது லாரி மீது டெம்போ மோதல்; 13 பேர் நசுங்கி பலி: கர்நாடகாவில் பயங்கரம்


பெங்களூரு: கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற கோயிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த லாரி மீது டெம்போ வாகனம் மோதியது. இதில் 13 பேர் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடகாவில் நேற்று அதிகாலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா எம்.மே.ஹட்டி கிராமத்தை சேர்ந்த 15 பேர், கல்புர்கி மாவட்டம் சிஞ்சோளி தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு டெம்போ வாகனத்தில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் ஹாவேரி மாவட்டம், பேடகி தாலுகா குண்டனஹள்ளி கிராமத்தின் அருகே பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது டெம்போ மோதி நொறுங்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் அலறி துடித்தனர். 13 பேர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இவர்களில் ஒரு சிறுவன், சிறுமி மற்றும் 7 பெண்கள், 4 ஆண்கள் அடங்குவர். மற்றவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். தகவலறிந்து பேடகி ஊரக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஹாவேரி மாவட்ட எஸ்பி அன்சுகுமாரும் விரைந்தார். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக பேடகி தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த 2 பேரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பேடகி ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

Related posts

வீட்டு வாசலில் தூங்கிய 70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: 20 வயது ஆட்டோ ஓட்டுனர் கைது

ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம்: எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 700 போதை மாத்திரைகள் பறிமுதல்