தொடர் கனமழை: மூணாறில் மண் சரிவு; பொதுமக்கள் பீதி


மூணாறு: மூணாறு அருகே கனமழையால் ஏற்பட்ட மண் சரிவால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தென்மேற்கு பருவமழை தற்போது சில தினங்களாக கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பரவலாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மூணாறு அருகே வட்டவடை, கொட்டாகம்பூர், பழத்தோட்டம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் வட்டவடை – கொட்டாகம்பூர் சாலையில் சில பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. சாலை அருகில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் விவசாய நிலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழையால் பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வரும் மண்சரிவால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வட்டவடை மற்றும் காந்தளூருக்கு இடையில் நேற்று பெய்த கனமழையில் சாலை முற்றிலும் சேதமடைந்ததால் கூடலார் குடியில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர். மேலும் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவாசல் அருகே உள்ள 2ம் மைல் பகுதியில் பெரிய மரம் சரிந்து சாலையில் விழுந்ததில், அந்த வழியாக காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை