நிலச்சரிவு பலி எண்ணிக்கை 410ஆக உயர்வு; அபாயகரமான பள்ளத்தாக்கில் உடல்களைத் தேடும் பணி தீவிரம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்து உள்ளது. இன்று 8வது நாளாக உடல்களைத் தேடும் பணி தொடங்கியது. இதுவரை செல்ல முடியாத அபாயகரமான சூஜிப்பாறை சன்ரைஸ் பள்ளத்தாக்கில் இன்று ராணுவம், வனத்துறை உள்பட மீட்புப் படையினர் ஹெலிகாப்டரில் சென்று உடல்களைத் தேடிவருகின்றனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் 8 நாள் ஆகிறது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு வீரர்கள், வனத்துறை, உள்ளூர் மக்கள் என்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெயில், மழை ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் பெரும் சிரமங்களுக்கு இடையே இந்தப் பகுதிகளில் தினமும் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன. இதுவரை கிடைத்த உடல்களின் எண்ணிக்கை 410ஐ தாண்டி விட்டது. 200க்கும் மேற்பட்ட உடல்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து சுமார் 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்து தான் மீட்கப்பட்டன. அடையாளம் காணப்படாத 37 உடல்கள், 158 உடல் பாகங்கள் அந்த பகுதியில் உள்ள புத்துமலையில் சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கிய இன்னும் 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களது உடல்களைத் தேடும் பணி இன்று காலை மீண்டும் தொடங்கியது. ராணுவம், வனத்துறை, தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல்களைத் தேடி வருகின்றனர். ட்ரோன்கள், ரேடார்களும் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

நிலச்சரிவின் தொடக்கப் பகுதியான புஞ்சிரிமட்டம் மலைப்பகுதியில் இருந்து உருவாகும் ஆறு சூரல்மலை, முண்டக்கை, அட்டமலை பகுதிகளைத் தாண்டி சாலியார் ஆற்றில் கலக்கிறது. இந்த ஆறு செல்லும் வழியில் சூஜிப்பாறை என்ற இடத்தில் 3 அருவிகள் உள்ளன. இந்தப் பகுதியில் சன் ரைஸ் பள்ளத்தாக்கு உள்ளது. இது மிகவும் ஆபத்தான பகுதியாகும். அங்கு எளிதில் செல்ல முடியாது.

இந்த இடத்தில் உடல்கள் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுவதால் அந்தப் பகுதியில் இன்று தேடுதல் வேட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அங்கு நடந்து செல்ல முடியாது என்பதால் விமானப்படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்தி தேட முடிவு செய்யப்பட்டது. அதன்படி 6 ராணுவ வீரர்கள், 2 வனத்துறையினர் உள்பட 12 பேர் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அவற்றை வேறு ஒரு ஹெலிகாப்டரில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு