திருவள்ளூர் அருகே நடைபெற்றும் நில அளவைப் பயிற்சி முகாம்: இயக்குனர் மதுசூதன ரெட்டி திடீர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூரில் நடைபெறும் நில அளவிப் பயிற்சி முகாமை இயக்குனர் மதுசூதன ரெட்டி ஆய்வுசெய்தார். திருவள்ளூர் அடுத்த கொழுந்தலூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 98 நில அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை சார்பாக 90 நாட்களுக்கு நடைபெறவுள்ள நில அளவைப்பயிற்சி கடந்த 22 ந் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய நில அளவையர்களை ஒன்றிணைத்து ஒரே இடத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து 19-வது நாளான நேற்று நடைபெற்ற பயிற்சி முகாமில் நில அளவை மற்றும் நிலவரி திட்டப்பணிகள் இயக்குனர் மதுசூதன ரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டு பயிற்சிபெற வந்தவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது பேசிய நிலவரி திட்டப்பணிகள் இயக்குனர் மதுசூதன ரெட்டி, கடந்த 19 நாட்களில் என்னென்ன கற்றுக் கொண்டீர்கள். அதில் நீங்கள் படித்த படிப்பிற்கும் இந்த பயிற்சிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், 12-ம் வகுப்பு தேர்ச்சியே இந்த பணிக்கு போதுமானதாக இருந்த நிலையில் தற்போது ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் மட்டுமல்லாது பொறியியல் படித்தவர்களும் இந்த பணிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இந்த பயிற்சி வகுப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். துரிதமாக செயல்பட வேண்டும், பொது மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கல் பதிப்பது, எல்லைகளை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். உங்களிடம் வரும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் எந்த விதத்தில் உதவ முடியும் என்பதை மனதில் வைத்து அவரை சரியான முறையில் வழிநடத்தி குறுகிய நேரத்தில் விண்ணப்பதாரரின் விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணிக்கு தேர்வு ஆவதற்கு முன்பாகவே சிலர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கலாம்.

அப்போது அவர்களுக்கு குறைந்த சம்பளம் வேலை அதிகமாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அரசுத்துறையில் வேலை பெற்றவர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் அரசு வழங்க உள்ளது. இதை கவனத்தில் கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பொது மக்களின் மனுக்கள் மீது துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், நில அளவைத்துறை கூடுதல் இயக்குனர் கண்ணபிரான், மண்டன துணை இயக்குனர் செ.ராமச்சந்திரன், உதவி இயக்குனர் எம்.ஆர்.குமாரவேல் மற்றும் நில அளவைத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

திருச்சியில் மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு