ரூ.100 கோடி நில அபகரிப்பில் தொடர்ந்து தலைமறைவு அதிமுக மாஜி அமைச்சர் முன்ஜாமீன் கேட்டு மீண்டும் மனு: இன்று விசாரணைக்கு வருகிறது

கரூர்: ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 2வது முறையாக இடைக்கால முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனது ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி, மகளை மிரட்டி, மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக அளித்த புகார் மீதான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு கடந்த ஜூன் 25ம்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் உட்பட 3 பேர் மீது, வாங்கல் போலீசார் கொலை மிரட்டல், மோசடி செய்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் நேற்றுமுன்தினம் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறை வாக உள்ள விஜயபாஸ்கர் தரப்பில் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் மாலை மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதில், தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால், அவரை உடனிருந்து கவனித்து கொள்ள வேண்டியிருப்பதால் இடைக்கால முன்ஜாமீன் வழங்கும்படி கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று காலை நீதிபதி சண்முகசுந்தரம் முன்பு வந்தது. பின்னர் விசாரணையை இன்றைக்கு (3ம்தேதி) ஒத்தி வைத்து அவர் உத்தரவிட்டுள்ளார். ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்வதற்காக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில், அவர் மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts

மம்தாவுக்கு எதிராக ஆளுநர் அவதூறு வழக்கு: 10ம் தேதி விசாரணை

மகாராஷ்டிராவில் அங்கன்வாடியில் குழந்தைக்கு கொடுத்த உணவில் பாம்பு

டேட்டிங் செல்லும் மைனர் சிறுவர்களை கைது செய்யக்கூடாது: மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்